2050ஆம் ஆண்டில் உலக மொத்த மக்கள்தொகையில் 68 சதவீதத் தினர் நகரங்களில் வசிப்பார்கள் என்றும் 2100ஆம் ஆண்டில் இது 80 சதவீதமாக உயரும் என்றும் ஐக்கிய நாடுகள் அவை கணித்துள்ளது. உலகின் முக்கிய வர்த்தக மையங்களாகவும், மக்கள்தொகை அடர்த்தி அதிகமுள்ள கடலோர பகுதிகளாகவும் இருப்பவை நகரங்கள்தாம். ஆனால், நகரங்களின் சூழலியல் பிரச்சினைகள் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.
சூழலியல் என்றாலே காடுகள், நீர்நிலைகள், கடலோர பகுதிகள் போன்ற பசுமைசார் இடங்களே நினைவுக்கு வருகின்றன. ஆனால், நகரங்களில்தான் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள் எனும்போது, அங்கே மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு எப்படி இயங்குகிறது என்பதும் பேசப்பட வேண்டும். நகரம்சார் சூழலியல் (Urban Ecology) என்கிற கருத்தாக்கம் அதை முன்னிறுத்துகிறது. 1970களில் இது தனி அறிவியல் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டது. இயற்கையையும் மனிதனையும் தனித்தனியாகப் பார்த்து, நகரங்களுக்கும் இயற்கைக்கும் தொடர் பில்லை என்று கூறும் மேல்நாட்டுக் கருத்தியல்களை நிராகரித்துவிட்டு, மனிதர்கள் வாழும் எல்லா இடங்களிலும் இயற்கைக்கும் மனிதக் குலத்துக்கும் இடையிலான உறவை ஆராய்வதற்கு இந்தக் கருத்தாக்கம் வழிவகுக்கிறது.
நகரம்சார் சூழலியல்
“சூழலியலாளர்கள் நகரங்களைக் கண்டு கொள்வதில்லை. நகரங்களை உருவாக்கி மேலாண்மை செய்பவர்களோ, இயற்கைப் பிரச்சினைகளைக் கடந்து போய்விடு கிறார்கள். நகரம்சார் சூழலியல் பரவலான பிறகு இந்தப் போக்கு ஓரளவுக்கு மாறிவருகிறது” என்கிறார் அறிவியலாளர் ஹரிணி நாகேந்திரா. வீடுகளுக்கே தண்ணீர் தரும் குடிநீர்க் குழாய்த் திட்டங்கள் வந்தபின்பு, பெங்களூருவின் நீராதாரங்களாக இருந்த ஏரிகளும் குளங்களும் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை ‘இயற்கையும் நகரமும்’ (Nature and the city) நூலில் அவர் விரிவாக எழுதியுள்ளார்.
நகரங்களில் மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு நுணுக்கமானதாக இருக்கிறது. தொழில்சார் வளர்ச்சியை முன்னிறுத்துகிற சமூக அமைப்பில், இயற்கை என்பது மூலப்பொருள்களின் ஆதாரமாகவும் குப்பைத்தொட்டியாகவும் மட்டுமே அணுகப்படுகிறது. தருகிற இடத்தில் இயற்கையும், பெறுகிற இடத்தில் மனித இனமும் வைக்கப்படுகின்றன.
பூங்காக்களில் நடைபயிலும்போதும் நகரவாசிகள் இயற்கையை நுகர்பொருளாகவே பார்க்கிறார்கள். தண்ணீர், நிலம், திடக்கழிவு, சூழலியல்சார் சேவைகள் என்று இயற்கையின் கூறுகள் பலவும் சிறிது சிறிதாகப் பண்டமாக்கப்படுகின்றன. இவை எப்படி இயங்குகின்றன என்பதை நகரம்சார் சூழலியல் ஆராய்கிறது.
அரசியல் சூழலியல்
இதன் அடுத்த நிலை நகரம்சார் அரசியல் சூழலியல் (Urban Political Ecology) என்கிற கருத்தாக்கம். மார்க்சியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, நகரமயமாதலின் காரணிகள், நகரங்களின் வரலாறு, இயக்கவியல் ஆகியவற்றை இது ஆராய்கிறது. ஒரு நகரம் உருவாகி இயங்குவதன் பின்னணியில் உள்ள அரசியல், பொருளாதார, சமூக, சூழலியல் காரணிகளைச் சரியாகப் புரிந்துகொண்டால், நகரத்து நிலப்பகுதி களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சூழலியல்சார் சமூகநீதியை நிலைநாட்டலாம் என்கிறது இந்தக் கருத்தாக்கம்.
நகரம்சார் அரசியல் சூழலியல் தளங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு, பூர்வ குடிகளை அப்புறப்படுத்தப்படுதல், காற்று மாசு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சமூக அநீதி ஆகியவை பரவலாக விவாதிக்கப்படு கின்றன. நகர்ப்புறக் காற்று என்பதே ஒரு சூழலியல் அரசியல் கூறுதான். சமீபகாலமாக உலகின் பெருநகரங்களில் காற்று மாசு அதீதமாக இருப்பதைச் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கடலோர நகரங்களைப் பொறுத்தவரை, காலநிலை ஆபத்துகள் அதிகம். அவை நகரத்தின் சமூக அமைப்புகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று தெரிந்தால், பாதிப்பு இல்லாத பிற பகுதிகளுக்குச் செல்லும் செல்வந்தர்கள், அங்கே உள்ள நிலத்தை அதிக விலைக்கு வாங்கி, மற்றவர்களை அப்புறப்படுத்தும் போக்கும் அதிகரித்துவருகிறது. இது Climate gentrification என்று அழைக்கப்படுகிறது.
பசுமை நீதி
நகரங்களில் உள்ள காற்றோட்டமான, மரங்கள் நிறைந்த பகுதிகள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கே வசிக்கக் கிடைக்கின்றன என்பதும் ஒரு முக்கிய விவாதப் புள்ளி. நகரங்களில் அதிக வெப்பநிலை கொண்ட வெப்பத்தீவுகள், சமூக-பொருளாதார அடுக்கில் கீழே இருப்பவர்கள் வசிக்கும் இடங்களாகவே இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். சமூக - பொருளாதாரக் கூறுகளின் வரைபடத்தோடு, சூழலியல்சார் பிரச்சினைகளின் வரைபடத்தைப் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சிகள் வரத்தொடங்கியிருக்கின்றன. நகரங்களில் புரையோடிப்போயிருக்கும் சூழலியல் அநீதியை இவை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
நகரமயமாக்கல் பெருகிக்கொண்டே போகிறது, இது தொடர்ந்தால் ஹோமோ சேப்பியன்ஸான மனித இனம் Homo urbanus என்று அழைக்கப்படும் அளவுக்கு நகரவாழ்க்கைக்கு மட்டுமே பொருந்துவதாக மாறி விடும். நகரங்களின் பிரச்சினைகளும் பேசப்பட்டால் மட்டுமே சூழலியல் பாதுகாப்பு முழுமை யடையும். உலக அளவில் சூழலியல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துவருவதால், பசுமை நகரமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எல்லாப் பெருநகரங்களும் போட்டிப் போடுகின்றன. பூங்காக்கள், திடக்கழிவு மேலாண்மை, மரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றுடன் மட்டும் இது நின்றுவிடாமல், பசுமை நகரங்களில் சூழல் நீதியும் பேணப்பட வேண்டும் என்பதே செயற்பாட்டாளர்களின் வலியுறுத்தல்.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago