ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்
ஒவ்வொரு கோடைக் காலத்திலும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். ஓராண்டில் ஆறு மாதங்களுக்கும் மேலாக, தமிழகத்தின் பல மாவட்டங்கள் வறட்சியையே சந்திக்கின்றன. தமிழக நிலப்பரப்பின் பெரும்பான்மைப் பகுதி வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. நம் முன்னோர்கள், தங்கள் நீர் மேலாண்மைத் திறன் மூலமாக, தமிழ்நாட்டைச் செழிப்பாகவே வைத்திருந்தனர்.
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் மையக்கரு, சூழல் அமைப்பும் அதன் பராமரிப்பும். உயிர்ச் சூழலின் ஆதாரமாக விளங்குவது தண்ணீர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நிலத்தில் வாழும் புழு, பூச்சிகள் முதல் தாவரங்கள், விலங்கினங்கள் வரை அனைத்தும் நீரை ஆதாரமாகக் கொண்டே உயிர்த்திருக்கின்றன.
வாழ்க்கையின் அடிப்படையான இந்த அமுதத்தை நம் முன்னோர் எவ்வாறு பயன்படுத்தினார்கள், நிர்வகித்தார்கள், பாதுகாத்தார்கள் என்று சிந்தித்துள்ளோமா?
தமிழர்களின் நீர் மேலாண்மைத் திறன்
தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் சிறந்த நீர் மேலாண்மை அமைப்புகளை அவரவர்களுடைய ராஜ்ஜியங்களில் உருவாக்கிச் செயல்படுத்தியதற்கான பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பண்டைய தமிழர்கள், நீர் பாதுகாப்பு, விநியோகம் - மேலாண்மையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள். இதில் அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் காவிரியாற்றின் குறுக்கே 2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன். அதேபோல் அரசர்கள் தங்கள் ராஜ்ஜியம் முழுவதும் ஏரி, குளம், குட்டை போன்ற பல நீர்நிலைகளைக் கட்டமைத்தார்கள்.
அந்த நீரை விவசாயம் - மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினர். இதற்குச் சிறந்த சான்று தற்போதைய கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி. இந்த ஏரி ராஜாதித்ய சோழன் என்னும் இளவரசரால் வெட்டப்பட்டது. ராஜாதித்ய சோழன் தந்தையான முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாராயணன் ஆகும். இப்பெயரே வீரநாராயணன் ஏரி என அழைக்கப்பட்டது. காலப் போக்கில் இப்பெயர் வீராணம் ஏரி என அழைக்கப்பட்டது. இந்த ஏரி 15 கி.மீ. நீளமும், 5 கி.மீ. அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி. இதன் கொள்ளளவு 1,445 மில்லியன் கன அடி. இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் உலகின் மிக நீளமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
மன்னர்கள் இதுபோன்று நீர்நிலைகளை உருவாக்கி மக்களிடமிருந்து நில வரி சேகரித்தனர். அத்துடன் நிற்காமல் நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்கக் காவலர்களை நியமித்தார்கள். ஏரி பராமரிப்பிற்கு அறக்கட்டளையை நிறுவினார்கள். அத்துடன் நீர்நிலைகளின் பராமரிப்பிற்காக பிரத்யேக ஏரி வாரியம் போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டன.
நீர் ஆதாரத்தை முக்கியமாக நம்பியுள்ள ஒரு விவசாயச் சமூகத்தைச் சார்ந்த நாட்டில், நம் முன்னோர்கள் தற்போதைய காலத்தைவிட தொலைநோக்குப் பார்வையுடனும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உணர்ந்தவர்களாகவும் தண்ணீரைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அறிந்தவர்களாகவும் இருந்தார்கள்.
தமிழகத்தின் நீர் பற்றாக்குறை
இருப்பினும், தற்போது இந்தியாவில் நீர் பற்றாக்குறை மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. தற்போது தமிழ்நாட்டின் வருடாந்திர மழைப் பொழிவின் சராசரி 910 மி.மீ. ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 879 டி.எம்.சி. நீர் சேகரிப்புத் திறன் கொண்ட 79 நீர்த் தேக்கங்களும் 39,202 குளங்களும் உள்ளன. நிலத்தடி நீர் செறிவூட்டும் திறன் 790 டி.எம்.சி. ஆக உள்ளது. இவ்வாறு இரு நீர் ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்த நீர் சேகரிப்புத் திறன் 1,643 டி.எம்.சி. ஆக உள்ளது.
தமிழ்நாடு ஏற்கெனவே மேற்பரப்பு நீர் சேகரிப்புத் திறனை எட்டிவிட்டது. ஆகவே, புதியதாக பெரிய - நடுத்தர நீர்த் தேக்கத் திட்டத்தைத் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை. இதனால் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்து வருகிறது, இதில் 86 சதவிகித நிலத்தடி நீர் ஏற்கெனவே உபயோகிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் ஒரு யூனிட் பரப்பளவில் நீர்ப் பாசனத் திறன் இந்திய சராசரியான 0.17 ஹெக்டேருடன் ஒப்பிடும்பொழுது 0.08 ஹெக்டேர் ஆக உள்ளது.
மாநிலத்தில் நீர்ப்பாசனத்திற்கு உருவாக்கப்பட்ட மேற்பரப்பு நீர் ஆதாரங்களின் ஆற்றலுக்கும் அதன் பயன்பாட்டிற்கும் இடையிலான பெரிய இடைவெளிக்குப் பழைய கட்டமைப்புகள் - அதன் போதிய பராமரிப்பின்மை, நீர் பிடிப்பு - முன்கரைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, அதிக அளவிலான வண்டல் சேர்ப்பு, நீர் வழங்குவதற்கான சரியான நிறுவனக் கட்டமைப்பு ஏற்பாடுகள் இல்லாதது, பயிர் முறைகளில் பரவலான மாற்றங்கள், வேளாண் அல்லாத நோக்கங்களுக்காக மடைமாற்றுதல், நீர் ஆவியாதல், நீர்க் கசிவு, அதிகமான நீரை மேல்மடை பகுதிகளில் பயன்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத நீர் பயன்பாடு ஆகியவை மிக முக்கிய காரணிகளாக உள்ளன. இத்தகைய சூழலில் நாம் அனைத்து நதிப் படுகைகளிலும் ஒருங்கிணைந்த நிலையான நீர் மேலாண்மைக் கொள்கையை அமல்படுத்துவது ஆரோக்கியமான நதி சுற்றுச்சூழல் அமைப்புக்கு வழிவகுக்கும்.
ஒருங்கிணைந்த நீர்வடியும் பகுதி மேலாண்மை
ஒவ்வொரு நதிப் படுகையும் பல சிறிய, பெரிய நீர் வடியும் பகுதிகளால் ஒன்றிணைக்கப்பட்டது. தற்போதைய சூழலில் பெய்யும் மழைநீரைப் பெய்யும் இடத்திலேயே பிடித்துச் சேகரிப்பதே பொருத்தமானதாக இருக்கும். இதற்கு ஒருங்கிணைந்த நீர்வடியும் பகுதி மேலாண்மை ஒரு சிறந்த வழியாகும். பெய்கின்ற மழைநீரானது ஒரு வடிகாலில் வந்து சேரும்பொழுது, அந்த வடிகாலுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகின்றதோ அந்தப் பகுதியையே நீர்வடியும் பகுதி எனலாம். இந்த நீர் வடியும் பகுதிகள் அதன் பரப்பளவை வைத்து பெரிய நீர் வடியும் பகுதி, நடுத்தர நீர் வடியும் பகுதி, சிறிய நீர் வடியும் பகுதி என வகைப்படுத்தப்படுகின்றன.
நீர்வடிப் பகுதி மேலாண்மை எனப்படுவது நீர்வளங்களை முறைப்படி பாதுகாத்து, நீடித்த உபயோகத்திற்குப் பயன்படுத்த வழிவகை செய்யும், தாவரங்கள், விலங்குகளுக்குப் பிரித்துக் கொடுத்திட உதவும். நீர் வழங்குதல், நீர் வடிதல், நீரின் தரம், நீரின் உரிமைகள் போன்றவை இதன் முக்கிய அங்கங்களாகும்.
நீர் வடியும் பகுதி மேலாண்மைத் திட்டம் என்பது பன்முக அம்சம் கொண்டதாகவும், நீர் வடியும் பகுதியின் குறைபாடுகளைத் தீர்ப்பதோடு, அதை மேம்படுத்தவும் உதவும் விதத்தில் வரையறுக்கப்பட வேண்டும்.
சீர்கேடு அடைந்த இயற்கை வளங்களான மண், பசுமைச் சூழல், நீர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பாதுகாத்து, மேம்படுத்தி சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுத்தலே, நீர் வடியும் பகுதி மேலாண்மைத் திட்டத்தின் முக்கிய நோக்கம். மண் அரிப்பைத் தடுத்து இயற்கை பசுமைச் சூழலை மீட்டெடுத்து, மழை நீரைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, இந்தத் திட்டத்தின் மூலம் வழிவகை செய்ய முடியும்.
நீர்வடியும் பகுதிகளில் நிலம் - நீர்வள மேம்பாட்டுப் பணிகளான பண்ணைக்குட்டைகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், புதிய ஊருணிகள் அமைத்தல், குளங்கள் தூர்வாருதல், கசிவு நீர்க்குட்டை அமைத்தல், கால்நடை குட்டை அமைத்தல், நீர்செறிவூட்டும் அமைப்பு ஏற்படுத்துதல், பாழும் கிணற்றைப் புனரமைத்தல், கோடை உழவு செய்தல் - சமதள வரப்பு அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது அவசியம்.
நீர்வடியும் பகுதிகளில் பண்ணை வளத்தை மேம்படுத்த, அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு, பழ - மரக்கன்றுகள் வழங்குவதோடு, பயிர் செயல் விளக்கங்கள், தீவனப் பயிர் அபிவிருத்திப் பணிகள், வேளாண் - வேளாண்சார் தொழில் உபகரணங்கள் - கால்நடை பராமரிப்புப் பணிகள் போன்றவற்றைக் கற்றுத்தருவது முக்கியமானது.
ஈர நிலங்கள் பாதுகாப்பு
உலக இயற்கை நிதியம் (WWF-India), நொய்யல் பவானி ஆற்றுப் படுகையில், கடந்த 2 ஆண்டுகளாகப் பணி மேற்கொண்டு வருகிறது. நொய்யல் நதி, காவிரியாற்றின் கிளை நதிகளில் ஒன்றாகும். இந்த நதி பல கிராமங்கள் - இரு பெரிய தொழில் நகரங்களான கோயம்புத்தூர் - திருப்பூரினூடே பாய்ந்து சென்று கரூர் அருகே காவிரியாற்றில் கலக்கிறது. நொய்யலை ஆதாரமாகக் கொண்டு சோழர்கள் 32 அணைக்கட்டுகளைக் கட்டினார்கள் என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவற்றில் தற்போது 23 அணைக்கட்டுகளே உள்ளன. அதேபோல் சோழர்கள் உருவாக்கிய 40-க்கும் மேற்பட்ட குளங்களில் தற்போது 31 குளங்களே உள்ளன, மற்றவை அழிந்துவிட்டன.
எங்கள் திட்டப் பணியின் ஓர் அங்கமாக, நொய்யல் நதியின் நீர்வடியும் பகுதிகளைப் புனரமைத்தலும், மேம்படுத்துதலும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக ஈர நிலங்கள் பாதுகாப்பு என்ற உத்தியைக் கையில் எடுத்துள்ளோம். எந்த ஒரு நீர்நிலைக்கும் ஆதாரமாக விளங்குவது, ஈரநிலங்களே ஆகும். நீர்வடியும் பகுதி பாதுகாப்பில் ஒரு முக்கியப் பகுதியே ஈர நிலங்கள் பாதுகாப்பு.
ஆகவே, முதற்கட்டமாக நொய்யல் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஈர நிலங்களில் ஒரு சிலவற்றை, ஒருங்கிணைந்த ஈர நில மேலாண்மை முறையைச் செயல்படுத்தி முன்மாதிரி ஈர நிலங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். அதனை அந்த ஈர நிலத்தின் பயனாளர்களான அந்தந்தப் பகுதி மக்கள், விவசாயச் சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அரசு துறையினருடன் இணைந்து செயல்படுத்த இருக்கிறோம். இதை நொய்யல் நீர் வடியும் பகுதியிலுள்ள மற்ற ஈர நிலங்களுக்கும் ஒருமித்த எண்ணமுள்ள தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து விரிவுபடுத்த உள்ளோம்.
இவ்வாறு, நீர் வடியும் பகுதிகளைச் சிரத்தை கொண்டு புனரமைத்தால், ஒரு பேராற்றின் ஒவ்வொரு பகுதியும் பாதுகாக்கப்பட்டு செழிப்புறும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் முடியும். நீர் என்பது, தனித்துப் பார்க்கப்பட வேண்டிய பொருள் அல்ல. மாறாக, நிலத்தோடும், அந்நிலப்பரப்பின் மணல் தாது, தாவரம், விலங்கினம், மனிதர்கள் என அனைத்தோடும் தொடர்புடையது நீர்.
- ச.அருண்வெங்கடேஷ்,
நீர் மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
உலக இயற்கை நிதியம், கோவை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago