கிழக்கில் விரியும் கிளைகள் 12: அணையப் போகும் ஜோதி

By கு.வி.கிருஷ்ணமூர்த்தி

பாலை நிலத்தில், வேனிற்காலத்தில், நீர் வேட்கையைத் தணிக்கப் பழங்குடித் தமிழர் இலுப்பைப் பூக்களைத் தின்றனர், பூக்களின் சாறைக் குடிநீர் போன்று பருகினர். பூக்களை அரைத்துப் பாலுடன் கலந்து குடித்தனர். வேடர் குலப் பெண்கள் கீழே உதிர்ந்த பூக்களை ஒன்று திரட்டி, மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து, கிராமங்களுக்குச் சென்று விற்பர் என்று அகநானூறு 381-ம் பாடல் குறிப்பிடுகிறது.

விற்காத பூக்களை அதே மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து வைத்து, நொதிக்கச் செய்து, நாள்பட்டவுடன் சாராயமாக வேட்டுவ மக்கள் குடித்தனர். பூக்களிலிருந்து மட்டுமின்றி, பழச் சதையிலிருந்தும் இத்தகைய சாராயத்தைத் தயாரித்தனர். இது ஒரு டானிக் போன்று செயல்பட்டது. இதன் காரணமாகத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையக் காலத்திலிருத்து அண்மைக் காலம்வரை இந்தப் பூக்களிலிருந்து சாராயம் பெறும் தொழில் காணப்பட்டது.

இதேபோன்று பூக்களிலிருந்து ஆல்கஹாலும், காடியும் தயார் செய்யப்பட்டன. ஒரு டன் இலுப்பைப் பூவிலிருந்து 340 லிட்டர் ஆல்கஹாலைப் பெற முடியும். இந்தத் தொழில் தொடங்கப்பட்டு, பிறகு பெருமளவில் கைவிடப்பட்டுவிட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்புகூட ஒரு கிலோ உலர்ந்த பூக்கள், ஏறத்தாழ 150 ரூபாய்க்கு விற்கப்பட்டன.



கோவில் வெளிச்சம்

இலுப்பை மரத்தில் பூவைப் போன்றே அதிக முக்கியமாகக் கருதப்பட்டது இலுப்பை விதை. இலுப்பை விதை எண்ணெய் (விதையின் எடையில் 20-30 %) நாட்டார் தெய்வ வழிபாட்டில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. பின்பு பெருந்தெய்வ வழிபாட்டுக் கோயில்களும் இந்த எண்ணெயை விளக்கேற்றப் பயன்படுத்தின. கிராமப்புறப் பகுதிகளில் கடவுள் வழிபாடும் அதனோடு தொடரும் நிகழ்வுகளும் இரவில்தான் பொதுவாக நடைபெறும். அப்போது தீவட்டிகள் கொளுத்த இலுப்பை எண்ணெய்தான் பயன்படுத்தப்பட்டது. பெருந்தெய்வக் கோயில்களிலும் கடந்த மூன்றாண்டுகள்வரைகூட இலுப்பை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது.

இதற்காகவே இலுப்பைக் காடுகளும் தோப்புகளும் கோயில்களுக்கு அருகில் வளர்க்கப்பட்டன. இலுப்பைத் தோப்புகள் கோயில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டது பற்றி பல இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. கிராமங்களிலும் பழங்குடி மக்கள் வாழ்ந்த காட்டுப் பகுதிகளிலும் திருவேட்டை, வசந்தத் தோப்பு போன்ற பண்டைய கோயில் விழாக்களின்போதும், மக்கள் வாழ்ந்த பகுதியில் உள்ள கடவுள் விக்ரகம் காடு அல்லது தோப்புப் பகுதிக்கு இரவு தொடங்கும்போது எடுத்துச்செல்லப்பட்டு இலுப்பெண்ணெய் தீவட்டி வெளிச்சத்தில் மக்களால் மகிழ்ந்து கொண்டாடப்பட்டது.

எண்ணெய் கூடுதல் பயன்

பழங்குடி மக்களால் மீன் பிடிக்கவும் எலிக்கொல்லியாகவும் இலுப்பெண்ணெய் பயன்படுத்தப்பட்டது மட்டுமின்றி தோல் நோய், மலம் கட்டுதல், மூட்டுப் பிடிப்பு, தலைவலி, பாம்புக் கடி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. இலுப்பை எண்ணெயில் அதிக அளவு சப்போனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் பழங்குடியினரால் ஷாம்பு போன்றும் பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து சலவை சோப்பு தயாரிக்கப்பட்டது (குளியல் சோப்பில் பயன்படுத்தப்படுவதில்லை, ஏனெனில் இது எளிதில் சிக்கு பிடித்துவிடும்). சோப்பு தவிர மெழுகுவர்த்தித் தயாரிப்பிலும், எஞ்சின் எண்ணெயாகவும், ஸ்டியரிக் அமிலத் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்பட்டது. சப்போனின் நீக்கப்பட்டு, நன்கு சுத்திகரிக்கப்பட்ட இலுப்பெண்ணெயை சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.

எண்ணெய் நீக்கப்பட்ட இலுப்பைப் பிண்ணாக்குத் தூள், அரப்புத் தூளைப் போன்று பழங்குடி மக்களால் குளியலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இது கால்நடைத் தீவனமாகவும், உரமாகவும் செயல்பட்டது. கிராம மக்கள் பிண்ணாக்கை எரித்துப் பாம்புகள், பூச்சிகள், கொசுக்கள் போன்றவற்றை விரட்டினர்.

இலுப்பையின் சரிவு

பழங்குடி மக்களும், கிராம மக்களும் பல வகைகளில் பயன்படுத்திவந்த நெட்டிலை இலுப்பை தற்போது பெருமளவு ஒதுக்கப்படுவது வருத்தம் தருகிறது. பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தமிழக மரம் எண்ணிக்கையில் அதிவேகமாகக் குறைந்துவந்துள்ளது. 1950-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்த இந்தத் தாவரம், தற்போது 10,000 கூட இல்லை என்பது பெரும் வருத்தமளிக்கிறது.

இதற்கு முக்கியக் காரணங்கள் கோயில்களோடு இருந்த இலுப்பைத் தோப்புகள் தற்போது அழிக்கப்பட்டுவிட்டதும், சாலைகள் அகலமாக்கப்பட்டதால் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டதும், இலுப்பையின் பாரம்பரியப் பயன்பாடுகள் தற்போது தொடர்ந்து காணப்படாமையும், புதிய இலுப்பைக் கன்றுகள் நடப்படாமையும்தான்.

காப்பாற்றுவோம்

தமிழகத்தில் 1960-ம் ஆண்டு வருடாந்திர இலுப்பை விதை உற்பத்தி 6,000 டன்னாக இருந்தது; தற்போது இது 1,000 டன்கூட இல்லை. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் காணப்படும் நெட்டிலை இலுப்பை அழிவை நோக்கிச் செல்லும் தாவரமாக ஐ.யு.சி.என்., என்ற பன்னாட்டு அமைப்பால் வகைப்படுத்தப்பட்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

எனவே, போர்க்கால அடிப்படையில் இலுப்பை மர வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமூகக் காட்டுத் திட்டங்கள் மூலம் கிராமங்களிலும் சாலையோரங்களிலும் இது அதிகமாக வளர்க்கப்பட வேண்டும். வெளிநாட்டு மரங்களுக்குப் பதிலாக இலுப்பை மர வளர்ப்பை மக்களும் அரசும் ஊக்குவிக்க வேண்டும்.

பாரம்பரிய இலுப்பைப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்ற மாநிலங்களில் அகன்றிலை இலுப்பையின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும், அதே அளவுக்கு நெட்டிலை இலுப்பை பாதுகாப்புக்குத் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டும். எப்பாடு பட்டாவது நெட்டிலை இலுப்பை காப்பாற்றப்பட வேண்டும்.

(அடுத்த வாரம்: மாகாளி என்ற மணக்கும் ஊறுகாய்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்