இரவில்தான் காடு விழித்துக்கொள்கிறது. விலங்குகள் தங்களது இணையின் விருப்பம் அறிய, ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்கும். பகல் பொழுதில் கேட்டறியாத பறவைகளின் மொழியை இரவில் கேட்கலாம்! காற்றில் வாசனையைப் பரப்பி பதிலுக்குக் காத்திருக்கும் சில பட்டாம் பூச்சிகளை இரவில் பார்க்கலாம்
புலியைப் போல் முகத்தோற்றம், பின்னங்கால் வலுவற்று இருப்பதால், நடக்கும்போது கழுதையைப் போல் கால்கள் பின்னுவதால் கழுதைப்புலிக்கு அப்பெயர் வந்திருக்கக்கூடும். அவற்றின் மின்னுகின்ற கண்கள், சேற்று மண் அப்பிய மேனி, மந்தகாச நடை ஆகியவை மனிதப் பார்வைக்கு இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மரநாய் குடும்பத்தின் பிரதிநிதி இது.
பாலூட்டிகளில் சொற்பமான உயிரினங்களில் மட்டுமே பெண்களால் வழிநடத்தப்படும் ‘தாய் வழி சமூகம்’ நிலவு கின்றது. திமிங்கிலம், யானை, சிங்கம் போன்றவற்றோடு கழுதைப்புலிகளும் இந்தப் பண்பைக் கொண்டுள்ளன. குழுவிற்கு எது சிறந்தது என்று தெரிந்துவைத்துள்ள பெண் விலங்கே தலைமைப் பொறுப்பில் இருக்கும்.
இந்தியாவில்…
கழுதைப்புலிகளின் தாயகம் ஆப்பிரிக்கா வெப்ப நிலம். ஆப்பிரிக்கா தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய வெப்பநிலப் பகுதிகளில் நான்கு வகையான கழுதைப்புலிகள் வாழ்கின்றன. இவற்றில் புள்ளிக் கழுதைப்புலிகள் உருவத்தில் பெரியவை! அவையும் அடர் பழுப்புநிற கழுதைப்புலி, ஆர்ட்வுல்ப் (Aardwolf) வகைக் கழுதைப்புலிகளும் ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன!
அடர்த்தியான கறுப்பு நிறத்தில் ஏழு முதல் ஒன்பதுவரை கோடுகள் கொண்ட வரிக் கழுதைப்புலிகள் இந்தியாவில் உள்ளன. அதுவும் தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், சீகூர், தெங்குமரகடா போன்ற திறந்தவெளிக் காடுகளில் எண்ணிக்கையில் குறைவாக வாழ்கின்றன. வரிக் கழுதைப்புலிகள் இரவாடிகள். பகலில் இவற்றை எதிர்கொள்வது அரிதிலும் அரிது. பிடரி, தோள், காதுகள், முகம் போன்றவை கறுப்பு நிறத்தில் இருப்பதால் இவற்றை எளிதில் அடையாளம் காண முடியாது.
எலும்பு உணவு
உடலின் முன்பகுதி பெருத்தும், தொண்டை, நெஞ்சுப் பகுதி அகலமாக விரிந்தும் இருப்பதால் மூச்சுக்காற்றை வெகுவாக உள்ளிழுத்து, வேட்டைக்குப் பாயும் வலிமையைக் கழுதைப்புலிகள் பெற்றுள்ளன. கழுதைப்புலிகள் அறுபது விழுக்காடு வேட்டையாடி உணவுத் தேவையை நிறைவேற்றிக்கொள்கின்றன! தனியாகவும், குழுவாகவும் வேட்டையாடி உண்ணும் எல்லாத் திறன்களும் கழுதைப்புலிகளுக்கு உண்டு.
அத்துடன் மற்ற இரைகொல்லிகள் உண்ண முடியாமல் விட்டுச் செல்லும் எச்சங்களை உண்டு, காட்டில் எலும்புக் கூடுகள் சேராமல் கழுதைப்புலிகள் பார்த்துக்கொள்கின்றன. எவ்வளவு கடினமான எலும்புகளாகவிருந்தாலும் அவற்றை உண்டு செரிக்கும் ஆற்றல் கழுதைப்புலிகளுக்கு உண்டு. கழுதைப்புலிகள் இல்லாத காடு, எலும்புகளின் காட்சிக் கூடமாக மாறும்.
துப்புரவுப் பணி
தூய்மையைப் பெருமையாகவும், துப்புரவாளர்களைச் சிறுமையாகவும் நடத்தும் போக்கு மனிதர்களிடம் இப்போதும் உள்ளது. வனப்பகுதிக்குள் குவியும் இறைச்சிக் கழிவு களைக் கழித்துக்கட்டுவதில் கழுதைப் புலிகளின் பங்கு அளப்பரியது.
விலங்கு மந்தையில் நோயால் அவதியுறும் யானைகள், காட்டுமாடுகள், கடமான் போன்றவற்றைக் கழுதைப் புலிகள் தின்று, மந்தையில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுக்கின்றன. அடர்ந்த காட்டுக்குள் இறந்து கிடக்கும் விலங்குகளைத் தேடிப்போகும் கழுதைப்புலிகள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து, அழுகி, புழுக்கள் நெளியும் உடல் பாகத்தைக்கூடத் தின்று தீர்க்கின்றன!
கழுதைப்புலிகளுக்கு ஆகச் சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை இயற்கை கொடுத்துள்ளது. அழுகிய உணவைத் தின்பதாலும் சதைத்துணுக்குகள் உடலில் படிவதாலும் எப்போதும் சகிக்க முடியாத வாசனை கழுதைப் புலிகளிடம் வீசும். இது மற்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
தனித்தன்மைகள்
கழுதைப்புலியின் இரண்டு காலடித் தடங்களும் ஒன்றுபோல் இருப்ப தில்லை. பின்னங்கால் சிறுத்து மெலிந் துள்ளது. முன்னங்கால் பெரிதாக உள்ளது. முன்னங்கால் ஆழப் பதிந்தி ருப்பதிலிருந்து ஒன்றை உணர முடிகிறது. அதிக எடையுள்ள உணவை இழுத்துக்கொண்டு, வசிப்பிடம்வரை சலிக்காது நடந்து போகும் வகையில் உடலமைப்பைக் கழுதைப்புலிகள் பெற்றுள்ளன.
மற்ற விலங்குகளைக் காட்டிலும் கழுதைப்புலிகளின் தாடை விலங்கின ஆய்வாளர்களைப் பெரிதும் வியக்க வைப்பவை. தன்னைவிடவும் இரண்டு மடங்கு வலிமையான விலங்கை வேட்டையில் வீழ்த்தும் தாடையைக் கொண்ட விலங்கு கழுதைப்புலி ஒன்றே....! மற்ற ஊனுண்ணி விலங்குகளால் மென்று தின்ன முடியாத கடினமான எலும்புகளைக் கழித்துக் கட்டவே தமது தாடைத் திறனைப் பயன்படுத்துகின்றன கழுதைப்புலிகள்.
தனித்த ஒலியெழுப்பி தங்கள் குழுவிற்குச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளக்கூடியவை. ஐந்து சதுர கிலோ மீட்டர் தொலைவிற்குக் காடே அதிரும் குரலை எதிரொலிப்பதால் இரவில் மக்களுக்கு அச்சம் தருபவையாகக் கழுதைப்புலிகளின் குரல் இருந்துள்ளது.
காக்கப்படுமா?
வனப் பாதுகாப்பும், வனச் சட்டங்களும் எப்படிப் பழங்குடிகளின் மீது பரிவு காட்டுவதில்லையோ அதேதான் கழுதைப்புலிகளின் விஷயத்திலும் நடைபெறுகிறது. பழங்குடிகள் அல்லாத மனிதக் குடியிருப்புகளுக்கு அருகே வரும் கழுதைப்புலிகள் காட்டின் வெகு தொலைவுக்கு விரட்டப்பட்டு விடு கின்றன. காடுகளுக்குள் விரிவடைந்த வேளாண்மை, குடியேற்றம், சாலைகள், வளர்ச்சித்திட்டங்கள் கழுதைப்புலி களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிட்டன. ஒருகாலத்தில் அவை சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த இடங்களில் தோட்டங்கள், ஆன்மிக மையங்கள், கல்விக் கூடங்கள் முளைத்துள்ளன.
தூய்மையாக இருப்பதால்தான் காடு அழகாக இருக்கிறது. காட்டைத் தூய்மையாக வைத்திருக்கும் கழுதைப்புலிகள் நன்றாக இருக்க வேண்டும். கழுதைப்புலிகளைச் சூழ்ந்திருக்கும் கட்டுக்கதைகள் அகல வேண்டும். காட்டில் அவற்றின் எண்ணிக்கை பெருக அரசும் வனத்துறையும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் விருப்பம்.
கட்டுரையாளர், சுற்றுச்சூழல் எழுத்தாளர்
தொடர்புக்கு: kurinjisadhasivam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago