மனிதர்களின் செயல்பாடுகளால் பாதிக்கப் பட்ட சுற்றுச்சூழலை மீள் உருவாக்கம் செய்வதே சூழலியலாளர்களின் கனவு. ஒருவகையில், மனித இனம்தான் சூழலியல் சீர்குலைவுக்குக் காரணம் என்பதால், மனிதர்களே அதைச் சரிசெய்ய வேண்டும் என்கிற நியாயமாகவும் அது கருதப்படுகிறது.
2021 முதல் 2030 வரையிலான பத்து ஆண்டுகளைச் சூழலியல் தொகுதி மீட்டுருவாக்கத் தசாப்தமாக (Decade for ecosystem restoration) ஐ.நா. அறிவித்துள்ளது. இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யும் செயல்பாடுகளில் Rewilding என்பதும் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது.
இந்தக் கருத்தாக்கம் 1998இல் அமெரிக்க உயிரியலாளர்கள் மைக்கேல் சூலே, ரீட் நாஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அடைப்பிடத்துக்குள் வளர்க்கப்பட்ட காட்டுயிர்களை மீண்டும் காட்டுக்கு அனுப்புவதாக இந்தக் கருத்தாக்கம் வரையறுக்கப்பட்டது. பிறகு, ஓரிடத்தில் பரவலாக இருந்து, மனிதச் செயல்பாடுகளாலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டாலும் அழிந்த உயிரினங்களை மீண்டும் பழைய இடத்தில் அறிமுகப்படுத்தி, அந்த இனத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதாக இந்தக் கருத்தாக்கம் திருத்தியமைக்கப்பட்டது. இப்போது, ஒரு சூழலியல் தொகுதியையே மறுசீரமைப்பு செய்வதாக இந்தக் கருத்தாக்கம் மாறியிருக்கிறது. இந்தக் கருத்தாக்கத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் உண்டு: மையம் (core), வழித்தடம் (corridor), ஊனுண்ணி (carnivore).
முக்கிய அம்சங்கள்
ஒரு விலங்கைக் காட்டுக்குள் மீண்டும் அனுப்பும்போது, அதற்கான அடிப்படை வாழிடம் பாதுகாக்கப்பட்ட மையப்பகுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த இனம் அங்கே நிலைக்கும். அந்த மையப்பகுதியுடன் சுருங்கிவிடாமல், வெவ்வேறு காட்டுப் பகுதிகளையும் அந்த உயிரினங்கள் எளிதில் அணுகுவதற்காக வழித்தடங்கள் அமைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக அளவில் பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த ஊனுண்ணிகள், ஓர் உணவுச்சங்கிலியில் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியமாகிறது. ஓர் ஊனுண்ணி தன் வாழிடத்திலிருந்து மறையும்போது சிறிய ஊனுண்ணிகள், தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, சூழலியல் சமநிலை சீர்குலைகிறது. ஆகவே பெரிய ஊனுண்ணிகளை மீண்டும் அந்தச் சூழலில் அறிமுகப்படுத்துவதன் மூலம், சூழலியல் சமநிலையை மீளமைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரினம் அல்லது தாவர இனங்களையும் சூழலியல் செயல்முறைகளையும் மீட்டுருவாக்கம் செய்வதன் மூலமாக, ஓரிடத்தில் மனிதர்களால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைத்துப் பல்லுயிர்ப் பெருக்கத்தை அதிகப்படுத்துவதே இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படை.
அறிமுகமும் விலகலும்
சுற்றுச்சூழலை மீட்டுருவாக்கம் செய்வதில் இரண்டு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு வாழிடத்தில் உயிரினங்களையும் தாவர இனங்களையும் மனிதர்கள் கொண்டுசேர்ப்பது ஒரு வகை. அந்த இடத்தில் மனிதர்களின் தலையீட்டை நீக்கிவிட்டு ஒதுங்கிக்கொள்வது இன்னொரு வகை. உதாரணமாக, ஆறு சார்ந்த வாழிடங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், அழிந்துபோன மீன் இனங்களை அங்கே சேர்க்கலாம் அல்லது குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளை மட்டும் அகற்றிவிட்டு இயற்கை தன் பணியைத் தொடர்வதற்கு வழிவிடலாம்.
அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் தேசியப் பூங்காவில் ஓநாய் அறிமுகம், பிரிட்டனில் பீவர் பாலூட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது உள்ளிட்டவை வெற்றியடைந்தன. தோல்வி யடைந்த உதாரணங்களும் உண்டு. ஆனால், அவை செயல்முறையின் பிழையால் விளைந்தவை என்றும், கருத்தாக்கத்தின் தோல்வியாக அவற்றைப் பார்க்கக் கூடாது என்றும் சில சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ராஜஸ்தான் பிஸால்பூர் புல்வெளிகளில் இயல் தாவர இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது, சிறிய வகைப் பன்றிகள் - கங்கை நதி முதலைகளைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டங்கள் ஆகியவை வெற்றி பெற்றன.
எது சரி?
புலி போன்ற உயிரினங்களை ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடம்பெயர்த்துச் சூழலியலைச் சீரமைப்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்தியாவில் முன்பு வாழ்ந்து 75 ஆண்டுகளுக்கு முன் அற்றுப்போய்விட்ட சிவிங்கிப்புலியை மீண்டும் இந்தியக் காடுகளுக்குள் அறிமுகப்படுத்தும் திட்டம் சூழலியலாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியக் காடுகளின் தற்போதைய நிலை சிவிங்கிப்புலி வாழ ஏதுவாக இருக்குமா, பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்ட ஓர் உயிரினம் திடீரென்று அறிமுகப்படுத்தப்படும்போது ஏற்படும் பின்விளைவுகளைக் கணிக்க முடியாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
Rewilding கருத்தாக்கத்துக்கு எதிரான ஒரு முக்கிய வாதம் இது. ஒரு சூழலியலின் சிக்கலான வலைப்பின்னலுக்குள் தனிப்பட்ட ஓர் இனத்தை மட்டும் அறிமுகப்படுத்துவது சரியாக இருக்காது என்று விமர்சிக்கப்படுகிறது. ஒரு இனத்தை அறிமுகப்படுத்துவதால் சூழலியல் சீரமைக்கப்பட்டு விடும் என்று உறுதியாகச் சொல்லமுடிகிற அளவுக்கு, மனித இனம் சூழலியல் வலைப்பின்னல்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது அவர்களது வலியுறுத்தல்.
ஆப்பிரிக்காவில் சிப்பிகளைக் கட்டுப்படுத்து வதற்காகக் கடல் சூழலியலுக்குள் அறிமுகப் படுத்தப்பட்ட சிங்கியிறால்கள், அந்தச் சிப்பிகளாலேயே வேட்டையாடப்பட்ட நிகழ்வு ஒரு பிரபலமான உதாரணம். சிங்கியிறால்கள் அழிந்த சிறிது காலத்துக்குள், அந்தக் கடல் சூழலியலில் வாழ்ந்த உயிரினங்கள் வேறு வகையில் தகவமைத்துக்கொண்டிருந்தன. ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் சிங்கியிறால்கள் உள்ளே வந்தபோது, அவை ஆபத்தை எதிர்கொண்டன.
அற்றுப்போன இனம் மீண்டும் அறிமுகப் படுத்தப்படும்போது, மாறிவிட்ட சூழலியலில் அயல் ஊடுருவல் இனங்களாக அவை வெளிப் படுத்திக்கொள்வதற்கான சாத்தியம் இருக்கிறது. அவற்றால் சூழலியல் சீர்குலைவுகளும் புதிய நோய்த்தொற்றுக்களும் ஏற்படலாம். சில வேளை விநோதக் கலப்பினங்கள் உருவாகலாம்.
இப்படிப் பல சிக்கல்கள் இருந்தாலும், முழுமையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மீட்டுருவாக்கத் திட்டங்கள் வெற்றிபெறும் என்று அறிவியலாளர்கள் உறுதிப்படத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்தாக்கத்தை நடைமுறைப்படுத்தும்போது எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை முற்று முழுமையாகக் கணிக்க முடியாது என்பதால், இது பற்றிய ஒற்றை நிலைப்பாட்டை எடுப்பது கடினமாக இருக்கிறது.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago