பறிபோகும் பருத்திச் செடியும் பாரதக் கொடியும்

By பாமயன்

பருத்தி என்பது வெறும் விளைபொருள் மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் சமூக, பொருளியல், அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் ஊடும் பாவுமாக இழையோடியிருக்கும் இறையாண்மையை வெளிப்படுத்தக்கூடியது.

கொடியின் பின்னணி

இந்திய தேசியக் கொடியின் மீதான தாக்கம் வலுப்பெற்று வருவதைச் செய்தி ஊடகங்களில் காண முடிகிறது. தேசியக் கொடியை அவமதிப்பது குறித்து, இந்த வாதங்கள் எழுந்து வருகின்றன. இந்தியத் தேசியக் கொடிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது மூன்று வண்ணத்தையும், அசோகச் சக்கரத்தையும் பெறுவதற்கே நீண்டகாலம் எடுத்துக்கொண்டது. இந்தியாவுக்கு என்று ஒரு தனிக்கொடி வேண்டும் என்ற எண்ணம் 1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்துக்குப் பின்னர் உருவானது. அது முதல் விடுதலைப் போர் என்றும் அழைக்கப்பட்டது.

இந்தியத் தேசியக் கொடி முதலில் பிரிட்டிஷ் கொடியின் சாயலில்தான் இருந்தது. அதை மாற்றப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. முதலில் திலகர், அரவிந்தர் போன்றோர் விநாயகர், காளி போன்ற அடையாளங்களையும் நிவேதிதா ஆன்மிக அடையாளங்களையும் கொடிக்காகப் பரிந்துரைத்தபோது, அவை மத அடையாளங்களாக இருந்ததால் ஏற்கப்படவில்லை. இப்படி நீண்ட ஊடாட்டங்களுக்குப் பின்னர் ஆந்திராவைச் சேர்ந்த பிங்களி வெங்கையா என்பவர் வடிவமைத்த மூவண்ணக் கொடி அதாவது இந்து, இசுலாமியர் போன்ற அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அடையாளமுடைய இன்றைய இந்தியத் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிஜ அவமானம்

இந்தக் கொடிக்கும் வேளாண்மைக்கும் என்ன தொடர்பு? இங்குதான் நமது மூத்த விடுதலைத் தலைவர்களின் தொலைநோக்குச் சிந்தனை வியக்க வைக்கிறது.

கொடியை எந்தத் துணியில் தைக்க வேண்டும்? எந்த அளவில் தைக்க வேண்டும் என்ற வரையறையை அவர்கள் உருவாக்கினார்கள். கொடி நீளவாக்கில் மூன்று பங்கும் அகலவாக்கில் இரண்டு பங்கும் என்று இருப்பதுபோல, உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் அது காதி துணியில் தைக்கப்பட வேண்டும். அதாவது கையாலேயே பருத்தி நூலாக நூற்கப்பட்டு, கையாலேயே நெய்யப்பட்ட துணியில். அதைத் தவிரப் பருத்தி அல்லது பட்டு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இவற்றைத் தவிர்த்து வேறு பொருளில் தேசியக் கொடியைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். அப்படியானால் இன்று பல இடங்களில், பள்ளி-கல்லூரிகளில்கூட பாலித்தீன் கொடிகள் பயன்படுத்தப்பட்டுவருவது சட்டப்படி குற்றம், பெருத்த அவமானம்.

அமெரிக்கப் பருத்தியின் ஆதிக்கம்

தேசியக் கொடிக்கும் வேளாண்மைக்கும் வேறென்னத் தொடர்பு? அதற்கு, கொடிக்கான பருத்தி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? காதி இயக்கத்தைக் காந்தியடிகள் ஏன் நடத்தினார் ஆகிய கேள்விகளைக் கேட்டாக வேண்டும். காதி இயக்கம் இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்லாது, பொருளியல் விடுதலையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கம். பருத்தித் துறையில் இந்தியா தற்சார்புள்ள நாடாக விளங்க வேண்டும் என்பதற்காக அது உருவாக்கப்பட்டது. பிரிட்டனின் வெளிநாட்டு துணிகளைக் கொளுத்திப் புறக்கணித்து உருவானதே காதி இயக்கம். அதற்காகப் பலர் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்துள்ளனர்.

ஆனால், இன்றைக்குப் பருத்தியின் நிலை என்ன? இந்தியாவில் உள்ள 90 சதவீதம் பருத்தி அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் விதைகள் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. மீதமுள்ள 10 சதவீதச் சாகுபடி ‘நாகரிகம்' எட்டிப் பார்க்காத பழங்குடிப் பகுதியிலும் மானாவாரிப் பகுதியிலும் உள்நாட்டு பருத்தி விதைகள் மூலம் நடக்கிறது.

பறிபோகும் இறையாண்மை

அப்படியானால் காதியால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டிய நமது தேசியக் கொடியின் நிலை என்ன? வெளிநாட்டு நிறுவனத்தின் தயவால் அல்லவா நமது கொடி இப்போது பறந்துகொண்டிருக்கிறது? இது நமக்கு அவமானம் அல்லவா?

இந்த மரபீனி மாற்றப்பட்ட பருத்தி விதைகள் வந்த பின்பு, நமது உழவர்கள் எவ்வளவு இழப்பைச் சந்தித்துவருகிறார்கள்? குறிப்பாகத் தற்கொலை செய்துகொண்ட விதர்பா உழவர்களில் பெரும்பாலோர் பி.ட்டி. பருத்திச் சாகுபடியாளர்கள். நமது நாட்டின் ஒட்டுமொத்தப் பருத்தி வளம் அழிந்துபோனது. அடுத்துக் கத்திரியிலும் கடுகிலும் பி.ட்டி. பயிர் என்று முழங்குகிறார்கள். நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கும் போக்கல்லவா இது?

பாதுகாக்காத அரசு

இந்தப் போக்குக்கான தொடக்கம் 1947-ல் நாடு விடுதலை பெற்ற பிறகும் விழித்துக்கொள்ளாததே காரணம். அதற்குப் பிறகும் வெளிநாட்டு பருத்தி இனங்களையே பயிரிடத் தொடர்ந்து நமது தலைவர்களும் அறிவாளிகளும் ஊக்கமளித்துவந்தனர்.

பசுமைப்புரட்சியின் விளைவாக வீரிய விதைகள் என்று அறிமுகம் செய்யப்பட்ட விதைகள் நோய்களையும் பூச்சிகளையும் கொண்டுவந்தன. இன்று அதிகமாகப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படும் முதல் பயிர் பருத்திதான். உழவர்கள் மிகக் கடுமையாக உழைத்துப் பருத்தியைச் சாகுபடி செய்தாலும் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. ஏனெனில், உலகச் சந்தையே பருத்திக்கான ஒரே நோக்கமாக இருக்கிறது.

உலகமயமாக்கலுக்குப் பின்னர்ச் சந்தை திறந்துவிடப்பட்டதால், அதில் நடக்கும் சூதாட்டத்தின் அளவு எல்லை மீறிப் போய்விட்டது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பருத்திக்குச் சீனா கடும் வரிகளை விதிக்கிறது. இதனால் உள்ளூர் உழவர்கள் தப்பிக்க முடிகிறது. இந்தியாவில் இறக்குமதி வரியை உயர்த்த விடாமல் துணி ஆலை முதலாளிகளின் கைவண்ணம் வேலை செய்கிறது. இதனால் பாதிக்கப்படுவது வாயில்லாப் பூச்சியான சாதாரண உழவர்கள்தாம்.

அமெரிக்க ஏமாற்று

அமெரிக்கா தனது நாட்டுப் பருத்திச் சாகுபடியாளர்களுக்கு மிக அதிக மானியம் கொடுத்து விலையைக் குறைத்துவிடுகிறது. உலக வணிக நிறுவனம் கூறும் விதிகளை மீறி அமெரிக்கா தன் நாட்டு உழவர்களுக்கு மானியத்தைத் தந்துவருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3.2 பில்லியன் (ரூ. 16,000 கோடி) அமெரிக்க டாலர்களை மானியமாக வழங்கியது. அத்துடன் 1.6 பில்லியன் (ரூ. 8,000 கோடி) தொகையை ஏற்றுமதிக்கான கடனாகவும் வழங்கியுள்ளது. அமெரிக்கா கொடுக்கும் மானியங்கள் யாவையும் பெரும் பண்ணையாளர்களைக் குறிவைத்தே தரப்படுகின்றன.

அமெரிக்காவின் மானியங்களால் 2001-03 ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்க நாட்டுப் பருத்தி உழவர்களுக்கு ஏறத்தாழ 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 2,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. பருத்திக்கு 25 சதவீதம் குறைவான விலை கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மாலி நாட்டு உழவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் (ஆக்ஸ்பாம்).

இந்தியாவிலும் 78% மானியம், 10% பண்ணை முதலாளிகளுக்குத் தரப்படுகிறது. மற்றொருபுறம் வரலாறு காணாத அளவுக்குப் பருத்தி உழவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆந்திரா, மகாராஷ்டிரம், பஞ்சா என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. கந்துவட்டிக்காரர்களாலேயே பெரும்பாலான உழவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பூச்சிக்கொல்லியும் தற்கொலையும்

பருத்தி சாகுபடி 1950-ம் ஆண்டைக் காட்டிலும் 2004/05-ம் ஆண்டளவில் இரண்டு மடங்கு, அதாவது 95 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 1.7 கோடி உழவர்கள் பருத்திச் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் ஆளுக்கு இரண்டரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளவர்கள்.

இந்தியாவின் மொத்தச் சாகுபடிப் பரப்பில் பருத்தி 5 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், 54 சதவீதப் பூச்சிக்கொல்லி நஞ்சு அதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பருத்தியில்தான் அதிகப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது. முதலில் 1980-களில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டது. அதைத் தடுக்கப் பைரித்ராய்டு வகை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதற்குப் பூச்சிகள் கட்டுப்படவில்லை. எனவே அதைவிட கடுமையான எண்டோசல்பான், குவினோபாஸ், மோனோகுரோட்டோபாஸ், குளோர்பைரிபாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தினர். இதன் பின்னர் நிலைமை மேலும் மோசமானது. அமெரிக்கன் காய்ப்புழு, இளஞ்சிவப்பு காய்ப்புழு போன்ற புழுக்கள் பெருகத் தொடங்கின. இதை எதிர்கொள்ள முடியாத உழவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டுள்ளனர். பருத்திச் சாகுபடியில் ஈடுபட்ட காரணத்தால் ஏறத்தாழ ஒரு லட்சம் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மரபீனி விதை ஆதிக்கம்

பருத்தியில் இப்படி மிகப் பெரிய அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதால் மண்வளம் இழக்கப்பட்டதோடு, இடுபொருள் செலவும் அதிகமாகிக்கொண்டே வந்தது. இதையே காரணமாகக் கூறிப் புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பருத்தி (Genitically Modified Cotton - BT Cotton) அறிமுகம் செய்யப்பட்டது. விதைகளைச் சேமித்து மறுவிதைப்புச் செய்துகொள்ளும் உழவனின் உரிமையை மறுப்பதும், இந்திய விதைச் சந்தையை முழுக்கக் கைப்பற்றுவதும் மரபீனி மாற்ற விதைத் தொழில்நுட்பத்தின் நோக்கம். உலகிலுள்ள பெரும் விதைச் சந்தைகளில் ஒன்று இந்திய விதைச் சந்தை. 2000-ம் ஆண்டில் இந்திய விதைச் சந்தையின் மதிப்பு ரூ. 2,000 கோடி. கி.பி. 2007-ல் அது மூன்று மடங்காக அதிகரித்தது.

ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தது. உணவுப் பாதுகாப்பு அங்கு நடைபெறும் வேளாண்மையைப் பொறுத்தது. வேளாண்மைக்கான இறையாண்மையோ விதைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, விதைகள் மிகவும் இன்றியமையாதவை. இந்த விதைத் துறையில் நுழைந்துள்ளது பெரும் நிறுவனமான மான்சாண்டோ. அது அறிமுகப்படுத்தியுள்ள பருத்தி விதை-பாசில்லஸ் துரிஞ்சியன்ஸ் (Bt) என்ற மரபீனி மாற்ற விதை.

ஏமாற்றிய பி.ட்டி.

இந்தியாவில் மரபீனி மாற்ற விதைகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுவிட்டது. பி.ட்டி. பருத்தி விதையை அறிமுகம் செய்தபோது, 'பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி எதுவும் தேவையில்லை. பெருமளவு விளைச்சல் உத்தரவாதம்' என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையன்று. இந்த விதையில் உள்ள நஞ்சால் எல்லாப் பூச்சிகளையும் கொல்ல முடியாது. இந்தியாவில் பெரிதும் காணப்படுவது அமெரிக்கன் காய்ப்புழு வகையினம். இதற்குப் படிக 1 ஏசி (cry 1 AC) என்ற பூச்சிக்கொல்லி நஞ்சு தேவைப்படும். அத்துடன் பூச்சிகள் இந்த நஞ்சை எதிர்த்து வாழும் எதிர்ப்புத் திறனையும் வளர்த்துக்கொள்கின்றன.

விளைச்சலை எடுத்துக்கொண்டால் 1980-க்குப் பிறகு அமெரிக்காவிலேயே (மரபீனிப் பருத்திக்குப் பின்பும்) பருத்தி விளைச்சல் குறைந்துவிட்டது. பன்மயப்பட்ட பருத்தி இனங்கள் மறைந்து, ஒரே வகைப் பருத்தியின் பரவலால் ஏற்பட்ட சீர்கேடு என்று இதைக் கூறுகின்றனர்.

இந்தியாவிலும் தோல்வியே

இந்தியாவில் மத்தியப்பிரதேசத்தில் குர்காவோன் மாவட்டத்தில் பி.ட்டி. பருத்தி விளைச்சலில் 100% தோல்வி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலம் பகுதியிலும் இதே கதைதான். ஆனால் இயற்கையின் சாதகமான வாய்ப்புகளால் கிடைத்த சின்ன சின்ன வெற்றிகளைக் காட்டி மிகப்பெரிய விளம்பரங்கள் மூலம் பி.ட்டி. பருத்தி விற்பனையைப் பெருக்கிவருகின்றனர். இதற்குப் பல்கலைக்கழகங்களும் உடந்தை என்பதுதான் வேதனை. வறட்சியின்போது இந்திய, நாட்டுப் பருத்தியினங்கள் 20% இழப்பை ஏற்படுத்தினால், பி.ட்டி. பருத்தி 100% இழப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் மற்றப் பருத்தி விதைகளுடன் பி.டி. பருத்தி ‘கலந்து'விட்டது. மரபீனி - சாதாரணக் கலப்பு விதைகளின் இரண்டாம், மூன்றாம் தலைமுறைச் செடிகள், சட்டத்துக்குப் புறம்பாகவே உருவாக்கப்பட்டுவிட்டன. இந்த ‘கள்ள விதைகள்' குஜராத், ஹரியாணா, பஞ்சா போன்ற (தமிழ்நாட்டுக்கும்கூட வந்திருக்கலாம்) இடங்களில் விற்பனைக்கு வந்துவிட்டன. குஜராத்திலுள்ள ஒரு காதி நிறுவனம் உருவாக்கிய பருத்தியாடை, பி.ட்டி. பஞ்சில் நெய்யப்பட்டது. இதை அணிந்த பலருக்கு உடல் அரிப்பும், தடிப்பும் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

விதைச் சந்தையைக் கைப்பற்றுதல்

பொதுவாக இந்திய வேளாண்மையில் விதையின் பங்கு மிக இன்றியமையாதது. மரபு வழியாக விதையை அடிப்படையாகக் கொண்ட பல பழமொழிகள் நம் நாட்டில் புழங்கிவருகின்றன. பண்டை நாளில் இருந்தே விதையின் பரிமாற்றம், பண்ட மாற்றாகவே இருந்து வந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்பே விதை, பொருளியல் பண மதிப்பைப் பெற்று வணிகத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கத் தொடங்கியது. வெளிநாட்டு கடன்களாலும், பிற ஒதுக்கீடுகளாலும் பசுமைப் புரட்சியின் பெருமையும் வீரிய விதைகளின் பரப்புதலும் நடைபெற்றன. அதனால் ஏற்பட்ட துயரோ மிகப் பெரிதாகிவிட்டது.

பொதுவாக இந்திய வேளாண்மையில் விதையின் பங்கு மிக இன்றியமையாதது. மரபு வழியாக விதையை அடிப்படையாகக் கொண்ட பல பழமொழிகள் நம் நாட்டில் புழங்கிவருகின்றன. பண்டை நாளில் இருந்தே விதையின் பரிமாற்றம், பண்ட மாற்றாகவே இருந்து வந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்பே விதை, பொருளியல் பண மதிப்பைப் பெற்று வணிகத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கத் தொடங்கியது. வெளிநாட்டு கடன்களாலும், பிற ஒதுக்கீடுகளாலும் பசுமைப் புரட்சியின் பெருமையும் வீரிய விதைகளின் பரப்புதலும் நடைபெற்றன. அதனால் ஏற்பட்ட துயரோ மிகப் பெரிதாகிவிட்டது.

இது ஒரு புறம் இருக்க, கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் அடிப்படைத் தொழிலான வேளாண் துறையைக் கைப்பற்றும் நோக்கோடு பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுத்துள்ளன. இதனால் வருங்காலத்தில் உழவர்கள் விதைகளைத் தமக்கென வைத்துக்கொள்ள முடியாதவாறும், அரசுகளே விதை இருப்பைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வகையிலும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு உலக வர்த்தக நிறுவனமும் அதன் துணையான வணிகம்சார் நுண்மதிச் சொத்துரிமை ஒப்பந்தம் ஆகியவை உதவிபுரிகின்றன.

மறைந்துவரும் விதை சேகரிப்பு

வீரிய விதைகள் உட்புகுந்தபோது, உழவர்களின் விதை சேமிக்கும் பழக்கம் மறைந்தது. இப்போது வந்துள்ள மரபீனி நுட்பவியல் விதைகள் வழியாக உழவர்களிடமிருந்து விதை சேமிக்கும் உரிமையும் பறிபோக உள்ளது. இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் விதைச் சந்தை முழுவதையும் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மான்சாண்டோ உலகின் மிகப் பெரிய விதை நிறுவனம். இதன் ஆண்டு வரவு-செலவுத் திட்டம், பல நாடுகளின் வரவு-செலவுத் திட்டத்தைவிட கூடுதலாகும்.

மரபீனி மாற்ற விதைகளின் படையெடுப்பால் இந்தியா போன்ற உயிரிப்பன்மை (Bio - diversity) மிக்க நாட்டில் உள்ள ஏராளமான மரபு விதையினங்கள் மறைந்து போக வாய்ப்புள்ளது. மேலும், மான்சாண்டோ நிறுவனம் தனது மரபீனி மாற்ற உயிரியின் (Genetically Modified Organism) விளைவாக உருவாகும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்போது, அதில் ‘மரபீனி மாற்றப் பொருள்’ என்ற அறிவிப்பை அச்சிட மறுத்து வருகிறது. இதனாலும், பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

பறிபோகும் உணவு உரிமை

அடுத்தாக, மான்சாண்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் நச்சுத்தன்மை கொண்ட களைக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நிலமும் பாழாகிறது. புதிய களைச்செடிகள் எதிர்ப்புத் திறனுடன் தோன்றுகின்றன. கூடவே மகரந்தச் சேர்க்கையின்போது, மரபீனி மாற்றச் செடியின் மகரந்தத்தூள் மற்றச் செடிகளுடன் சேரும் நிலையில், வேறு புதிய சிக்கலான ‘களைகள்’ தோன்றலாம். இதற்கெல்லாம் மேலாக உழவர்களின் தீர்மானிக்கும் உரிமையும், சாகுபடி உரிமையும் பறிபோய், பன்னாட்டு நிறுவனங்களின் பண்ணையடிமைகள்போல் உழவர்கள் மாறும் சூழல் உள்ளது.

ஒரு நாட்டின் இறையாண்மையும் அதன் நிலைப்பாடும் அந்நாட்டின் உணவு உறுதிப்பாட்டில்தான் உள்ளது. உணவுப் பாதுகாப்புக்கே பங்கம் வருமானால், எந்த நாடும் தனது தன்னுரிமையைத் தொடர்ந்து காப்பாற்ற முடியாது. இப்போது படையெடுத்துள்ள, பி.ட்டி. பருத்தியும் மற்ற மரபீனி மாற்ற விதைகளும் நாட்டின் இறையாண்மைக்கு முழுமையாக வேட்டு வைக்கலாம்.



கடந்த பிப்ரவரி 14, 15 ஆகிய இரண்டு நாட்களில் திண்டுக்கல் காந்தி கிராம வளாகத்தில் பருத்தியை மையமாகக் கொண்டு கருத்துப் பட்டறை நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்நாட்டு பருத்தியைப் பாதுகாக்கும் செயல்பாட்டாளர்கள், நாட்டுப் பருத்தியை மீட்டுள்ள பல மாநில உழவர்கள் பேசினார்கள். பல அரிய செய்திகள் இதில் பரிமாறப்பட்டன. குறிப்பாக மரபீனி மாற்றப் பருத்தியின் தீய விளைவுகள், நமது உள்நாட்டுப் பருத்தியின் சிறப்புகள் விவாதிக்கப்பட்டன. கவிதா குருகந்தி, அனந்து, பாமயன், கிருஷ்ணபிரசாத், மணி உள்ளிட்டோர் பேசினர். ஆஷா, துலா, காந்திகிராமம் அறக்கட்டளை, சகஜசம்ருதா, அப்பச்சி காட்டன், சிம்கோட்ஸ் என்று பல அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: adisilmail@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்