அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையையும் முடிவுகளையும் உலகமே கூர்ந்து கவனித்தது. அமெரிக்கா இப்படிக் கவனிக்கப்படுவதற்குப் பின்னால் பல அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகள் உண்டு. அமெரிக்காவின் கொள்கை முடிவுகள் உலகளாவிய வீச்சைக் கொண்டவை என்பதால் அங்கே நடக்கும் மாற்றங்கள் எப்படிப்பட்டவை என்பதில் உலக நாடுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.
ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராகவிருக்கிறார். காலநிலைமாற்றம் சார்ந்து அவர் முன்வைத்திருக்கும் திட்டங்கள் அறிவியலாளர் களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளன.
தற்போதைய அமெரிக்கச் சூழல்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘மனிதர்களால்தான் தற்போதைய காலநிலை மாற்றம் ஏற்பட்டது (Anthropogenic climate change)’ என்பதை முற்றிலும் மறுத்தார். அதனால், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்கிற பல திட்டங்களை அவர் ஆதரிக்கவில்லை. தூய்மையான ஆற்றலுக்கான திட்டங்களை ரத்துசெய்தார். காலநிலை மாற்றத்தை நம்பாத அதிகாரிகள் பலரை முக்கியப்பொறுப்புகளில் அமர்த்தினார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக அமெரிக்க பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியையும் பெருமளவில் குறைத்தார். தவிர, அவர் பதவி வகித்த காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சூழலியல் பாதுகாப்பு வரையறைகள் தளர்த்தப் பட்டிருக்கின்றன என்று அமெரிக்க ஊடகங்கள் பல சுட்டிக் காட்டுகின்றன.
2017, ஜூன் மாதம், அமெரிக்கா 2015 பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். காலநிலை மாற்றம் சார்ந்த ஒப்பந்தங்களிலேயே மிக முக்கியமானதாகக் கருதப்படும் பாரீஸ்ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது உலக நாடுகளை அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. “அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு பாரீஸ் ஒப்பந்தம் பெரும் தடங்கலை ஏற்படுத்துகிறது. பாரீஸ் ஒப்பந்தம் நியாயமற்றது, அமெரிக்காவுக்கு அதனால் நஷ்டம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார். பாரீஸ் ஒப்பந்த விதிமுறைகளின்படி இந்த விலகல் 2020 நவம்பர் 4-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
அமெரிக்க விலகலால் ஏற்படும் சிக்கல்கள்
பசுங்குடில் வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் நாடுகளில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. காலநிலை மாற்றம் தொடர் பான அமெரிக்கக் கொள்கை களும் திட்டங்களும் உலகளாவிய காலநிலை மேலாண்மையைப் பெருமளவில் பாதிக்கின்றன. அதனால், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால் பல சிக்கல்கள் ஏற்படும் என்று 2017-ல் வெளியான ஆய்வுக் கட்டுரையில் யாங் சியாங் சான் உள்ளிட்ட அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்:
1. பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது, உலக அளவில் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள செயல்திறனை அதிகம் பாதிக்கும். ஏனென்றால், இதுபோன்ற ஒரு முக்கிய ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டால், அது உலக நாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவை மாற்றியமைக்கக்கூடும். அந்தச் சூழலில், உலக நாடுகள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதில் சுணக்கம் ஏற்படலாம்.
2. பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதன் மூலம் உலகளாவிய காலநிலை மாற்றம் சார்ந்த முன்னெ டுப்புக்களுக்கான நிதியுதவி யையும் அமெரிக்கா நிறுத்தியிருக்கிறது. ஆகவே, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளுக்கான நிதி குறையும். குறிப்பாக, வசதி குறைந்த நாடுகளுக்குக் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மானியங்கள் கிடைக்காது.
3. மற்ற உலக நாடுகளுக்கு இது ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கும். இதைக் காரணமாகக் காட்டி மற்ற நாடுகளும் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலக சாத்தியம் இருக்கிறது.
4. அமெரிக்காவின் விலகல், காலநிலை மாற்றம் சார்ந்த நீதிக்கு (Climate Justice) எதிரானது. அமெரிக்கா போன்ற பெரிய நாடு விலகிக் கொண்டதால், சிறிய, வளரும் நாடுகள் மீதான நெருக்கடி அதிகரித்திருக்கிறது. ஆகவே, தங்கள் சக்திக்கு மீறிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அந்த நாடுகள் தள்ளப்படுகின்றன.
ஜோ பைடனின் திட்டங்கள்
அதிபராகப் பதவியேற்ற உடனேயே பாரீஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைக்கவிருப்பதாக பைடன் உறுதியளித்திருக்கிறார். அமெரிக்காவுக்குத் தற்போது இருக்கும் நான்கு பெரிய அச்சுறுத்தல்களில் காலநிலை மாற்றமும் ஒன்று என்று பேசிய பைடன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் காலநிலை சார்ந்த திட்டத்தையும் முன்வைத்திருக்கிறார். தூய்மையான, சூழலை மாசுபடுத்தாத ஆற்றல், சுற்றுச்சூழல் நீதி, வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகிய எல்லா வற்றையும் உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தபத்து ஆண்டுகளில் ஆற்றல் துறையில் 400 பில்லியன் டாலர் முதலீடு செய்துமுற்றிலும் மாசற்ற ஆற்றலை உற்பத்திசெய்யப்போவதாக பைடன் அறிவித் திருக்கிறார்.
2050ஆம் ஆண்டுக்குள் நிகர பசுங்குடில் வாயு உமிழ்வை (Net Emissions) முற்றிலுமாகக் குறைக்கவிருப்பதாகவும் பைடன் தெரிவித்திருக்கிறார். தவிர, அதிபர் ட்ரம்ப் தளர்த்திய சூழலியல் வரையறைகளை மீண்டும் நடைமுறைப் படுத்தப்போவதாகவும் பைடன் கூறியிருக்கிறார்.
“பாரீஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவது உலக அளவில் ஒரு முக்கியத் திருப்பமாக இருக்கும்” என்கிறார்கள் காலநிலை அறிஞர்கள். சீனா, தென்கொரியா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட முக்கியமான நாடுகளும் 2050 - 2060-க்குள் நிகர பசுங்குடில் வாயு உமிழ்வைக் குறைத்துப் பூஜ்யமாக்கு வதாக வாக்களித்திருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவது மேலும் பல நாடுகளை ஊக்கப்படுத்துவதாக அமையும். பாரீஸ் ஒப்பந்தம் வெற்றிபெற வேண்டுமானால் எல்லா நாடுகளும் தொடர்ந்து பங்களிப் பதும், அவ்வப்போது தங்களது முன்னேற்றத்தைச் சுயபரிசீலனை செய்துகொள்வதும் அவசியம். அந்த வகையில் பார்த்தால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயல் பாடுகளில் அமெரிக்காவின் வருகை ஒரு நல்ல முன்னெடுப்பாகவே அமையும்.
பைடனுக்குச் சில தடைகள்
அமெரிக்க செனட்டில் தற்போதைக்கு பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு பலம் குறைவாகவே இருக்கி றது. 2021 ஜனவரியில் ஜார்ஜியாவில் நடக்கவிருக்கும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றால் மட்டுமே இந்த நிலை மாறும். ஆகவே, திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது செனட் உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தால், அது ஒரு தடங்கலாக அமைய லாம். செனட் உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத பட்சத்திலும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் உண்டு. ஆனால், அவற்றில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
பொதுவாகவே குடியரசுக் கட்சி யினர் காலநிலை மாற்றத்தை மறுக்கிற கருத்தியல் கொண்டவர்கள் என்பதால் இது ஒரு பெரிய தடங்கலாக மாறலாம். உலக அளவில் காலநிலை மாற்றம் பற்றிய தகவல்களைத் திரித்துப் பேசுபவர்கள், மறுப்பவர்கள், காலம்தாழ்த்தி எதிர்வினை புரிபவர்கள் (Disinformers, deniers, delayers) அதிகரித்திருக்கிறார்கள். எனவே, இந்த மாறுபட்ட கருத்தியல் ஒரு தடையாக இருக்கலாம்.
ொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், எண்ணெய் முதலாளி கள் போன்றோரின் தொடர்ச்சியான எதிர்வினைகள் காலநிலை மாற்றம் சார்ந்த முன்னெடுப்புகளில் குறுக்கிடு கின்றன. அதை எதிர்கொள்வது பெரிய ஒரு சிக்கலாக இருக்கும்.
நடைமுறையில் சில சிக்கல்கள் இருந்தாலும், காலநிலை மாற்றத்தின் அவசரநிலையை உணர்ந்து பைடன் முன்வைத்திருக்கும் திட்டங்கள் நம்பிக்கை தருகின்றன. உறுதியளித்தபடி பைடனால் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்தால், காலநிலை மாற்றத்துக்கு எதிரான மனித இனத்தின் போராட்டத்துக்கு அது பேருதவியாக அமையும்.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago