புலிகளின் நடமாட்டம்: வன ஆரோக்கியத்தின் குறியீடு

By செய்திப்பிரிவு

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு காலைப் பொழுதில், நானும் சங்கேத் என்பவரும் நீலகிரி வரையாடுகள் வாழிடம் தொடர்பான களப் பணிக்கு போளுவாம்பட்டி பள்ளத்தாக்கு வழியாக சிறுவாணி புல்மேடு பகுதிக்குச் சென்றிருந்தோம். கோயம்புத்தூர் நகரத்தின் நெரிசலிலிருந்து விடுபட்டு, சிறிய கிராமங்களையும், நீரோடைகளையும் கடந்து, மூங்கில் புதர்கள் நிறைந்த வனப்பகுதியை அடைந்தோம்.

அழகிய காடு

போளுவாம்பட்டி பள்ளத்தாக்கு, மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே, 95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு அழகிய பகுதி. வடக்கே வெள்ளியங்கிரி மலைத்தொடரும், தெற்கே சிறுவாணி மலைகளும் சூழ, நொய்யல் ஆறு உருவெடுக்கும் பகுதியும் ஆகும்.

மலையடிவாரத்தில் முட்புதர்க் காடுகளும், இலையுதிர்க் காடுகளும் மட்டுமல்லாது மலை உச்சியில் சோலை புல்வெளி காடுகள் எனப் பலவகையான தாவரங்கள் மற்றும் பல்லுயிர்ச் சூழல் நிறைந்தது போளுவாம்பட்டி. கேரள மாநிலத்தின் மன்னார்க்காடு வனக்கோட்டத்தின் எல்லையான தென்மேற்குப் பகுதியில், நீலகிரி வரையாடுகளும் இங்கே காணப்படுகின்றன.

நாங்கள் வன சோதனைச் சாவடியைக் கடந்து சென்றபோது, யானை நடமாட்டத்திற்கான அறிகுறிகளைக் கண்டோம். சாலையெங்கும் யானைக் கழிவும், அவை பறித்துத் தின்ற புற்கள் மற்றும் மரக் கொப்புகள் சிதறிக்கிடந்தன. பலவிதப் பறவைகள், மரக்கிளைகளுக்கு இடையில் பறந்து அமர்ந்து, ஓசை எழுப்பியவாறு இருந்தன. அந்த ரம்மியமான காலை நேரத்தில், அவற்றைப் பார்க்கும்பொழுது, அவை ஆனந்தமாக ஆடிப்பாடிக் கொண்டாடிக் கொண்டிருந்தது போன்று தோன்றியது. ஒரு உயரமான மரத்தில், இரு இருவாட்சிப் பறவைகள் இணையாக அமர்ந்தன.

பெருவிலங்கு

வனத்திற்குள் சற்று முன்னேறிச் செல்லவே, தார்ச்சாலை மறைந்து மண் பாதையாக மாறியது. முந்தைய தினத்தின் மழையினால், சாலை சேறும் சகதியுமாக இருந்தது. அதில், காட்டு மாடு மற்றும் மான்களின் கால் தடங்கள் பதிந்திருந்தன. யானைகள் நடந்து சென்றிருந்த வட்டமான கால் தடங்களில், மழை நீர் நிரம்பி, சிறிய குளங்கள் போல் காட்சி அளித்தன. சாலையின் ஓரத்தில், ஒரு சிறுத்தையின் பாதச்சுவடு தொடர்ந்து வெகு தூரத்துக்குப் பதிந்திருந்ததைக் கண்டோம்.

தூரத்தில் பறவைகள் கூவவே, நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தோம். மழை மேகங்கள் விண்ணைச் சூழ, ஆண் மயில் ஒன்று, தோகை விரித்து ஆடத் தொடங்கியது. சேற்றில் கவனமாக நடக்க வேண்டுமென, தரையை உற்றுப்பார்த்த எங்களுக்கு ஆச்சரியமான விஷயம் ஒன்று தென்பட்டது. இதுவரை போளுவாம்பட்டியில் நாங்கள் பார்த்திராத கால் தடங்கள். அவை ஒரு பெரிய வகை ஊனுண்ணி விலங்கினுடையவை. அளந்து பார்த்ததில், ஒவ்வொரு தடமும் 15 செ.மீ. நீள அகலம் கொண்டவையாக இருந்தன. நாங்கள் முன்பே பார்த்த, சிறுத்தையின் தடத்தைவிடப் பெரியதாக இருந்தன.

புலி

அது நாங்கள் ஊகித்ததை உறுதிப்படுத்தியது. ஆம், அவை புலியின் பாதச் சுவடுகள்! அவ்வளவு பெரிய சுவடுகள், ஒரு ஆண் புலியினுடையதாகத்தான் இருக்கக்கூடும் என எண்ணினோம். அன்றைய தினம் இயற்கை ஆர்வலர்களாக எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடர்வனத்தின் நடுவே, ஒரு அபூர்வமான விஷயத்தைக் கண்டுபிடித்ததை போல உணர்ந்தோம்.

எனினும், சிறுவாணி-போளுவாம்பட்டி பள்ளத்தாக்கில், புலி நடமாட்டத்தை உறுதிசெய்ய வேண்டுமென, உடனடியாக, கோயம்புத்தூர் வனக்கோட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, குறிப்பிட்ட பகுதிகளில் புகைப்படக் கருவிகளைப் பொருத்தினோம். எங்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் அடுத்த சில நாட்களிலேயே, அந்தக் கருவிகளில் புலி மற்றும் சிறுத்தையின் நிழற்படங்கள் பதிவாகியிருந்தன.

போளுவாம்பட்டியில் புலி நடமாட்டத்திற்கான முதல் புகைப்பட ஆதாரம் என்ற வகையில், இது ஒரு முக்கிய ஆவணமாகும். புலியின் நடமாட்டம், ஒரு வனத்தின் ஆரோக்கியம் சீராக உள்ளது என்பதற்கான குறியீடாகும். ஏனெனில், பல்லுயிர்ச்சூழல் மிகுந்த, நன்கு பாதுகாக்கப்பட்ட வனத்தில் மட்டுமே புலிகள் வசிக்கும். அவற்றிற்கான உணவு மற்றும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வனப்பகுதி ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.

முதல் சான்று

அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின் (All India Tiger Estimation) போது, சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் எனக் கோவை வனக்கோட்டத்தின் இரண்டு வனச்சரகங்களில் மட்டுமே, புகைப்படக் கருவிகள் மூலம் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 11 புலிகள் அப்பகுதியைப் பயன்படுத்துவதாகவும், அதில் சில சத்தியமங்கலம் வனப்பகுதியிலிருந்து வந்திருக்கலாம் எனவும் தெரியவந்தது.

முதுமலை புலிகள் சரணாலயத்திலிருந்து, கேரள மாநிலம், மன்னார்காடு வனப்பகுதி மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு வழியாகவும், சாத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திலிருந்து, கல்லாறு வழித்தடம் வழியாகவும், புலிகள் போளுவாம்பட்டி பகுதிக்குள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்கெனவே கருத்தில் கொள்ளப்பட்டன. எனினும், புலி நடமாட்டத்திற்கான அறிகுறிகள், அண்மைக் காலங்களில்தான் கண்டறியப்பட்டன.

போளுவாம்பட்டியில் புலி வசிப்பதற்கான முதல் புகைப்படச் சான்று கிடைத்ததில், இயற்கை ஆர்வலர்களிடையே உற்சாகமும் நம்பிக்கையும் ஓங்கியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன் தரத் தொடங்கியுள்ளன. மேலும் புலிகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தங்களின் பூர்விக வசிப்பிடங்களில் மீண்டும் பரவி வாழத் தொடங்கியுள்ளன. மென்மேலும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இன்னும் பல முயற்சிகள் தேவைப்படவே செய்கின்றன என்றபோதிலும், இது நல்லதொரு தொடக்கமே.

D. பூமிநாதன், ஒருங்கிணைப்பாளர், உலக இயற்கை நிதியம் (WWF - India).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்