ஒற்றைப் பாம்பை அடிக்க ஊரே படையெடுப்பதுதான் நம்ம ஊர் பாணி. ஆனால், பாம்பை அடிக்கப் போனாலோ, பாம்பு காயம்பட்டுக் கிடந்தாலோ பதறிவிடுகிறார் செல்வராஜ். உடனே பாம்பை மீட்டு, சிகிச்சை அளித்து, அது உடல்நலம் அடைந்தவுடன் காட்டுக்குள் கொண்டு போய்விடுகிறார் இந்தப் பாம்பு ஆராய்ச்சியாளர். கடந்த சில ஆண்டுகளில் இப்படி அவர் காப்பாற்றிய பாம்புகளின் எண்ணிக்கை 174.
“பாம்புகளை அடிக்காதீங்க, காப்பாத்துங்க. அது விவசாயிகளின் நண்பன். அப்படியென்றால் நமக்கும் நண்பன்தானே?” என்று கேட்கும் இவர், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் வன உயிரின ஆராய்ச்சியாளர். பாம்புகளைப் பற்றிப் பொதுவாக நிலவும் மூடநம்பிக்கைகளைப் பற்றி கேட்டால், எல்லாமே பொய் என்கிறார் இவர். அப்படி அவர் என்னதான் சொல்கிறார்?
நாம் நம்ப மறுத்தாலும், பாம்பு ரொம்பவும் அப்பாவியான உயிரினம். எந்தப் பாம்பும் மனிதர்களைத் துரத்தித் துரத்திக் கொத்துவதில்லை. மனித வாசம் கண்டாலே பயந்து ஓடி, மறைந்துகொள்ளும் கூச்ச சுபாவமுள்ள உயிரினம் பாம்பு. அது செல்லும் பாதையில், நாம் தவறுதலாக மிதித்துவிட்டால் நம்மைக் கொத்துகிறது அல்லது துரத்துகிறது. அதற்கு நாம் இம்சை கொடுக்காதவரை, நம்மை அவை இம்சிப்பதில்லை.
முன்னெச்சரிக்கை
இரவில் செல்லும்போது டார்ச் லைட்டுடன் செல்லுவது, நமது குடியிருப்பைச் சுற்றிப் புதர் மண்டிக் கிடக்காமல் பாதுகாப்பது; பாம்புகள் உண்ணும் தவளைகள், எலிகள் உள்ள இடங்களில் கவனமாகச் செல்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். நமது சுற்றுச்சூழல் சமன்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் உயிரினம் பாம்பு. வயல்வெளிகளிலும், நிலப்பகுதியிலும் சுற்றித் திரியும் எலிகளால் விவசாய உற்பத்தியில் 20 சதவீத இழப்பு ஏற்படுகிறது. பாம்புகள், எலிகளை உணவாக உட்கொள்வதால் பயிர் சேதம் தடுக்கப்படுகிறது. ஆனால், நாமோ பாம்பைக் கண்டாலே உயிருக்கு ஆபத்து எனப் பதறிப் போகிறோம்.
பாம்பு என்றாலே விஷம் கொண்டது என்பது மிகவும் தப்பான கற்பிதம். ஊர்வனவற்றில் 3,000 வகைகள் உள்ள இனம் பாம்பு மட்டுமே. பாம்பு இனம் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. ஆனால், மனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினான். பல்லி இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவை பாம்புகள். இந்தியாவில் 276 பாம்பு வகைகள் உள்ளன. இவற்றில் 171 பாம்பு வகைகள் விஷமற்றவை. மக்கள் வசிக்கும் இடங்களில் விஷத்தன்மை, கடியின் தன்மையை வைத்துப் பார்க்கும்போது நான்கு வகை பாம்புகளே நாம் உண்மையில் அஞ்ச வேண்டியவை.
4 பாம்புகள், கவனம்
அவை நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன். தவிர்க்க முடியாத நிலையில்தான் பாம்பு நம்மைக் கடிக்கிறது. அதுவும்கூடத் தற்காப்புக்காகத்தான். கடிபட்ட பயத்திலும், சரியான முதலுதவி இல்லாததாலும்தான் பாம்புக் கடியால் 99 சதவீதம் பேர் இறக்கிறார்கள். நல்ல பாம்பு, கட்டுவிரியன் கடித்தால் நரம்பு மண்டலமும், கண்ணாடிகளும் விரியன், சுருட்டை விரியன் திசுக்களும் பாதிப்படைகின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் இறக்கிறார்கள். உலகிலேயே பாம்புக் கடியால் அதிகம் பேர் இறப்பது இந்தியாவில்தான். ஆனால், உலகில் அதிக விஷப் பாம்புகள் உள்ள நாடு ஆஸ்திரியா. அங்குப் பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வும், முதலுதவி அறிவும் மிக அதிகம். அங்கே வருடத்துக்கு 10க்கும் குறைவானவர்களே பாம்புக் கடியால் இறக்கிறார்கள்.
பாம்பு முக்கியம்
‘யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடவேண்டும்; பாம்பு துரத்தினால் நேராக ஓட வேண்டும்' என்று நமது மூதாதையர்கள் வைத்திருந்த புரிதல் ரொம்ப முக்கியமானது. ஆனால், யானைகளைக் காப்பாற்றக் குரல் கொடுப்பது போல், காட்டில் வாழும் பாம்புகளைக் காப்பாற்ற இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுப்பதில்லை
மனிதர்கள் இந்த மண்ணில் வாழ எந்த அளவுக்கு உரிமை உண்டோ, அதைவிட அதிக உரிமை கொண்டவை பாம்புகள். மின்சாரம் ஆபத்தானது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், மின் கம்பியை நாமாகவே போய் மிதிப்போமா? பாதுகாத்துப் பயன்படுத்துகிறோம், இல்லையா? அதைப் போலப் பாம்புகளையும் காக்கவேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 mins ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago