உயிரினங்கள், தாவரங்கள் எனத் தம்மைச் சுற்றியுள்ள இயற்கை அம்சங்களைத் தெரிந்துகொள்ளும் பேரார்வம் எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்பிலேயே உண்டு.
உயிரினங்களை உற்றுக் கவனிப்பது, அவற்றின் ஒலிகளைத் திரும்ப எழுப்புவது ஆகிய பண்புகளைக் குழந்தைகளிடம் பார்க்கலாம். இவற்றுக்குக் காரணம் தாங்களும் ஒரு பெரிய உயிரினக் கூட்டத்தின் உறுப்பினர்தாம் என்று குழந்தைகள் உள்ளூர உணர்வதுதான். குழந்தைகள் பேசும் முதல் 50 சொற்களில், தாவரங்கள்/விலங்குகளின் பெயர்கள் தவறாமல் இடம்பெறுகின்றன என்கிறது ஓர் ஆய்வு.
நாகரிகமும் அறிவியலும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் மனித இனம் தன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்தே உயிரினங்களைப் புரிந்து கொள்கிறது. மனித அம்சங்களை ஒத்தி ருக்கும், பிரதிபலிக்கும் உயிரினங்கள் நம்மை ஈர்க்கின்றன. அதேநேரம் சில உயிரினங்கள் மீது மனித இனத்தின் உடல், மனரீதியான பண்பு களை ஏற்றிவைக்கவும் செய்கிறோம். இது மனிதப் பண்பேற்றம் (Anthropomorphism) எனப்படுகிறது.
தொட்டுத் தொடரும் கற்பிதம்
மனிதப் பண்பேற்றம் செய்வது இன்று நேற்று நடப்பதல்ல; மிகப் பழமையானது. எல்லா நாட்டு நாட்டார் கதைகளிலும் மனிதப் பண்பேற்றம் செய்யப்பட்ட உயிரினங்களைப் பார்க்கலாம். ஓநாய்கள் குரூர மானவை, நரிகள் தந்திர மானவை, சிங்கம் அரச பண்புகளைக் கொண்டது என்பது போன்ற பல கற்பிதங்கள் கதைகளிலிருந்து தோன்றியவை.
‘முதலைக் கண்ணீர்’ என்கிற உருவகம் பல இடங்களில் பயன்படுத்தப்படுவதைப் பார்த்திருக்கலாம். ‘ஊனுண்ணியான முதலை போலியாகக் கண்ணீர் விடுகிறது’ என்கிற அடிப்படையில் உருவான உருவகம் இது. உண்மையில் முதலை அழுவ தில்லை. உடலில் அதிகப் படியாக இருக்கும் உப்பை வெளியேற்றும் உத்தி அது என்பது அறிவியல்ரீதியில் பின்னால் விளக்கப்பட்டது.
மனிதர்கள் அழுதால் சோகமாக இருக்கிறார்கள் என்று பொருள். அந்தப் புரிதலை முதலைகளின் மீதும் ஏற்றி வைத்துவிட்டோம்.
அபிமானம் பெறும் உயிரினங்கள்
ஓங்கில் (டால்ஃபின்) மனிதர் களைக் கவர்ந்த உயிரினங்களில் ஒன்று. அதன் வாய் அமைப்பு சிரிப்பதைப் போன்று தோன்றுவதால், அவை மகிழ்ச்சியான உயிரினங்கள் என்கிற எண்ணம் மனிதர்களிடையே பதிந்துவிட்டது. உண்மையில் எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியின்போது மனிதரைப்போல் சிரிப்பதில்லை. ஆனால், சிரிக்கும் தோற்றம் கொண்ட உயிரினம் மனிதர்களுக்கு நெருக்கமானதாகத் தெரிகிறது.
பாண்டா கரடிகள் பலருக்கும் பிடித்தமான உயிரினம். காரணம் அவை மனிதர்களைத் தாக்குவ தில்லை. தரையில் அமர்ந்தபடி கைகளால் உணவை எடுத்து உண்ணும் பழக்கம் கொண்டவை அவை. பாண்டாக்களின் கொழுத்த உடல், பெரிய கண்கள், சற்றே பெரிய தலை போன்றவை மனிதக் குழந்தையின் உருவப் பண்புகளோடு ஒத்துப்போகின்றன. குழந்தை களின்மீது இயற்கையாகவே அன்பும் பாதுகாப்பு உணர்வும் மனிதர்களுக்கு உண்டு என்பதால், அந்த உணர்வு பாண்டா கரடிகளின் மீதும் ஏற்படுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.
திசைதிருப்பல்
ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் மேல் மனிதப் பண்பேற்றம் செலுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது சூழலியலுக்கும் உயிரினங்களின் பாதுகாப்புக்கும் மிகவும் முக்கியம். சில வேளைகளில், மனிதரைப் போன்றிருப்பதாகக் கருதப்படும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கிறது. ஓங்கில், பாண்டா கரடிகளின் பாதுகாப்புக்குப் பரவலான ஆதரவு கிடைக்கிறது. அதேபோல் சிட்டுக்குருவிகள் மீது அதிகரித்துவரும் திடீர் கரிசனம் மற்றொரு எடுத்துக்காட்டு. இந்த மனப்பான்மை ஆபத்தாக முடிவதும் உண்டு.
அதேநேரம் கானமயில், அலங்கு, காண்டாமிருகம், தாவரங்கள், பூச்சிகள் உள்படப் பல்வேறு உயிரினங்களின் பாதுகாப்புக்கு மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை. மனிதப் பண்பேற்றத்தால் சில உயிரினங்களுக்குக் கிடைக்கும் பிரபலத்தன்மை, அவற்றின் பாதுகாப்புக்கு உதவினாலும் பெரும்பாலான உயிரினங்களின் பாது காப்பு, உயிரினப் பன்மை சமநிலை ஆகியவற்றை உறுதிசெய்ய உதவுவதில்லை.
தேவை முறையான புரிதல்
தோற்றத்திலோ நடத்தையிலோ மனிதர்களைச் சில வகைகளில் ஒத்திருக்கும் உயிரினங்களுக்கே கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. சட்டங்கள், திட்ட வரைவுகள், அரசுகளின் நிதி ஒதுக்கீடு போன்றவையும் இதுபோன்ற உயிரினங்களுக்கே கிடைக்கிறது என்று 2007-ல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வுக்கட்டுரையில் மார்டின்-ஃபோரெஸ் குறிப்பிட்டுள்ளார். மனித உருவம்/மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உயிரினங்கள்தாம் பாது காப்புக்குத் தகுதியானவை என்கிற மனிதர்களுடைய எண்ணத்தின் நீட்சி இது.
முறையான அறிவியல்பூர்வ புரிதலைப் பெறும்போது மனிதப் பண்பேற்றம் தவிர்க்கப்படக்கூடியதே. சூழலியல் பாதுகாப்பில் பார பட்சம் காட்டப்படுவதற்கு மனிதப் பண்பேற்றம் முக்கியக் காரணமாக இருக்கிறது. அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே சூழலியலா ளர்களின் வலியுறுத்தல். இந்தப் புவி அனைத்து உயிரினங்க ளுக்கும் சொந்தமானது. எனவே, அனைத்து உயிரினங்களும் சம உரிமையுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதானே சரியாக இருக்கும்!
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர், தொடர்புக்கு: nans.mythila@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago