கிழக்கில் விரியும் கிளைகள் 8: பழங்குடிகளுக்கு உயிரளித்த வாழை

By கு.வி.கிருஷ்ணமூர்த்தி

கிழக்கு மலைத்தொடரின் வாழைப் பயிர் ரகங்களின் இயல் முன்னோடி மற்றும் உறவினர் சிற்றினங்களைப் பாதுகாப்பதிலும், அங்குத் தற்போது காணப்படும் வாழைப் பயிர் ரகங்களில் ஒரு சிலவற்றையாவது பயிராக மாற்றியதிலும் அங்கு வாழும் - வாழ்ந்த பழங்குடி மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். சேர்வராயன் மலையில் உள்ள மலையாளிப் பழங்குடிகளும் அவர்களுக்கு முன்பிருந்த பழங்குடிகளும், ஆந்திரப் பிரதேசத்தில் செஞ்சு, பங்கார், பில், வேறு சில பழங்குடி மக்களும் மேற்கூறப்பட்ட பணிகளில் பெருமளவு பங்களித்துள்ளனர்.

ஏனென்றால், இந்த ரகங்கள் இந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு இன்றியமையாதவையாக இருந்துவந்துள்ளன. இவற்றின் கிழங்குகள், பொய்த்தண்டுகள் (வாழைத்தண்டுகள்) முக்கிய உணவாகத் திகழ்ந்துவந்தது. மேற்கூறப்பட்ட வாழையின் இரண்டு பாகங்களும் உடனடியாக உண்ணப்பட்டது மட்டுமின்றி, எதிர்காலப் பயன்பாட்டுக்கும் பழங்குடி மக்களால் மாற்றப்பட்டன. இவற்றின் தடித்த சீவல்கள் சூரிய வெப்பத்தில் உலர வைக்கப்பட்டு, சேமிக்கப்பட்டுப் பின்பு தேவைக்கேற்ப உண்ணப்பட்டன.

சிறுநீரக மருந்து

பொதுவாக ஒரு பழங்குடிக் குடும்பத்தால் 10 முதல் 50 வாழை மரங்கள் வளர்க்கப்பட்டு, மரம் பூப்பதற்கு முன்பு மூன்று அல்லது நான்கு மரங்கள் தவிர மற்றவை வெட்டப்பட்டு, மேற்கூறப்பட்ட வகையில் உணவாகின. உணவு உண்பதற்காக இவற்றின் இலைகள் பச்சையாகவும் உலர்த்தப்பட்டும் பயன்படுத்தப்பட்டன. வாழை நார்கள் பிரித்தெடுக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டன. எஞ்சியுள்ள மரங்களின் விதைகள் சேகரிக்கப்பட்டு, அடுத்த சந்ததி மரங்களை வளர்க்கப் பயன்படுத்தப்பட்டன.

என்சீட்டே கிளாக்கம் மருத்துவத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் பொய்த்தண்டு வெட்டப்பட்டு அதிலிருந்து வடியும் சாறு வாழையிலைத் தொன்னைகளில் சேகரிக்கப்பட்டுச் சிறுநீரகக் கோளாறுகளுக்கும் ரத்த சோகைக்கும் பழங்குடியினரால் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.

சேர்வராயன் வாழை

இந்தியாவில் தோன்றிய பல வாழை ரகங்களில் கிழக்கு மலைத்தொடர் பகுதியில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்ட சில ரகங்கள் அந்தப் பகுதியிலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பதற்கு மறைமுகச் சான்றுகள் உள்ளன. இவற்றில் முக்கியச் சான்று, அப்பகுதியில் வாழையின் சில இயல் முன்னோடிகளின் உப சிற்றினங்களும், இயல் உறவினச் சிற்றினங்களும் காணப்படுவது.

வாழையின் முன்னோடிகளான மூசா அக்யூமினேட்டாவும், மூசா பல்பிசியானாவும் அவற்றின் முதன்மை இயல் நிலையில் (Primary wild state) தற்போது காணப்படவில்லை. தற்போது மூசா அக்யூமினேட்டாவின் பத்து உப சிற்றினங்களும், மூசா பல்பிசியானாவின் மூன்று உப சிற்றினங்களும் இந்தியாவில் அறியப்பட்டுள்ளன என்பதால், அவற்றில் சிலவாவது கிழக்கு மலைத்தொடர் பகுதியில் வரலாற்றின் ஏதாவது ஒரு காலகட்டத்தில் காணப்பட்டிருக்க வேண்டும். பின்பு சூழலியல் அழிப்பு, நுனி முடித்திரள் நோய், இயல் சூழலிலிருந்து பழங்குடி மக்களின் அழிப்பு / வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் இவை அழிந்திருக்கலாம். இவற்றில் மூசா அக்யூமினேட்டாவின் பர்மானிக்காய்டஸ் உப சிற்றினம் சேர்வராயன் மலையில் இயல் தாவரமாகவும், மூசா பல்பிசியானாவின் அரக்கு ரகம் விசாகப்பட்டினத்தின் அரக்கு மலைச்சாரல் பகுதியிலும் காணப்படுகின்றன.

அலங்கார வாழை

இவற்றைத் தவிரக் கிழக்கு மலைத்தொடர் பகுதியில் சில மூசா உறவுச் சிற்றினங்களும், மூசாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள என்சீட்டே பேரினத்தின் சிற்றினம் ஒன்றும் காணப்படுகின்றன. அவை மூசா ஆர்னேட்டா, மூசா சங்கரிஐ, என்சீட்டே கிளாக்கம்.

மூசா ஆர்னேட்டா விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலும், ஒடிசாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. பூக்கும் வாழை என்று அழைக்கப்படும் இந்தச் சிற்றினத்தில் நல்ல சிவந்த ஆரஞ்சு நிறமுடைய பூ மடல்கள் காணப்படுவதால், இது நல்ல தோட்டத் தாவரமாகத் தென்னமெரிக்க கண்டத்தின் பல நாடுகளில் வளர்க்கப்படுகிறது.

இதன் உண்மையான பிறப்பிடம் இந்தியாவாக இருந்தாலும் உலகின் வேறு சில பகுதிகளுக்கும் பின்னர் விரவலடைந்ததாகக் கருதப்படுகிறது. நிறத்தின் காரணமாகப் பார்க்கக் கவர்ச்சிகரமாக இருக்கும் இதன் பழங்கள் உண்ணத் தகுந்தவை அல்ல, காரணம் விதைகள். மற்ற இயல் மூசா சிற்றினங்களுடன் இது எளிதாகக் கலப்புறும் என்பதால், கிழக்கு மலைத்தொடரின் ஒரு சில வாழை ரகங்களின் தோற்றத்துக்கு மூசா ஆர்னேட்டா காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சாப்பிட முடியாத பழங்கள்

மூசா சங்கரிஐ, விசாகப்பட்டினத்தின் அரக்கு மலைச்சரிவுப் பகுதிகளில் அரக்கிலிருந்து கோரைரோடு மற்றும் காலிகொண்டாவுக்குச் செல்லும் வழிகளில் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பழம் உண்ணத் தகுந்ததல்ல, காரணம் விதைகள். இதன் தலைகீழ் தண்டும் (கிழங்கு) மற்ற வாழைப் பயிர் ரகங்களைப் போன்றதல்ல, இனப்பெருக்கத்துக்கு ஏற்றதும் அல்ல. இதுவும் கிழக்கு மலைத்தொடரின் ஒரு சில வாழைப் பயிர் ரகங்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

மூசா என்ற வாழை பேரினத்துக்கு மிகவும் நெருக்கமான பேரினம் என்சீட்டே. உலகில் ஆறு சிற்றினங்களைக் கொண்ட இதன் இரண்டு சிற்றினங்கள், இந்தியாவில் உள்ளன. அவை, என்சீட்டே சுபர்பம், என்சீட்டே கிளாக்கம். முதல் சிற்றினம் மேற்கு மலைத்தொடரின் கேரளப் பகுதியில் காணப்படுகிறது. இரண்டாவது சிற்றினம் கிழக்கு மலைத்தொடரின் கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் மாவட்டங்களிலும் ஒடிசாவின் சில பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் இது காணப்படுகிறது. இதன் பழங்கள் சிறியவை, மிகக் குறைந்த சதைப்பற்றுடன், வழுவழுப்பான கருப்பு நிற விதைகளைக் கொண்டவை. அடித்தண்டுக்கிழங்கு இனப்பெருக்கத்துக்கு உகந்ததல்ல.

தேவை பாதுகாப்பு

இந்த இயல் முன்னோடிகள் மற்றும் அவற்றினுடைய உறவினர்களின் மற்றொரு முக்கியப் பண்பு, வாழையைத் தாக்கும் பல வைரஸ், பூஞ்சை, உருளைப்புழு, பூச்சி மற்றும் பாக்டீரிய நோய்களுக்கு இவை பொதுவாக உள்ளாவதில்லை. எனவே, பயிர் வாழை ரகங்களில் இந்தப் பண்பைப் புகுத்துவதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் இயல் ரகங்களின் ஜீன்களும் தாவரங்களும் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வாழைகள் அவற்றின் இயல் சூழல்களிலும் இவற்றோடு தொடர்புடைய பழங்குடி மக்களுடனும் சேர்த்துப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.

(அடுத்த வாரம்: அதிசய மரக்கொடி)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்