இன்றைக்கு இயற்கை வேளாண் உலகில் மண்புழு வளர்ப்பு பற்றிய பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலர் மண்புழுவை ஏன் வளர்க்க வேண்டும்? அவைதாம் மண்ணிலேயே இருக்கின்றனவே என்றும், வெளிநாட்டு புழுக்கள் நமக்கு எதற்கு (கலப்பின மாடுகளைப் போல) என்று கூறுபவர்களும் உள்ளனர்.
பொதுவாக மண்புழுக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று, மண்ணின் மேல்புறத்தில் சாணத்தை உண்டு, தம்மைப் பெருக்கிக்கொள்ளும் சாணப்புழுக்கள். இவை ஏராளமான கழிவை உண்ணும் திறன் பெற்றவை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை என்று கருதப்படுபவை. இவற்றில் இரண்டு இனங்களை நமது பண்ணையாளர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
ஒன்று Eisenia fetida , மற்றொன்று Eudrilus eugeniae. இந்த இரண்டும் வெளிநாட்டு புழுக்கள் என்று சொல்லப்பட்டாலும், இவற்றின் மூலப் புழுக்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுவதாக Otto Griff என்ற அறிஞரின் குறிப்புகள் விளக்குகின்றன. இவர் 1917-ல் பிறந்து 2014-ம் ஆண்டில் தன்னுடைய 97-ம் வயதில் காலமானவர். சார்லஸ் டார்வினுக்குப் பின்னர் மண்புழு ஆய்வில் குறிப்பிடத்தக்கவர்.
ஆடு, மாடு, மண்புழு
உலகில் பல இனங்கள் பல சூழலியல் தொகுப்புகளில் தோன்றியிருந்தாலும், அவை பல இடங்களுக்கும் பரவியிருக்கின்றன. இவற்றில் நன்மை செய்பவையும் உண்டு. தீமை விளைவிப்பவையும் உண்டு. புதிய சூழலுக்குப் பல உயிர்கள் நன்கு பொருந்திவிடுகின்றன. நாம் உண்ணும் தக்காளியில் ஆரம்பித்துப் புளி உள்ளிட்ட பல தாவரங்கள் வெளியில் இருந்து வந்தவை. நம்மிடம் இருந்தும் பல தாவரங்கள் மற்ற இடங்களுக்குப் பரவியும் உள்ளன.
இப்போது மண்புழுக்களுக்கு வருவோம். மேலே கூறிய இரண்டு புழுக்களின் தாயகம் சிலர் கூறுவதுபோல ஐரோப்பா அல்ல, ஆப்பிரிக்கா. மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு அவை எடுத்துச்செல்லப்பட்டன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்குச் சில வந்துள்ளன. அவை மனிதர்களால் கொண்டுவரப்பட்டதற்கான தரவுகள் இல்லை. என்றாலும், இயற்கைவழி வேளாண்மைக்கு அடிப்படையான மட்கு தயாரிக்க மிகவும் ஏற்ற உயிரினமாக ஆடு, மாடுகளுக்குப் பிறகு மண்புழுக்களே உள்ளன.
அரசியல் வேண்டாம்
அதிலும் ஆடு, மாடுகளின் கழிவைப் பயனுள்ள புரதங்களாக மாற்றும் திறனுடன் ஈக்கள், பூச்சிகளின் புழுக்களே உலகில் எஞ்சியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் மண்புழுக்கள். இவை மீன்களுக்கும் கோழிகளுக்கும் மிகச் சிறந்த புரதம் நிறைந்த உணவு. இதை மறுப்பது அறிவுக்குச் சற்றும் பொருத்தமற்றது. இவற்றால் எந்தவிதத் தீமையும் ஏற்படவில்லை, எந்த மாசுபாடும் ஏற்படவில்லை. அதற்குச் சான்றாகப் பத்தாண்டுகளைத் தாண்டிய மண்புழுப் பண்ணைகள் உள்ளன. அவற்றில் உள்ள தாவரங்கள் செழித்து வளர்கின்றன.
எனவே, பசு மாட்டு இறைச்சி அரசியல்போல மண்புழு அரசியலும் மாறிவிடக் கூடாது. மண்புழுப் பண்ணை வேண்டாம் என்று விரும்புபவர்கள், தங்களுடைய பண்ணையை மூடாக்கு மூலமாகத் தோட்டப் புழுக்களை (நாட்டுப் புழுக்கள் என்ற சொல்லைத் தவிர்த்திருக்கிறேன்) பெருக்கிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இயற்கைவழி வேளாண்மையில் இதுவும் ஒரு முறை, அவ்வளவுதான்.
மரத்தடி மண்புழு வளர்ப்பு
நமது மண்ணில் உள்ள தோட்டப் புழுக்கள், சாணப்புழுக்களைப் போலக் கழிவை உண்பதில்லை. எனவே, மட்கு தயாரிக்கும் தொழிற்சாலைகளைப் போல, தோட்டப் புழுக்களைக் கொண்ட பல பண்ணைகள் உருவாகிவிட்டன. அதில் ஒன்றுதான் சத்தியமங்கலம் அருகேயுள்ள உப்புப்பள்ளம் ரவியின் பண்ணை.
முதன்முதலாக மண்புழுப் பண்ணை உருவாக்கிப் பரப்பிய முன்னத்தி ஏர்களில் இவரும் ஒருவர். பல்கலைக்கழகமும், அரசும் தொட்டி கட்டி மண்புழு வளர்க்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தபோது, மரத்தடியில் மண்புழு வளர்க்கும் நுட்பத்தை இவர் வளர்த்தெடுத்தார். இவருடைய முறைக்குச் சிமெண்டும், மணலும், செங்கல்லும் தேவையில்லை.
உண்மையான உழவன்
இவர் மட்கு தயாரிப்பதைவிட, மட்கு தயாரிக்கும் பல பண்ணைகளுக்கு மண்புழுக்களை உருவாக்கிக் கொடுத்துவருகிறார். புழுக்களை மட்டும் அதிகமாக உருவாக்கும் சில நுட்பங்களை வளர்த்துள்ளார். இதன் மூலம் இவரால் லட்சக்கணக்கான புழுக்களை உருவாக்க முடிகிறது. ‘உழவனின் நண்பன் மண்புழு அல்ல, மண்புழுவே உண்மையான உழவன்' என்பது இவருடைய கூற்று.
இவர் தன்னுடைய பண்ணைக்கு ‘உழவராற்றுப்படை' என்ற பெயர் வைத்துள்ளார். “நம்மாழ்வார் அவர்களின் அண்ணன் கோ. பாலகிருட்டிணன் என்னுடைய குருநாதர்” என்று கூறுகிறார். அவரே, பல நுட்பங்களை இவருக்குக் கற்றுக் கொடுத்தவர். எனவே, தனது வீட்டுக்கு `பாலகிருட்டிணன் இல்லம்’ என்றே பெயர் வைத்துள்ளார். இப்படியாக ஒரு வெற்றிபெற்ற பசுமைத் தொழில்முனைவோராக ரவி இன்றைக்கு வலம்வருகிறார்.
(அடுத்த வாரம்: சிறுதானிய மகத்துவம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
உப்புப்பள்ளம் ரவி
தொடர்புக்கு: 9443724779
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago