கிழக்கில் விரியும் கிளைகள் 9: ஓர் அதிசய மரக்கொடி

By கு.வி.கிருஷ்ணமூர்த்தி

கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கிழக்கு மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளில் நான் மேற்கொண்ட கள ஆய்வுகளின்போது, என்னை அடிக்கடி வியப்பில் ஆழ்த்திய ஒரு தாவரம் எதுவென்று கேட்டால், அது யானைக் கொழிஞ்சிதான். சில்லு, இரிக்கி, வட்டவள்ளி என்று தமிழிலும், எண்டடா ரீடிஐ என்று தாவரவியலிலும் (தாவரக் குடும்பம்: மைமோசேஸி) அழைக்கப்படும் இந்தத் தாவரம், ஒரு மரக்கொடி (liane) வகையைச் சேர்ந்தது.

நன்கு வளர்ந்த நிலையில் இந்தத் தாவரம் ஒரு மரமொத்த அடித்தண்டு (Trunk) பகுதியையும், பெரிய கிளைகளையும் கொண்டிருந்தாலும், இலைகளைத் தாங்கியிருக்கும் தண்டுத் தொகுதிகள் அருகிலுள்ள பெரிய மரங்களின் கிளைகளைப் பற்றிக்கொண்டு அவற்றைச் சுற்றிச் சுற்றி வளர்கின்றன. பற்றுதலுக்குச் சிற்றிலைகளின் மாற்றுருக்களான, இரண்டாகக் கிளைத்த பற்றுக்கம்பிகளை (Tendrils) இந்தத் தாவரம் கொண்டுள்ளது. எனவே, இந்தத் தாவரம் ஒரு மரம், ஒரு ஏறு கொடி (Climber), ஒரு சுற்றுக்கொடி (Twinner) ஆகிய மூன்றின் பண்புகளையும் ஒரு சேரப் பெற்ற, வியப்பு ஏற்படுத்தும் தாவரமாகத் திகழ்கிறது.

ஆர்கிமிடீஸ் சுருள்

அடித்தண்டு தொடங்கி, சிறு கிளைகள்வரை இதன் சுற்றுக்கொடி இயல்பு தெளிவாகப் புலப்படுகிறது. இதன் சுருள் எப்பொழுதுமே இடது - வலது என்ற கடிகாரத் திசைக்கு எதிர் திசையிலேயே அமைகிறது. இந்தச் சுருளுக்கு ஆர்கிமிடீஸ் சுருள் என்று பெயர். விதை முளைக்கத் தொடங்கியதிலிருந்து இந்தத் தாவரம் ஒரு பற்றுக்கொடியாகவும் சுற்றுக்கொடியாகவும் செயல்பட்டு வருவது ஒரு விந்தையே.

இந்த மரக்கொடி இந்தியா, ஆப்பிரிக்கா, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் இலையுதிர் மற்றும் பகுதி - இலையுதிர் காடுகளில் காணப்பட்டாலும், தென்னிந்தியாவின் கிழக்கு மலைத்தொடரில் இது பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த தாவரமாகத் திகழ்ந்து வந்துள்ளது. ஏறத்தாழ 30 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடிய இந்த மரக்கொடியின் அடித்தண்டு 2.1 மீட்டர் தடிப்பை அடிப்பகுதியிலும், 1.7 மீட்டர் தடிப்பை மார்பு உயரத்திலும் கொண்டுள்ளது. இதன் மேற்கிளைகள், அருகிலுள்ள பல மரங்களைப் பற்றிப் படர்வதால் காட்டில் ஒரு பந்தல் போட்டது போன்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது.

வியக்க வைக்கும் கனி

கிழக்கு மலைத்தொடர் பகுதியில் இந்தத் தாவரம் பொதுவாக மார்ச் - மே மாதங்களில் பூக்கிறது. பல பூக்கள் தோன்றினாலும் ஒரு சில கனிகள் மட்டுமே வளர்கின்றன. கனிகள் முதிர்ந்த நிலையில் உலர்ந்த தோற்றத்துடன், அதிக வியப்பை ஏற்படுத்துபவை. இந்தக் கனிகள் இரண்டு அல்லது ஆறு அடி உயரம்வரை காணப்படலாம். கனிகள் போன்ற அமைப்பைக் கொழிஞ்சி கொண்டிருந்தாலும், கனிகளின் ராட்சஷ உருவம்தான் இந்தத் தாவரத்துக்கு யானைக் கொழிஞ்சி என்ற பெயர்வரக் காரணம்.

இதன் ராட்சஷ கனிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. உயரத்துக்கு ஏற்பக் கனிகள் 5 முதல் 30 விதைகளைப் பெற்றிருக்கும். விதைகள் வட்ட வடிவமானவை, பளபளப்பான - வழவழப்பான பரப்பைக் கொண்டவை, பெரிய புளியங்கொட்டையைப் போன்றவை, அடர் பழுப்பு அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். கனிகள் முற்றிலும் வளர எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்ளும். கனி வெடித்து விதைகள் பரவ மேலும் ஓர் ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளும்.

இந்தத் தாவரத்தின் இளம் கிளைகளையும் இலைகளையும் யானைகள் விரும்பி உண்ணும். அரக்கு மலைப்பகுதியிலும், நல்லமலைப் பகுதியிலும், கொல்லி மலைப்பகுதியிலும் உள்ள பழங்குடி மக்கள் ஓரளவு முதிர்ந்த இவற்றின் கிளைகளை வெட்டி அவற்றிலிருந்து வழிந்தோடும் நீரைக் குடித்துத் தம்முடைய தாகத்தைப் போக்கிக்கொள்வதை நேரில் பார்த்திருக்கிறேன். நானும் இந்த நீரைக் குடித்துள்ளேன்.

(அடுத்த வாரம்: காணாமல் போகும் வியப்பு)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்