கரோனா நோய்த்தொற்று உள்ளவர் களைக் கண்டறிவது (கரோனா வைரஸ் நோயாளி களின் வியர்வையில் ஏற்பட்டுள்ள வளர்சிதை மாற்ற அடையாளங்களை மோப்பம் மூலம் அறிய சிப்பிப்பாறை நாய்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சியளித்து வருகிறது) முதல் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ உரைவரை பேசுபொருளாகியுள்ள தமிழகத்தின் பெருமைக்குரிய வேட்டைநாய் இனங்களான சிப்பிப்பாறை/கன்னி நாய்களைப் பற்றிப் புதிய அறிமுகம் தேவையில்லை. இணையத்தில் தேடினால் தகவல்கள் கொட்டும்.
ஜல்லிக்கட்டு எழுச்சியின்போதே மரபுசார்ந்த கால்நடை இனங்களின் மீதான ஆர்வம், படித்த நகர்சார் இளைஞர்கள் மத்தியில் உருவாகத் தொடங்கியது. நாளுக்குநாள் நாட்டு நாயினங்கள் மீது ஆர்வம் அதிகரித்து இணையத்திலும் முகநூலிலும் பலர் தேடி படிக்கிறார்கள். அவற்றை வாங்கவும் முன்வருகிறார்கள். இதை முன்வைத்து நாட்டு நாயினங்களுக்குப் பெரிய சந்தை உருவாகியுள்ளது.
உண்மையில் முன்பைவிட நாட்டு நாய்கள் இப்போது எண்ணிக்கையில் அதிகரித்திருக்கின் றன. ஒரு நாயின் விலை ரூ. 8 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரைகூட நிர்ணயம் செய்யப்படுகிறது. இரண்டு மாவட்டங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் இனமாக இந்த நாய்கள் இன்றைக்கு இல்லை. நாளும் பொழுதும் வேட்டைநாய்கள் பெருக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
சொல்லப்போனால் நிறைய அழகான நாய்கள்கூட இதற்கிடையில் உற்பத்தி செய்யப் படுகின்றன. மேம்போக்காகப் பார்க்கப் போனால் இது நாட்டு நாய்களுக்கு ஏற்பட்டுள்ள மறு மலர்ச்சிதானே, பொற்காலம்தானே எனக் கேட்கத் தோன்றும். ஆனால், கள எதார்த்தம் வேறு.
எண்ணிக்கை முரண்
எப்படித் தீவிரமாக நாட்டு நாய்கள் பெருக்கப் படுகின்றனவோ, அதைவிடத் தீவிரமாக அவை அழிந்துகொண்டும் வருகின்றன. இந்த முரணைப் புரிந்துக்கொள்ளாமல், தரமான நாட்டு நாய்களை நம்மால் கண்டடைய முடியாது. அழிகிறது என்றால் அதற்கான காரணகர்த்தா யார்? நாட்டு நாய்கள் அழிவதற்கு யார் காரணம்?
நாய்களைப் போட்டிபோட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார்களே அவர்களேதான். இது சார்ந்த தெளிவைப் பெறுவதன் மூலம்தான் தரமான நாய்களை இனம்காண முடியும்.
இணையம் நமக்கு வழங்குவது தகவல்களைத்தானே ஒழிய அறிவை அல்ல. முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சூழலில் நாட்டு நாயினக் குட்டிகள் பிறப்பதைப் பொறுத்து வாங்குவோர் எண்ணிக்கை இல்லை. வாங்கும் கூட்டத்தைப் பொறுத்துத்தான், குட்டிகளின் எண்ணிக்கை பெருக்கப்படுகிறது. ஆக, வாங்குவோர் மட்டுமே இங்கே தரநிர்ணயம் செய்பவர்களாக மாறிவிடுகிறார்கள். அவர்களோ வேட்டை நாய்களைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள். இணையம் வழியாக அவர்கள் அறிந்த சொற்ப லட்சணங்கள் மட்டுமே தரநிர்ணயத்துக்கு அளவுகோலாகக் கொள்ளப்படுகின்றன.
அவையே முதன்மை அம்சங்கள் என்று அப்பட்டமாக நம்புகிறார்கள். பழமையை மீட்டெடுக்கிறேன் என்கிற பெயரில் நாட்டு நாயினங்களின் பன்முகத்தன்மையை உணராதவர்கள் இவர்கள். அவர்கள் பரப்புவதே நாய்களுக்கான அடையாளமாக மாறிவருகிறது.
தவறான தரநிர்ணயம்
நாட்டு நாய்களுக்குப் பலரும் முன்வைக்கும் அடையாளங்கள் இண்டே இரண்டுதாம். ஒன்று, ‘நல்ல உயரமான குட்டியாக இருக்க வேண்டும்’, இரண்டு, ‘இந்த நிறத்தில்தான் எனக்குக் குட்டி வேண்டும்’.
இந்த இரண்டு அம்சங்களை மட்டும் அளவு கோலாகக்கொண்டு அசுர வேகத்தில் உற்பத்தி தொடங்கிவிடுகிறது. தரமான நாய்களில் சில உயரமான நாய்களும் உண்டு. அதேநேரத்தில் உயரம் மட்டும் நாய்களுக்கான தரநிர்ணயம் அல்ல. இந்த எளிய உண்மையை இணையமும் சரி சந்தையில் கடை விரிப்பவர்களும் சரி, வாங்க வருபவர்களுக்கு உணர்த்த முயலவே இல்லை.
முன்பு வேட்டைநாய்களில் தரமான நாய் எது என்பதை நாய்களுடைய உறுதி, உடல்வலு, வேட்டையாடும் பண்பு, கூர்மை போன்றவை தீர்மானித்தன. அந்தப் பண்பு உள்ள நாய்கள் மட்டுமே இனவிருத்தி செய்யப்பட்டுப் பெருக்கப் பட்டன. இன்று அதற்கான களங்கள் இல்லை.
வலுவற்ற உயரமான நாய்கள்
இன்று, தோற்றமே முதன்மையாக்கப்படுகிறது, திடமல்ல. உயரமே முதன்மையாக்கப்பட்டு உள்ளது, நாய்களின் ஆரோக்கியமல்ல. வடிவமே முதன்மை பெறுகிறது, தரமான நாய் அல்ல. முன்பும் உயரமான நாய்கள் இருந்தன. ஆனால், அந்த அடிப்படையில் அவை பெருக்கப்படவில்லை என்பதால் உயரத்துடன் உரமும் வாய்ந்த நாய்கள் நிலைத்துநின்றன.
இன்றைக்கோ எங்கு பார்த்தாலும் இரண்டரை அடி உயரமுள்ள நாய்களே ‘பிராண்ட் மாடல்’ ஆகிவிட்டன. தொடர்ந்து உயரத்தை மட்டுமே முதன்மையாகக்கொண்டு நாய்களை உற்பத்திசெய்து அழகாகக் காட்சிப்படுத்துகிறார்கள். மக்களும் அலை மோதிக்கொண்டு ஓடிப்போய் அவற்றையே வாங்குகிறார்கள். விளைவாகக் கிடைப்பது எல்லாம் வலுவில்லாத சோளத்தட்டை போன்ற கால்களைக் கொண்ட ‘ஷோகேஸ் நாய்கள்’ தாம். இன்றைய தேதியில் சதைப்பிடிப்புள்ள வேட்டை நாய்களைக் காண்பதே அரிதாகிவிட்டது.
நிறம் சார்ந்த கற்பிதம்
இரண்டாவது அம்சமோ இன்னும் மோசம். ‘இந்த நிறம் மட்டுமே வேண்டும்’ என்று வலியு றுத்தப்படுவது. ராஜபாளையம் நாயினத்துடன் ஒப்பிடும்போது பல நிறங்களில் வேட்டை நாய்கள் வருகின்றன. ஊர் வழக்கிலே சாமப் புள்ள, மயிலப்புள்ள, கீரிப்புள்ள, கருவுனபுள்ள, சந்தனப்புள்ள உள்ளிட்ட 20 நிறங்களுக்கு மேல் அவற்றில் அடங்கும். உடல் அமைப்பிலும் பல வேறுபாடுகள் உண்டு. பல நிறங்களில் பிறப்பதே அந்த இனத்துக்கு அடிப்படையான அடையாளம். அவற்றிலிருந்து ஒரு நிறத்தை மட்டும் பிரித்தெடுத்து, அவற்றை மட்டுமே தொடர்ந்து இனவிருத்தி செய்தால் என்ன ஆகும்?
நிச்சயம் அவற்றின் தனித்தன்மை ஒரு கட்டத் தில் குறுகிவிடும். ராஜபாளையம் நாயி னத்தில் முக்கியக் குறைபாடாக உருவெடுத்து நிக்கும் செவிட்டுத்தன்மைகூட அத்தகைய விளைவே.
வேட்டை நாய்களில் அப்படியான குறைபாடுகள் இப்போதைக்கு இல்லை. ஆனால், அவற்றுக்கான தொடக்கப்புள்ளிகளை தற்போது பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, உங்களைக் கவரும் நாய் கன்னி (அதாவது கருப்பு) என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே நாட்டு நாயினத்தைச் சேர்ந்த ஐந்து வெவ்வேறு நிறக் குட்டிகள் உங்கள் முன்பு இருக்கின்றன. இந்த இடத்தில் உங்களுடைய தேர்வு என்னவாக இருக்கும்? நல்ல ஆரோக்கியமான குட்டியா அல்லது பிடித்த நிறமுள்ள குட்டியா?
நினைவில் கொள்ளுங்கள் தரமான நாய்கள் எந்த நிறத்திலும் வரும். அதே வேளையில் ஒரு நிறத்தை மட்டும் (எ.கா. கருப்பு) நீங்கள் தேர்வுசெய்யும்போது, உங்கள் கைக்கு வந்துசேர்வது அந்த நிறம் கொண்ட நாய்தானே அன்றி, தரமானதல்ல.
இனத்தையே இழக்கப்போகிறோமா?
"நான் பணம் கொடுக்கிறேன். எனக்குப் பிடித்ததைக் கேட்கிறேன். இதில் தவறென்ன?" என்று ஒருவர் கேட்கலாம். நீங்கள் பணம் கொடுக்க முடியும் என்பதாலேயே, ஓர் இனம் தரமிழப்பதற்குக் காரணமாக இருக்கிறீர்கள்.
இப்படி யோசித்துப் பாருங்கள். கன்னி நாய்க்குப் பல நிறங்கள் உண்டு. அதில் அரிதான ஒரு நிறத்தில் மட்டும் நம் கவனம் குவிந்தால்? உங்களைப் போலவே பலரையும் அந்த ஒரு நிறம் மட்டும் கவர்ந்தால், அந்தக் கவர்ச்சி தனிச்சந்தையை உருவாக்கிவிடும். சந்தையில் அதற்கு மட்டுமே மவுசு இருக்கும். இதனால் நாட்டு நாய் இனவிருத்தி செய்பவர்கள், குறிப்பிட்ட நிற நாய்களை இனவிருத்தி செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள்.
ராஜபாளையம் நாய்களைச் சர்வநாசப்படுத்திக் கொண்டிருக்கும் உள்ளினப்பெருக்கம் (Inbreeding) மற்ற நாய் இனங்களிலும் நடைபெற்றால் என்ன ஆகும்? திடம், வலு, ஆரோக்கியமுள்ள எல்லாக் குட்டிகளும் புறந்தள்ளப்பட்டு, நிறம் மட்டுமே முதன்மை பெறும். அப்போது இழப்பு அந்த நாயினங்களுக்கு மட்டுமல்ல, நம் சமூகத்துக்கும் பண்பாட்டுக்கும் சேர்ந்ததுதான், இல்லையா!
கட்டுரையாளர், நாட்டு நாய் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago