பேசப்படாத பிரச்சினை: காலநிலை மாற்றமும் பெண்களும்

By செய்திப்பிரிவு

காலநிலை மாற்றம் என்பது மனித இனம் முழுவதற்கு மான அச்சுறுத்தல். ஆனால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை அதேபோல் பொதுமைப் படுத்திவிட முடியாது. விளிம்புநிலை மக்கள், பெண்கள், ஏழைகள், கறுப்பின மக்கள், பழங்குடியினர் ஆகியோர் ஒப்பீட்டளவில் கூடுதலாகப் பாதிக்கப்படுவார்கள்.

காலநிலை நீதி (Climate justice) என்கிற கருத்தாக்கம் இந்த வேறுபாடுகளை அடிப்படையாகக்கொண்டு, அதன் அடிப்படையில் தீர்வுகளை முன்வைக் கிறது. பாலின வேறுபாடு என்பது இதில் முக்கியமானதொரு பேசுபொருள். பல்வேறு சமூகக் கூறுகளோடு பின்னிப் பிணைந் திருப்பதால், காலநிலை மாற்றத்தால் யார் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இது தீர்மானிக்கிறது.

பெண்கள் சந்திக்கும் பாதிப்புகள்

காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பன்முகத்தன்மை கொண்டவை. சமூகக் கட்டமைப்பு, சார்ந்திருக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மதம், சாதி, இனம், வர்க்கம், கல்வியறிவு, குடும்பச் சூழல், வசிப்பிடம் எனப் பல்வேறு காரணிகளைப் பொறுத்து அது மாறுபடும். எல்லா பெண்களையும் ஒன்றுபோல் அணுகி, பாதிப்புகள் இப்படி மட்டுமே இருக்கும் என்று அறுதியிட்டுவிட முடியாது. ஆனாலும் உலகளாவிய சில ஆய்வுகள், வரலாற்றுச் சான்றுகள், சமூக அறிவியல் மேற்கொண்டுள்ள குறுக்கு வெட்டு ஆராய்ச்சிகள் ஆகியவற்றை முன்வைத்து சில பொதுவான பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. காலநிலை நீதிக்கான வரையறைகளில், பெண்மய்யத் தீர்வுகளை முன்வைப்பதற்கு இவை ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும்.

உணவு - நீர்த் தட்டுப்பாடு

காலநிலை மாற்றத்தால் உணவுப் பாதுகாப்பும் நீராதாரங்களும் பெருமளவில் பாதிக்கப்படும். பல சமூகங்களில் குடும்பத்துக்குத் தேவையான குடிநீரை எடுத்து வருவது பெண்களின் வேலையாகக் கருதப்படுகிறது. நீராதாரங்கள் அழியும்போது, பெண்கள் நீருக்காக அதிக தொலைவு பயணிக்க வேண்டி யிருக்கும். உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, கிடைக்கும் உணவாதாரங்களை வைத்துக்கொண்டு வீட்டில் உள்ள அனைவருக்கும் உண வளிக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பெண்கள் தள்ளப்படுவார்கள். பெண் களும் சிறுமிகளும் ஏற்கெனவே ஊட்டச்சத்து, இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ள சமூகங்களில், இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். பாலின வேறுபாடு ஆதிக்கம் செயல்படுத்தப்படுகிற குடும்பங்களில், பெண் குழந்தைகளுக்குப் போதுமான உணவு கிடைக்காமலும் போகலாம்.

குடும்பங்களுக்குள் பணிச்சுமை

காலநிலை மாற்றத்தால் வாழ்வாதார இழப்பு ஏற்படும்போது, புலம்பெயர்தல் அதிகரிக்கும். கிழக்காசிய - ஆப்பிரிக்க நாடுகளில், பெண்களைவிட ஆண்களே அதிகம் புலம்பெயர்ந்து நகரத்துக்குச் சென்று புதிய வாழ்வாதாரங்களைத் தேடுகி றார்கள். கிராமங்களில் குழந்தைகளோடும் வயதானவர்களோடும் தனித்து விடப்படும் பெண்களுக்கு, தனியாகக் குடும்பத்தைப் பேணவேண்டிய கட்டாயம் ஏற்படும். பல குடும்பங்களில் பெண்களே முதன்மைப் பேணுபவர்களாக (Primary Caregivers) இருப்பதால், பாதிப்புகள் ஏற்படும்போதெல்லாம் அவர்கள் மீதான எதிர்பார்ப்பும், அவர்களுக்கான பணிச்சுமையும் அதிகரிக்கும்.

காலநிலைப் பேரிடர்கள்

காலநிலை மாற்றத்தால் பேரிடர்கள் தாக்கும்போது, பெண்களுக்கும் சிறுமி களுக்குமான பாதிப்பு பல மடங்கு அதிகரிக் கிறது. பேரிடர்களின்போதும் பேரிடர்கள் நிகழ்ந்த பின்னரும் ஏற்படும் அவசரக்கால சூழலில், பெண்களுக்கான பாதுகாப்பு கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. இதுபோன்ற நேரத்தில், பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கெதிரான வன்முறை ஆகியவற்றின் விகிதம் அதிகரிக்கிறது. பேரிடர்களை அடிக்கடி எதிர்கொள்ளும் நாடுகளில், பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பதையும் ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன. பேரிடர்க் காலத்தில், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதிய பெண்கள் ஆகியோருக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ உதவியும் தடைப்படுகிறது. பேரிடர்க் காலத்தில் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதில் இருக்கும் சிரமங்கள் நாம் அறிந்தவையே. இது போன்ற பாதிப்புகள், பெண்களின் உடல்நலனைப் பாதிக்கின்றன.

பெண்களின் கல்வி

காலநிலையால் இருப்பிடத்தை இழக்கும் குடும்பங்கள் புலம்பெயரும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன. இவ்வாறு புலம்பெயரும் குடும்பங்களில் குழந்தைகளின் கல்வி தடைப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஆண் குழந்தைகளோடு ஒப்பிடும்போது, பெண்குழந்தைகளின் கல்வி இருமடங்கு கூடுதலாகப் பாதிக்கப்படுகிறது என்கிறது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR). பெண் கல்வி குறித்த சமூக மதிப்பீடுகள் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

காலநிலை அரசியலின் பாலின வேறுபாடு

பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதித்துவம்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பெண்களுக்கு அதிகம் என்கிறபோதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கொள்கை முடிவுகளிலும் திட்டங்களிலும் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பது சூழலியல் பெண்ணியவாதிகளின் முதன்மைக் குற்றச்சாட்டு. “பாலின சமத்துவத்துக்கான முன்னெடுப்புகள் இல்லாமல், காலநிலை நீதி என்கிற இலக்கை நாம் அடைய முடியாது”, என்று அவர்கள் அழுத்தமாகச் சுட்டிக்காட்டு கிறார்கள்.

அந்தந்த நாடுகளின் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் காலநிலை குறித்த பேச்சுவார்த்தைகளின்போது பங்கேற்கும் பெண்களின் விகிதம் 30 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சூழலியல் அறிஞர் டயானா லிவர்மன். பிரதிநிதித்துவம் மட்டுமே அனைத்தையும் சாதித்துவிடாது என்கிறபோதிலும், அடிப்படையான பிரதிநிதித்துவம்கூட கிடைக்காத அவலச் சூழலே நிலவுகிறது.

காலநிலை புரிதலும் தீர்வுகளின் அரசியலும்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேசப் பேச்சுவார்த்தைகளிலும் சரி, அதைக் களத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களிலும் சரி, பாலின வேறுபாடு அதிகம் நிலவுகிறது. இந்த வேறுபாடு, காலநிலை நீதியை மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தைப் பற்றிய புரிதலையும் அணுகுமுறையையும்கூட பாதிக்கிறது என்கிறார் அறிஞர் ஸ்டெரிலின் மக்கெரகர்.

“காலநிலை மாற்றம் என்பது ஒரு போர் என்கிற உலகளாவிய புரிதல் நிலவுகிறது. சர்வதேசத் தலைவர்கள் ஆண்மய்யச் சிந்தனையோடு அதை அணுகுகிறார்கள். போருக்காக ராணுவத்தைத் தயார்செய்யும் தளபதிகளைப் போல, தொழில்நுட்பத் தீர்வுகளைப் பற்றி மட்டுமே அதிகம் விவாதிக்கிறார்கள். இதற்கு நடுவே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சமூக விளைவுகளைப் பற்றிய புரிதல் அடிபட்டுப்போகிறது” என்று 2010இல் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றத்தையொட்டிய தனிமனித முன்னெடுப்புகளைப் பற்றியும் இதே விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. சூழலியல் பாதுகாப்பில் தனிப்பட்ட பங்களிப் பாகச் சொல்லப்படும் பெரும்பாலான தீர்வுகள், வீடுகளில் பெண்களுக்கான வேலைகளை அதிகரிக்கின்றன. தீர்வுகளைச் செயல்படுத்துவதில் பெண் களுக்கான பங்களிப்பும் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதேநேரத்தில் சூழலியல் அக்கறை, பொதுநலன் என்ற பெயரில் பெண்களின் உழைப்பு அளவுக்கதிகமாக சுரண்டப்படுகிறதா என்கிற சூழலியல் பெண்ணியவாதிகளின் கேள்வியும் முக்கியமானது.

ஏற்கெனவே ஊதியம் இல்லாமல் பெண்கள் செய்யும் வீட்டு வேலையே (Unpaid domestic labour) உரியக் கவனத்தை இன்னும் பெறவில்லை எனும்போது, இதுபோன்ற தனிமனிதத் தீர்வுகளை விவாதமின்றி ஏற்க முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, மரபுசார் வாழ்க்கைக்குத் திரும்புவது என்பது, பல சூழலியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், மரபுசார் வாழ்க்கை முறையில் உள்ள பாலின வேறுபாடுகளால் பெண்களுக்கே பணிச்சுமை அதிகரிக்கிறது.

காலநிலை அரசியலைப் பொறுத்தவரை, பாதிக்கப்படுபவர்கள் - தீர்வுகளைச் செயல்படுத்துபவர்கள் (Victims & Saviors) என்கிற இரு வகைகளில் மட்டுமே பெண்கள் பேசப்படுகிறார்கள். கேள்வி எழுப்பும் இடத்திலோ, திட்ட வரையறைகளின்போது பங்கெடுப்பவர் களாகவோ அவர்களுக்கான அங்கீகாரம் தரப்படுவதில்லை என்பது காலநிலை செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு.

அதனாலேயே காலநிலை மாற்றத்துக்கான பல தீர்வுகளிலும் பாலின வேறுபாடு மலிந்திருக்கிறது. பாலினம், சாதி, மதம், இனம் என்று பல வேறுபாடுகளால் பிளவுண்டு கிடக்கும் சமூகத்தில், காலநிலை மாற்றம் என்கிற ஒரு பிரச்சினையும் கூடுதலாகச் சேர்ந்துகொண்டுள்ளது என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வேற்றுமைக்கான பொதுக் காரணிகளைச் சேர்க்காமல், காலநிலை மாற்றத்தை மட்டும் தனித்து விவாதிக்கவும் முடியாது. அப்படிப்பட்ட தீர்வுகள் ஏட்டளவில் மட்டுமே வெற்றிபெறும். குறுக்குவெட்டு அரசியல் (Intersectional politics) என்கிற கருத்தாக்கம் உலக அளவில் முன்னெடுக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தையும் இந்தப் பின்னணியில்தான் அணுகவேண்டும்.

காலநிலை விவாதங்களில் பெண்களுக்கான கூடுதல் பிரதிநிதித் துவம், பாலின சமத்துவத்துக்கான பொதுவான சமூக நகர்வுகள், ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படவிருக்கும் காலநிலை பாதிப்புகளைப் பற்றிய விரிவான கள ஆய்வுகள், கள ஆய்வுகளை முன்வைத்து தனித்துவமிக்க தீர்வுகள் ஆகியவை தற்போதைய உடனடித் தேவை. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டங்களில் பெண்கள் முக்கிய பங்களிப்பை வழங்கிவருகிறார்கள் என்று நாம் மகிழ்ச்சியடையும் அதே சூழலில், களத்தில் பாதிக்கப்படும் பெண்களின் நிலையை மாற்றும் முயற்சிகளிலும் கவனம் செலுத்தியாக வேண்டிய கடமை நம் முன் உள்ளது.

கட்டுரையாளர்,
கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு:nans.mythila@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்