தேசிய காட்டுயிர் வாரம் அக். 2 முதல் 8
இயற்கை மீது அளவுக்கு மீறி ஏன் கைவைக்கக் கூடாது என்பதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால், அதற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்து பதில் வழங்க முடியும். இயற்கை என்பது அழகானது, நாம் அதனுள் உள்ளடங்கும் ஒரு அம்சம்தான் என்றும், இயற்கை என்பது கடவுள் என்றும் பல்வேறு நம்பிக்கைகளிடமிருந்து பதில்கள் வரக்கூடும். ஆனால், லாப - நஷ்டக் கணக்கில் பதில் சொல்ல வேண்டுமென்றால், இயற்கை ஆரோக்கியமாக இல்லாவிட்டால் எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்காது என்றுதான் பதில் சொல்ல வேண்டும். இயற்கையை இப்படி லாப-நஷ்டக் கண்கொண்டு பார்ப்பதுதான் பெரும் ஆபத்து.
ஒரு காட்டை அது விளைவிக்கும் பொருட்கள், அங்கு வேட்டையாடப்படும் உயிரினங்களின் சந்தை மதிப்பு போன்றவற்றையும், ஒரு மலையை அதில் இருக்கும் கனிம வளங்களைக் கொண்டும் மதிப்பிடுவதுபோல்தான் இது. சமீபத்தில் பிளாட்டினம் நிரம்பிய விண்கல் கடந்துபோனபோது, உலகெங்கும் உள்ள ஊடகங்களில் ஒரு செய்தி இப்படி வெளியானது:
‘டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பிளாட்டினத்தைக் கொண்ட விண்கல் புவியைக் கடந்துபோகிறது’ (டிரில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 63,56,545,00,00,000). இவ்வளவு பிளாட்டினம் கொண்ட அந்த விண்கல்லையோ, அது போன்ற விண்கற்களையோ மனிதர்கள் சொந்தம் கொள்ளும் நாட்களைப் பற்றிய பல்வேறு செய்திகளும் வெளியாகின. இப்படியே ஒவ்வொன்றுக்கும் விலைப்பட்டி மாட்டிக்கொண்டே போகலாம். மனித உடலில் உள்ள உறுப்புகளின் விலை ரூ…, கங்கை நதியின் விலை ரூ…, இமயமலையின் விலை ரூ….., வங்கக் கடலின் விலை ரூ…., பசிபிக் கடலின் விலை ரூ…., நிலவின் விலை ரூ…., சூரியனின் விலை ரூ……. மனிதர்களின் பேராசை எவ்வளவு பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கிறது!
இயற்கை சுரண்டல்
இயற்கையின் எல்லைகள் என்பவை திட்டவட்டமானவை அல்ல என்றாலும், அதற்கும் எல்லைகள் இருக்கின்றன. எல்லைக்கோடு எங்கே என்பது தெரியாததாலும், பெரும்பாலும் உடனடி மற்றும் நேரடி விளைவுகள் நம்மை பாதிக்காததாலும், அந்த எல்லைகளை நாம் மீறிக்கொண்டே இருக்கிறோம். இப்படி ஒட்டுமொத்த மனித குலமும் நிகழ்த்தும் மீறலை இயற்கை எந்த அளவுக்குத் தாங்கிக்கொண்டிருக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இயற்கை தன் போக்கில் நிகழ்த்தும் சில மீறல்களான நிலநடுக்கம், ஆழிப் பேரலை போன்றவற்றின்போது நாம் சக்தியற்றவர்களாக, பேச்சிழந்து நிற்கிறோம். அப்படியும் நாம் பாடம் கற்றுக்கொள்வதில்லை. மறுபடியும் நம் மீறல் விளையாட்டைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்.
இயற்கை என்பது நாம் சாராத, நமக்கு வெளியில் உள்ள ஒன்று, இயற்கை என்பது ஒரு பண்டம் என்பது போன்ற சிந்தனைகள்தான் இந்த லாப-நஷ்டக் கணக்குக்கு அடிப்படை. உலகின் நுரையீரல் போன்றவை அமேசான் காடுகள். தினமும் நியூயார்க் நகரம் அளவுக்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உலக அளவில் ஏன் போக வேண்டும்? நம் மதுரைக்கு வாருங்கள். நம் ஊரில் இத்தனை மலை விழுங்கி மகாதேவன்களா என்று ஆச்சரியப்படுமளவுக்கு மதுரையில் மலைகள் காணாமல் போகவில்லையா? இப்படியே இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் சுரண்டிக்கொண்டே போனால் இறுதியில் என்ன மிஞ்சும்?
தேவைகளும் பேராசைகளும்
இன்றைய நம் வாழ்க்கை முறையே, இயற்கையைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வாழ்க்கை முறைக்குள் இருந்துகொண்டுதான் இயற்கைச் சுரண்டலை எதிர்க்க வேண்டிய முரண்பாடும் இருக்கிறது. இந்தத் தருணத்தில் காந்தியின் சொற்களை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது: ‘உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் தேவையைத்தான் இந்தப் பூமியால் பூர்த்தி செய்ய முடியுமே தவிர, அனைத்து மனிதர்களின் பேராசையை அல்ல.’
அளவுக்கு மிஞ்சிய மக்கள்தொகை பெருக்கம், அதன் தேவைகள். இவற்றை பூர்த்தி செய்ய வேண்டுமானால், என்னதான் செய்வது? உடனடியாக எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு, இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த ஆதிகாலத்தை நோக்கித் திரும்ப முடியுமா என்பது போன்ற கேள்விகள் அதற்கு எதிர்வினையாகக் கேட்கப்படுகின்றன.
கூடவே முன்னேற்றம், வளர்ச்சி என்றெல்லாம் நாம் பேசும் தற்காலச் சூழலில் இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் போன்றோரை வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும், பல நேரம் தேசத்தின் எதிரிகள், அந்நியக் கைக்கூலிகள் என்றும் முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், பெரும்பாலான தொழில்களின் அடிப்படை மூலதனம் இயற்கைதான். அப்படியானால், இயற்கை எல்லையற்று நமக்கு எல்லாவற்றையும் வழங்கிக்கொண்டிருக்கும் என்றும், நமது பேராசைச் சுரண்டலை இயற்கை எல்லையற்றுப் பொறுத்துக்கொண்டிருக்கும் என்றும், நாம் நம்புகிறோமா?
சரி, என்னதான் செய்ய வேண்டும்? நம்மால் உடனடியாக ஏதும் செய்ய முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இயற்கையைப் பற்றியும், இயற்கையைப் பாதுகாப்பது குறித்தும் நமக்குள்ளேயே அக்கறையை விதைக்க வேண்டும். இயற்கைக்கு நேரெதிரான திசையில் செல்லும் இன்றைய நவீன வாழ்வை நம்மால் புறக்கணிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அதில் மிதமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். இது மக்களைவிட அரசுக்குத்தான் மிகவும் பொருந்தும். எந்த ஒரு திட்டத்தின் பயன் மதிப்பைப் பார்ப்பதற்கும் முன், அதனால் இயற்கையில் விளையக்கூடிய பாதிப்புகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
சுற்றுச்சூழலியலாளர்களின் கூக்குரலை, கோரிக்கைகளைக் கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்காமல், குறைந்தபட்சம் அவற்றைப் பரிசீலிக்கவாவது வேண்டும். சுற்றுச்சூழலியலாளர்களின் பின்னணியில் அந்நிய சக்திகளோ, வேறு சுயநலக் கணக்குகளோ இருப்பதாக அரசுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியவந்தால், பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மக்களின் குரலையாவது கேட்க வேண்டும். தனது தேசத்தின் எதிர்காலத்தில் அக்கறையுள்ள அரசு, இப்படியெல்லாம் செய்தாக வேண்டும். ஆனால், அப்படிச் செய்கிறதா நம் அரசு?
சரி, என்னதான் செய்ய வேண்டும்? நம்மால் உடனடியாக ஏதும் செய்ய முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இயற்கையைப் பற்றியும், இயற்கையைப் பாதுகாப்பது குறித்தும் நமக்குள்ளேயே அக்கறையை விதைக்க வேண்டும். இயற்கைக்கு நேரெதிரான திசையில் செல்லும் இன்றைய நவீன வாழ்வை நம்மால் புறக்கணிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அதில் மிதமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
இது மக்களைவிட அரசுக்குத்தான் மிகவும் பொருந்தும். எந்த ஒரு திட்டத்தின் பயன் மதிப்பைப் பார்ப்பதற்கும் முன், அதனால் இயற்கையில் விளையக்கூடிய பாதிப்புகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சுற்றுச்சூழலியலாளர்களின் கூக்குரலை, கோரிக்கைகளைக் கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்காமல், குறைந்தபட்சம் அவற்றைப் பரிசீலிக்கவாவது வேண்டும். சுற்றுச்சூழலியலாளர்களின் பின்னணியில் அந்நிய சக்திகளோ, வேறு சுயநலக் கணக்குகளோ இருப்பதாக அரசுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியவந்தால், பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மக்களின் குரலையாவது கேட்க வேண்டும். தனது தேசத்தின் எதிர்காலத்தில் அக்கறையுள்ள அரசு, இப்படியெல்லாம் செய்தாக வேண்டும். ஆனால், அப்படிச் செய்கிறதா நம் அரசு?
ஹுலா சதுப்புநில விவகாரம்
இந்தப் பின்னணியில் இஸ்ரேலின் ஹுலா சதுப்புநில விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். உலகின் முக்கியமான உயிர்ச்சூழல்களுள் அந்தச் சதுப்பு நிலமும் ஒன்று. மலேரியா கொசுக்கள் உற்பத்தியாகின்றன என்று 1951-ல் அந்தச் சதுப்பு நிலத்திலுள்ள நீர் முழுவதையும் வெளியேற்ற ஆரம்பித்து, 1958-ல் அந்தச் சதுப்பு நிலத்தை வெற்றிகரமாகத் தரிசுநிலமாகவே இஸ்ரேல் அரசு ஆக்கிவிட்டது. இஸ்ரேல் தேசத்தின் கட்டமைப்பில் மிக முக்கியமான அருங்காரியமாக, தேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்பட்டது.
ஆனால், அந்தச் சதுப்பு நிலத்தின் மீது கைவைத்தது எவ்வளவு பெரிய இயற்கைப் பேரழிவு என்பதை, அந்த நாடும் மக்களும் கூடிய சீக்கிரமே உணர ஆரம்பித்தார்கள். சுற்றுச்சூழல் பாதிப்புகளை மக்கள் மிகவும் வெளிப்படையாகவே அனுபவித்தனர். அரிய உயிரினங்கள் சில முற்றிலும் அற்றுப்போயின. ஆக, தேச வளர்ச்சி என்ற பெயரில் உண்மையில் தேசத்தை அழிவை நோக்கி தள்ளிவிட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த அந்த நாட்டு அரசு, மறுபடியும் அந்த சதுப்பு நிலத்தை நீரால் நிரப்பியது. தற்போது, ஆண்டுக்கு 50 கோடி பறவைகள் அந்த வழியாக வலசை போகின்றன என்பதைக்கொண்டு, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதை உணரலாம்.
பெரும் பிழை தானோ?
ஹுலா சதுப்புநிலம் குறித்து இஸ்ரேலின் மகாகவிகளுள் ஒருவரான யுஹூதா அமிச்சாய் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்:
‘எனது இளம் வயதில்
முழுமனதோடு நான் நம்பினேன்
ஹுலா சதுப்புநிலம் வடிக்கப்பட வேண்டுமென்று.
அதன்பின், ஜொலிஜொலிக்கும் வண்ணப் பறவையெல்லாம்
நீங்கிச்சென்றன அங்கிருந்து.
அரை நூற்றாண்டுக்குப் பிறகோ
மறுபடியும் நீரால் நிரப்புகிறார்கள் அவ்விடத்தை,
எல்லாம் பெரும் பிழையென்று சொல்லிக்கொண்டு.
ஒருவேளை என் ஒட்டுமொத்த வாழ்க்கையும்கூட
இதைப் போன்றதொரு பிழைதானோ?’
அப்படியென்றால், சதுப்பு நிலத்தை வடித்து இஸ்ரேல் என்ன சாதித்தது? இயற்கையின் மீது இஷ்டத்துக்குக் கைவைத்து, இயற்கையை சீர்குலைத்து மேற்கொள்ளப்படும் நம் நாட்டின் பேரணைக் கட்டுமானங்கள், நீர்மின் திட்டங்கள், தங்க நாற்கரச் சாலைகள் போன்ற விவகாரங்களிலும் இதே கேள்வியை நாம் கேட்டாக வேண்டும்.
நம் நாட்டில் கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடும் பொறியாளர்கள் பலருக்கும் இயற்கையை அறுவைசிகிச்சை செய்வது மிகவும் அலாதியான விஷயம். வரைபடத்தை வைத்துக்கொண்டு இரண்டு புள்ளிகளுக்கிடையில் ‘ஸ்ட்ரெய்ட்டாக’ ஒரு கோடு போடுவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அபாரமானது. ஆனால், இயற்கை என்பது வரைபடமல்ல; நம்மைப் போன்று கோடிக்கணக்கான சிற்றுயிர்களை உள்ளடக்கிக்கொண்டிருக்கும் பேருயிர்! இந்த உண்மையை மக்கள், நிபுணர்கள், அரசு ஆகிய மூன்று தரப்புமே உணர்ந்தால்தான் இயற்கையை, குறிப்பாக நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago