ஆந்திர மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் அவப் புகழ்பெற்ற செம்மரம், டீரோகார்பஸ் சாண்டலைனஸ் (pterocarpus santalinus) என்ற தாவரப் பெயரைக் கொண்டது. பருப்பு வகைத் தாவரங்களை உள்ளடக்கிய ஃபேபேஸி (fabaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது இது.
கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரைகூட இந்த மரத்தைக் குறிப்பதற்குச் செம்மரம் என்ற சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை. செம்மரம் என்ற சொல் வேங்கை, சே, தான்றி, எகினம் போன்ற சிவப்பு நிற வைரக்கட்டைகளைக் கொண்ட (மரத்தின் உட்பகுதி) பல்வேறு மரங்களுக்கான பொதுவான சொல்லாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
வேங்கை மரம்
செம்மரம் என்று தற்போது அழைக்கப்படும் தாவரம், 15-ம் நூற்றாண்டுவரைகூட வேங்கை என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுவந்தது. வேங்கை என்ற சொல், புலியையும் சுட்டி வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் மட்டும் வேங்கை என்ற சொல் 142 பாடல்களில் மரத்தைச் சுட்டும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வேங்கை என்பது ஒரு பேரினப் பெயர். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட சிற்றின மரங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது (மூங்கிலைப் போல).
தற்காலத்தில் வேங்கை என்று அழைக்கப்படும் டீரோகார்பஸ் மார்சூப்பியம் (pterocarpus marsupium) மட்டுமின்றி, செம்மரம் என்றழைக்கப்படும் டீரோகார்பஸ் சாண்டலைனஸ் மரமும் வேங்கை என்ற பொதுச் சொல்லால்தான் அழைக்கப்பட்டிருக்கிறது. நவீன தாவர அறிவியல் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டு சிற்றினங்கள் உள்ளன என்பதை அறியாமலேயே, தமிழிலக்கியம் அவற்றை வேறுபடுத்திக் காட்டியுள்ளது.
மர அமைப்பு
செம்மரத்தின் வைரக்கட்டை குருதி நிறைந்தது. அதனால் 'உதிர வேங்கை' என்ற பெயரும் இம்மரத்துக்கு உண்டு. இதன் வைரக்கட்டை அதிக மணம் கொண்டது. வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் என்று நாலடியார் (80) குறிப்பிடுகிறது. இலைகள் கூட்டு இலைகள், மூன்று சிற்றிலைகளைக் கொண்டவை. பாறைகளின் இடுக்குகளில், குறிப்பாக மலைச்சரிவுகளில் வாழக்கூடிய மரம். சாரல் வேங்கை படுசினைப் புதுப்பூ, முருகு மரண் - அகநானூறு (288 : 3, 4) என்று குறிப்பிடுகிறது. வாழுமிடம் மிகவும் வெப்பமானது. வெப்புள் விளைந்த வேங்கை - புறநானூறு (120: 1) என்கிறது. மலர் மஞ்சள் நிறம் கொண்டது, அதிக மணமுடையது, பண்டைய தமிழ்ப் பெண்கள், ஆண்களால் சூடப்பட்டது. விதை பவழச் சிவப்பு நிறம் கொண்டது.
ஆனால், தற்காலத்தில் வேங்கை என்றழைக்கப்படும் மரம் மேற்கூறப்பட்ட பண்புகளில் இருந்து சற்று மாறுபட்டிருப்பதால், மேற்கண்ட பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது செம்மரமே. இன்றைக்குச் செம்மரம் என்ற பெயர் பரவலாகப் புழக்கத்தில் இருந்தாலும், இம்மரத்தைச் செஞ்சந்தனம் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
செம்மரச் சந்தனம்
செம்மரத்தையும் சந்தனத்தையும் வேறுபடுத்தி அறிவதில் பத்தாம் நூற்றாண்டுவரை பிரச்சினைகள் இருந்துள்ளன. அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் சந்தனம், சாந்து என்ற இரண்டு சொற்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. சாந்து என்ற சொல்லிலிருந்துதான் சந்தனம் என்ற சொல் வழக்குக்கு வந்தது. இந்த இரண்டு மரங்களின் வைரக்கட்டைகளும் அரைக்கப்பட்டோ, கல்லில் உரசப்பட்டோ சாந்து பெறப்பட்டது.
வடநாட்டு மருத்துவ அறிஞர்களான சரகரும் சுஸ்ருதரும் மூன்று வகைச் சந்தனங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஸ்வேத சந்தனம் (வெண் மஞ்சள் நிறச் சந்தனம், சந்தன மரக்கட்டைகளில் இருந்து பெறப்படும்), ரக்த சந்தனம் (சிவப்பு நிறச் சந்தனம், செம்மரக் கட்டைகளிலிருந்து பெறப்படும்), யானைக்குன்றுமணி சந்தனம் (இளம் சிவப்பு நிறமானது, யானைக் குன்றுமணி தாவரக் கட்டையிலிருந்து பெறப்படும்).
ஜப்பான் ரகம்
செம்மரக்கட்டை பல காலமாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்தக் கட்டை மிகவும் வலுவானது, கனமானது, அடர்த்தியானது, உறுதியானது, நிலைத்துச் செயல்படக் கூடியது. கரையான், பூச்சிகளின் தாக்குதல்களை எதிர்க்கக்கூடியது. இரண்டு வகை செம்மர வைரக்கட்டை கள் விற்பனையில் இருந்துவந்துள்ளன.
ஒரு வகை அலையலையான வடிவங்களைக் காட்டும் (wavy grain) ரகம், நல்ல ரகம் என்று அழைக்கப்பட்டது. இது பெருமளவு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கு ஷாமிசென் என்ற இசைக்கருவியைத் தயாரிக்கப் பயன்பட்டது. இதற்கு ஜப்பான் ரகம் என்ற பெயரும் உண்டு. இந்த வகை தற்போது கிடைப்பது அரிது.
மற்றொரு ரகக் கட்டையில் அலை உருவங்கள் காணப்படுவதில்லை. இது சுமார் ரகம் எனப்பட்டது. சந்தையில் அதிகமாகக் காணப்பட்ட இந்த ரகம் விக்ரகங்கள், பொம்மைகள், அலங்கார வீட்டுப் பொருட்கள், வேளாண் கருவிகள், கம்பங்கள், கட்டை வண்டி, கட்டுமானப் பொருட்கள், கருவிகளின் கைப்பிடிகள், படச் சட்டகங்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்பட்டது. தற்போது சந்தன மரத்தைப் போலவே, அரசு நிறுவனங்கள்தான் செம்மரக் கட்டைகளை விற்கின்றன, பெரும்பாலும் ஏலங்கள் மூலம்.
(அடுத்த வாரம்: செம்மரத்துக்கு ஏன் இத்தனை கிராக்கி?)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago