வைகைக்கு உயிர்தரும் மேகமலை

By செய்திப்பிரிவு

மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த உழவர்கள் 2018ஆம் ஆண்டு பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். 'வைகை தண்ணீர் எங்கள் பகுதிக்கு வரவில்லை, நாங்கள் எப்படி விவசாயம் செய்வது? எங்களுக்கு வைகை தண்ணீர் வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து நடத்தப்பட்ட போராட்டம் அது.

அது மிகப்பெரிய சாலை மறியல் போராட்டமாக மாறி சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்தச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு உழவர் கூறியது நெஞ்சில் அறைந்ததுபோல் இருந்தது “நாங்கள் விவசாயம் செய்யாமல், நீங்க என்னத்த சாப்பிடப் போறீங்க? மண்ணையா சாப்பிடுவீங்க?”

அந்த உழவர்களின் கோரிக்கை களுக்கும் கேள்விகளுக்கும் எதிர்காலத்திலாவது பதில் கிடைக்கும் செயலை மேற்கொண்டி ருக்கிறது தமிழக அரசு. இதனால் பயனடையப்போகிற மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலோ எந்தச் சலனமும் இல்லையே. அப்படியென்ன அறிவிப்பு? ‘வில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம்' குறித்த அறிவிப்புதான் அது. நாம் இதைக் கொண்டாடியிருக்க வேண்டும்.

வளம் செழித்த வைகை

தேம்ஸ் நதியாக வைகை மாறும் என்கிற வாக்குறுதி களும் கரையோரத்தில் மரங்கள் நட்டால் நதிகள் வளம்பெறும் என்கிற திசைதிருப்பும் கூக்குரல்களும் மக்களிடம் நம்பிக்கையிழந்துவிட்டன.

ஆனால், அரசின் தற்போதைய அறிவிப்பு நிஜமாகவே கொண்டாடப்பட வேண்டியது. அது ஏன்? ஐந்து மாவட்டங்களில் உள்ள ஒரு கோடி மக்களின் குடிநீர்த் தேவையை வைகை பூர்த்திசெய்கிறது. இரண்டு லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு வைகையே நீராதாரம்!

ஒரு காலத்தில் வைகை ஆறு இயற்கையின் படைப்பில் வடகிழக்குப் பருவமழை மூலம் நீர் பெற்று வளமாக ஓடியது. சங்க இலக்கியத்தில் புகழேந்திப் புலவர் பாடிய பாடல் வரிகளின் மூலம் இதை அறிந்துகொள்ள முடியும். “வாரி இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து நடத்தும் தமிழ் பாண்டிய நாடு”.

வைகை தனது இரு கரைகளிலும் வாய்க்கால்கள் வழியாக வாரி வாரித் தண்ணீரை வழங்கி பாண்டிய நாட்டைச் செழுமை அடையச்செய்கிறது என அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.இதுதான் பண்டைய வைகையின் செழுமை.

வளம் தொலைந்தது

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வைகைக்கு நீர் தரும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பணம் கொழிக்கும் பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக நீராதாரத்தை இழக்க ஆரம்பித்தது வைகை. இதனால் வைகைக் கரையோர மக்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் செத்து மடியத் தொடங்கினர்.

டெய்லர் என்கிற பாதிரியாரின் நாட்குறிப்பில் இரண்டுலட்சம் மக்கள் வறட்சியால் இறந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்கும் நோக்கில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்தன. இது ஆங்கில அரசுக்குத் தீராத தலைவலியாக மாறியது. இந்த மக்களை மீண்டும் உழவுக்குத் திருப்ப, வைகையை வளம் பெறவைக்க வேண்டும் என எண்ணினர். அதற்கான திட்டவரைவாக ராமநாதபுரம் மன்னரின் அமைச்சரான முத்து அருளப்பரின் ஆய்வறிக்கை ஆங்கிலேய அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதுதான், மேற்கு நோக்கிப் பாயும் பெரியாற்றைக் கிழக்கு நோக்கித் திருப்பும் ‘முல்லைப் பெரியாறு திட்ட வரைவு’.

ஆங்கிலேய அரசு இந்தப் பெரும் திட்டத்தை கர்னல் பென்னி குயிக்கிடம் ஒப்படைத்தது. பெரும் சவால்கள் நிறைந்த இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பென்னி குயிக் எட்டு ஆண்டுகளில் 1895இல் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இந்தத் திட்டத்தில் இறந்தவர்கள் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேல். கட்டி முடிக்கப்பட்டு முல்லைப் பெரியாறு நீர் வைகைக்கு வந்து, வைகை மீண்டும் வளம் கொழிக்க ஆரம்பித்தது.

வைகை வளம் பெற்றதும் பாசன பரப்பும் அதிகரித்தது. இதனால் இன்றைய தேனி மாவட்ட விவசாயிகளுக்கும் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மட்டுமே வைகை பயன்பட்டுவருகிறது. ஏனைய மாவட்டங்கள் வறண்டு போய் வானம் பார்த்த பூமியாகிவிட்டன, இதனால்தான் வைகையின் கீழ்ப்பகுதி உழவர்கள் நீரின்றிப் போராட்டத்தில் இறங்கினர்.

வைகைக்குப் புத்துயிர்

தற்போதைய வைகை ஆறு, முல்லைப் பெரியாறு அணை மூலம் 80 முதல் 85 சதவீதம் நீரைப் பெறுகிறது. 10 முதல் 15 சதவீதம் நீர் வைகையின் மூலாதாரமான மேகமலை பகுதிகளின் மூலம் கிடைக்கிறது; அதுவும் மழைக்காலத்தில் மட்டும்.

மணல் குறைந்துவிட்டதால் வருடம் முழுவதும் ஓடிய வைகை, ஒரு சில நாள்கள் காட்டாறாக ஓடி மறைகிறது. இதனால் வைகைக் கரையோரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயராமல் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் வறண்டுவிட்டன.

வைகைக்கு நீர் தரும் மேகமலையும் முல்லைப் பெரியாறுக்கு நீர் தரும் பெரியாறு புலிகள் காப்பகத்துக்கும் இடைப்பட்ட தூரம் 25 கிலோமீட்டர். அங்குள்ள பசுமைமாறா காடுகள் நிறைய மழை நீரைச் சேகரித்து வைக்கக்கூடியவை. ஆனால், இன்றைக்கு நீரின்றி அழியும் நிலையில் மேகமலைக் காடுகள் இருக்கின்றன. இந்தக் காடுகளை மீண்டும் பசுமைமாறா காடுகள் ஆக்கி, வைகையில் நீர் வரச் செய்யும் சீரிய முயற்சியே 'வில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம்'.

உயிர்பெற்ற தாமிரபரணி

இது எப்படிச் சாத்தியமாகும்? தமிழ்நாட்டிலேயே சிறந்த எடுத்துக்காட்டு உள்ளது. பொருநை என்பது தாமிரபரணி ஆறு. தமிழ்நாட்டில் ஆரம்பித்து தமிழ்நாட்டிலேயே முடிந்துவிடும் ஆறு. 1970-களில் தாமிரபரணி நீராதாரப் பகுதிகளில் லட்சக்கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டன. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி 1980-களில் வறண்டுபோனது. தாமிரபரணி வறண்டதால் அதை நம்பியிருந்த இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் தண்ணீருக்கு அலைபாய்ந்தன.

1988இல் தாமிரபரணிக்குத் தண்ணீர் தரும் காடுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட அன்றைய அரசு, உலக வங்கியின் உதவியோடு களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகமாக அறிவித்து, அங்குள்ள காட்டை மேம்படுத்துவதற்குத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியது.

அன்றைய வனத் துறையின் உதவியால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தால் காடுகள் வளம்பெறத் தொடங்கின. மீண்டும் காடு உயிர்பெற்றது. அன்றைய காட்டையும் 2010இல் எடுக்கப்பட்ட காட்டின் பசுமையையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நல்ல விளைவு

1946ல் இருந்து 1990 வரை, அணைக்குத் தண்ணீர் வரத்து ஆண்டுக்குச் சராசரியாக 13 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆனால், புலிகள் காப்பகம் உருவான பிறகு, அதாவது 1990க்குப் பின், காரையாறு அணைக்கு வந்த சராசரி நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்று சேர்வலாறு அணைப் பகுதியில் 1990 முதல் 2000ம் ஆண்டிற்கிடைப்பட்ட காலகட்டத்தில் பெய்த ஆண்டு சராசரி மழையளவு 654 மி.மீ. 2000 முதல் 2010 வரையிலான பத்தாண்டுக் கால சராசரி மழையளவு 1183.5 மி.மீ. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உருவானதன் விளைவு இது. இன்றைக்குத் தாமிரபரணியில் எட்டு முதல் பத்து மாதங்கள் வரை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

புலிகள் காப்பகம் என்பது புலிகளைப் பாதுகாப்பது மட்டுமல்ல. ஒரு புலி வாழ 100 சதுர கிலோ மீட்டர் கொண்ட காடு தேவை. புலிகளின் தேவைக்கு மான்கள் வேண்டும். மான்கள் வாழ காடுகள் தேவை. அந்தக் காடுகள் உருவாக நாளொன்றுக்கு 30 கிலோமீட்டர் இடப்பெயர்வின் மூலம் தனது லண்டத்தால் (கழிவு) ஊட்டச்சத்துள்ள விதைகளைப் பரப்பும் யானைகளும் தேவை. எனவே, புலிகளைக் காப்பது என்பது காடுகளைப் பாதுகாத்து ஆறுகளில் தண்ணீரை மேம்படுத்தும் ஒரு முயற்சிதான்.

ஈடன் தோட்டம்

வைகைக்கு நீர் தரும் 1,016 சதுர கிலோமீட்டர் காட்டை புலிகள் காப்பகமாக அரசு அறிவித்துள்ளது, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள மேகமலையை ‘தமிழ்நாட்டின் ஈடன் தோட்டம்' எனக் குறிப்பிடலாம்.இங்கே ஐந்து வகைக் காடுகள் உள்ளன. புலி, சிறுத்தை, செந்நாய், காட்டு மாடு, யானை, மான், நகமற்ற நீர்நாய், கேளையாடு, சருகுமான், இருவாச்சிப் பறவை, கருநாகம் என மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பெரும்பாலான உயிரினங்கள் இங்கே உள்ளன.

தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு 250-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இங்கே வாழ்கிறது, அழிவின் விளிம்பில் உள்ள சோலை மந்திகள் (சிங்கவால் குரங்குகள்) மேகமலையில் உயிர் வாழ்கின்றன. ஆனால், பெரும்பாலான உயிரினங்கள் ஆரோக்கியமான எண்ணிக்கையில் இல்லை.

புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டிலிருந்து பத்து ஆண்டுகள் கழித்து, அதற்கான பலனை வைகை ஆறு பாயும் ஐந்து மாவட்ட மக்கள் அனுபவிக்க முடியும். எதிர்கால தலைமுறை வாழ நிகழ்கால தலைமுறை செய்திருக்கும் பாராட்டத்தக்கச் செயல்பாடுகளில் இது மிக முக்கியமானது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்