அச்சுறுத்தும் சென்னைக் காற்று

By ஆதி

உலகில் இறக்கும் ஐந்து பேரில் ஒருவர் காற்று மாசு பாட்டால்தான் இறக்கிறார். இந்தியாவில் அதிக இறப்பை ஏற்படுத்தும் ஐந்தாவது காரணம் காற்று மாசுபாடுதான். இந்த வரிசையில் சென்னையும் சேரக்கூடும் என்கிறது ஓர் ஆய்வு.

சென்னையின் காற்றின் தரம் தொடர்பாகப் புதுடெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல், அறிவியல் மையம் (Centre for Science and Environment -CSE) நடத்திய ஆய்வில், பொதுச் சுகாதார ஆபத்துகள் அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது.

வேதி மாசு

காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்களின் (particulate matter) அளவு 2007-ல் இருந்து 2011க்குள் 193 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதேகாலத்தில் நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு 166 சதவீதம் அதிகரித்திருக்கிறது. நைட்ரஜன் டை ஆக்சைடு வெளியீட்டில் 63 சதவீதம், வாகனங்களில் இருந்து வெளியாகிறது என்று சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.நாட்டின் மற்றப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, சென்னை காற்றில் நுண்துகளின் அளவு குறைவாக இருந்தாலும், உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவைவிட அதிகமே.

தொழிற்சாலைகள் பெருகிய திருவொற்றியூர், மணலி, கத்திவாக்கம் ஆகிய பகுதிகளில் அன்றாட சராசரி மாசுபாட்டு அளவு, இருக்க வேண்டிய அளவைவிட 1.3 மடங்கு மோசமான அளவில் உள்ளது. அதிகபட்சமாக 2 மடங்கு முதல் 2.42 மடங்கு வரை மோசமாக இருக்கிறது.

புற்றுநோய்

அம்பத்தூர், கொளத்தூர், சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறை நடத்திய ஆய்வில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பாலி சைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன், பென்சோ பைரீன் ஆகிய இரண்டும் தேசிய சராசரி அளவைவிட அதிகம் இருந்தன. டீசல் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதே, இந்த வேதி மாசுகள் வெளிப்படக் காரணம்.

டீசலின் தரம் குறைவாக இருப்பது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் சில வகை புற்றுநோய்களை, குறிப்பாக நுரையீரல் புற்றுநோயை டீசல் உருவாக்க அதிக வாய்ப்பு உண்டு என்கிறது. ஆனால், இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் பெட்ரோலியப் பொருள் டீசல்தான்.

யாருக்குப் பாதிப்பு?

சாலைகளை அதிகம் பயன்படுத்துவோர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர், நடந்து செல்பவர்கள், சைக்கிள் ஓட்டிகள்தான் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

பெர்க்லி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2012-ம் ஆண்டு நடத்திய ஆய்வின் முடிவு என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதழில் வெளியாகியுள்ளது. வாகனப் புகையை அதிகம் சுவாசிக்கும் மக்கள் விகிதத்தில் கொல்கத்தா, டெல்லிக்கு அடுத்தபடியாகச் சென்னையே இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

வாகனப் பெருக்கம்

காற்று மாசுபாடு பெருகுவதற்கு வாகன எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருவது முக்கியக் காரணம். 1991-ல் ஆண்டில் சென்னையில் 5 லட்சமாக இருந்த வாகனத் தொகை, இன்றைக்கு 30 லட்சமாக இருக்கிறது. மொத்த வாகனங்களில் கார்கள் மட்டும் 20 சதவீதம், இருசக்கர வாகனங்கள் 55 சதவீதம். ஆனால், இவற்றில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையோ 31 சதவீதம் மட்டுமே. ஒவ்வொரு

நாளும் 800 புதிய இருசக்கர வாகனங்கள் வாங்கப்படுகின்றன.

முக்கிய சாலைகளில் வாகன நெருக்கடி 1984-ல் இருந்ததைப் போல 2008-ல் எட்டு மடங்கு அதிகரித்துவிட்டது. 1993-94-ல் சென்னையின் முக்கிய சாலைகளில் ஒரு மணி நேரத்துக்கு 31-40 கி.மீ. வேகத்தில் செல்ல முடிந்தது. ஆனால், இப்போது மணிக்கு 11-20 கி.மீ. ஆக அந்த வேகம் குறைந்துவிட்டது.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது, நகரில் நெருக்கடியைக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு 2008-ல் வில்பர் ஸ்மித் சமர்ப்பித்த அறிக்கையின்படி, சென்னை சாலைகளின் 27 சதவீதத்தை வாகன நிறுத்தங்களே பிடித்துக்கொள்கின்றன.

காருக்கு ஆதரவா?

சென்னை போக்குவரத்தில் 7 சதவீதப் பயணங்களை மட்டுமே கார்களும், 26 சதவீதப் பயணங்களை மட்டுமே இருசக்கர வாகனங்களும் நிறைவு செய்கின்றன. எனவே, பெருமளவு மக்கள் பொதுப் போக்குவரத்து, நடை, சைக்கிளையே பயணத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், சென்னையில் கார்களுக்கு உதவும் சாலைக் கட்டமைப்பு வசதியே மேம்படுத்தப்படுகிறது, பொதுப் போக்குவரத்து புறக்கணிக்கப்படுகிறது. சிக்னல் இல்லாத சாலைகள், மேம்பாலங்கள், நடை மேம்பாலங்கள் கொண்ட சாலைகள் பாதசாரிகள்

நடந்து செல்வதைத் தொந்தரவு செய்கின்றன, பயணத் தொலைவை அதிகரிக்கின்றன, மோட்டார் வாகனப் பயணத்தை ஆதரிக்கின்றன. அத்துடன், நடந்து செல்ல வேண்டிய தொலைவைக்கூடப் பலரும் மோட்டார் வாகனங்களில் கடப்பதால், மாசுபாடு அதிகரிக்கிறது.

இதை வேறு வகைகளிலும் உணர முடிகிறது. உள்ளூர் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், 2008-09-ல் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 47 லட்சம். அது 2010-ல் 55 லட்சமாகச் அதிகரித்து, 2012-ல் 48 லட்சமாக சரிந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் பேருந்து, ரயில் பயணங்களின் பயன்பாடு குறைந்திருக்கிறது. நேரெதிராக, தனிநபர் வாகனப் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

வரி முரண்பாடு

ஒரு பேருந்து காரைவிட 40 மடங்கு அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், தமிழக வரிவிதிப்பு முறையோ பேருந்துகளுக்கு எதிராகவே உள்ளது. தமிழகத்தில் ரூ.6-10 லட்சம் விலையுள்ள காருக்கு ஆண்டுக்கு விதிக்கப்படும் வரி ரூ. 2,666 முதல் ரூ. 6,666. அதேநேரம் 40 பேர் செல்லும் பேருந்து ஆண்டுக்கு ரூ. 80,000 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது போன்ற அரசு வரிவிதிப்புக் கொள்கைகள் மாறினால் மட்டுமே, காற்று மாசுபாடு குறையும்.

இப்படி, காற்று மாசுபாடு அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும், சிக்கலான வடிவங்களை எடுத்து வருகின்றன. இவற்றைக் களைவதற்குப் பல முனைகளில் தீர்வுகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. பொதுப் போக்குவரத்து முறைக்கு ஊக்கமளித்தல், பொதுப் போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்தல், கார் பயன்பாட்டைக் குறைக்கும் கொள்கை முடிவு, சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு அதிகக் கட்டணம் விதிக்கும் கொள்கை, தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் வரிவிதிப்பு - எரிபொருள் கட்டண நிர்ணயம், நடைபாதைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்