‘புள்ளி எலிமான்' என்றொரு உயிரினம் பற்றிச் சமீபத்தில் பல செய்திகள் வெளிவந்தன. இந்தப் பெயருடன் ஓர் உயிரினம், நம் பகுதிகளில் இருக்கிறதா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. தேடிப் பார்த்ததில், ஆங்கிலத்தில் ஸ்பாட்டட் மவுஸ்டீர் என்று அழைக்கப்படுவதால், ‘புள்ளி எலிமான்‘ என அப்படியே மொழிபெயர்த்துவிட்டார்கள்.
சங்கக் கால உயிரினங்கள் பற்றி பல நூல்களை எழுதியுள்ள பி.எல்.சாமி, தன்னுடைய கட்டுரை ஒன்றில் இந்த உயிரினத்தைப் புள்ளி எலிமான் எனக் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், அது பழைய பதிவு. நம் மரபையே அறியாமல், ஆங்கிலத்தில் உள்ளதை அர்த்தம் புரியாமல் மொழிபெயர்ப்பதால் ஏற்படும் பிரச்சினை இதுவென்று, சூழலியல் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்ந்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
சருகு மான்
இந்த உயிரினத்தின் தமிழ்ப் பெயர் ‘சருகு' மான் என்னும் சொல், தமிழில் இரட்டைக்குளம்பிகளுக்கான பொதுச்சொல்; அதனால் இந்த உயிரினம் மக்கள் வழக்கில் சருகுமான் எனப்பட்டது. இலைச்சருகுகள் இடையே மறைந்து வாழும் தன்மையைக் கொண்டிருப்பதால், இதற்குச் சருகு என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
இக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருந்தாலும் உயிரினங்களுக்குக் காரணப் பெயரைச் சூட்டுவது தமிழ் மரபன்று; ஒன்றிலிருந்து பிரிந்து, இயல்புநிலை திரிந்து பொய்யாக உள்ளவற்றைத்தான் ‘சருகு' என்று அழைப்பது தமிழ் சொல் மரபு (இலைச்சருகு, வெங்காயச்சருகு என்பதைப் போல). மெல்லியதான, ஒடியக்கூடிய தன்மையைச் சுட்டவும் சருகு என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.
மாயம் காட்டும்
அதேநேரம் இந்த உயிரினம் இரட்டைக்குளம்புகளுடன் பார்க்க மான்களைப் போலிருந்தாலும், இந்த உயிரினம் மான் வகையைச் சேர்ந்தது அல்ல; இரட்டைக்குளம்பிகளான இயங்குதிணை உயிரினத்திலிருந்து பிரிந்து, திரிந்துபோய்ச் சரியாகப் பரிணாமவியல் மாற்றம் அடையாத உயிரினம் இது. எனவே தோற்றத்தில் மானைப் போலிருந்தாலும், உயிரின வகைப்படி இது மான் அல்ல. மானைப் போன்ற சருகு என்பதால், சருகுமான் எனப்பட்டது.
இந்தப் பொய்யான தன்மையும் காய்ந்த இலைதழைகளினூடே தன்னுருவை மறைத்து மாயம் காட்டித் திரிவதாலும் இதற்குப் பொய்மான், மாயமான் என்னும் பெயர்களும் உண்டு. சருகு என்னும் இடுகுறிப் பெயரின் தன்மையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், பொய்மான் என்னும் காரணப்பெயராக மாற்றவேண்டிய அவசியம் தமிழ் மரபில் ஏற்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் சருகுமான் பொய்மானாயிற்று. மாரீசன் பொய்மானாக வேடமெடுத்து ஓடினான் என்றால், சருகுமானாக வேடமெடுத்து ஓடினான் என்பதுதான் பொருள். பொய்யான மான் என்று பொருள் காண்பது, பொருள்மயக்கம். கல்கி எழுதிய ‘பொய்மான் கரடு' என்னும் புதினம் நினைவுக்கு வரலாம்.
மறைந்த இயற்கை அறிவு
கடந்த ஓரிரு ஆண்டு கால நாளிதழ்களைப் புரட்டினால் திண்டுக்கல், வில்லிப்புத்தூர், கடையநல்லூர், களக்காடு, தர்மபுரி, நீலகிரி ஆகிய ஊர்ப்புறங்களில் சருகுமான்கள் வேட்டையாடப்பட்ட செய்திகள் வந்துள்ளன. திண்டுக்கல், நத்தம், சிறுமலைப் பகுதிகளில் இந்தச் சருகுமான்கள் இப்போதும் வேட்டையாடப்பட்டுவருகின்றன. சருகுமான்கள் வாழ்வதற்கேற்ற மலைகளும் கரடுகளும் இப்பகுதிகளில் இருப்பதால், இங்கு அவை அதிகமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், இப்பகுதியில் வசிக்கும் வேட்டுவச் சமூகமான வலையர் சாதியில், சருகுவலையர் என்னும் பெரும்பிரிவு உண்டு.
இந்த வேட்டுவச் சமூகத்தினர் சருகுமான்களைக் குலச்சின்னமாக வைத்திருந்ததால் சருகுவலையர் எனப்பட்டனர்; இதுபோன்ற குலச்சின்ன மரபு எல்லாச் சமூகங்களில் உண்டு. ஆனால், பிற்காலத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகள் அற்றுப்போன நிலையில், சருகுமான்களைப் பற்றிய அறிவை மதுரை, திண்டுக்கல் மாவட்ட மக்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். அப்போது, சருகுமான்களின் தோற்றத்தை வைத்து அவற்றைக் காட்டு எலிகள் எனக் கருதி, சருகுவலையர்களை எலிகளோடு தொடர்புபடுத்தினர். அதேநேரத்தில் தங்கள் வயல்களைப் பாழ்படுத்தும் எலிகளைப் பிடிக்க மட்டும், சருகுவலையர்களின் மரபுஅறிவைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இயற்கை பற்றிய அறிவைப் பெரும்பான்மை மக்கள் இழந்து வருவதன் அடையாளமே மேற் கண்டது போன்ற பெயர் குழப்பங்கள், வகைக் குழப்பங்கள். இயற்கை பற்றிய மரபு அறிவைப் பாதுகாக்க சருகுமான் போன்ற பெயர்களையும், அந்த உயிரினங்களையும், சருகுவலையர்களின் அறிவையும் ஒருங்கிணைந்து பாதுகாக்க வேண்டும்.
கட்டுரையாளர், தமிழ் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: Writerchiththaanai@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago