கார்த்திக் பாலசுப்ரமணியன்
உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டி ருக்கும் கோவிட்-19 கொள்ளை நோய், அதன் தோற்றம், பரவல், அதைக் கட்டுப்படுத்துதல் போன்ற வற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் மனித குலம் திணறிவருகிறது. மற்றொருபுறம் இந்தக் கல்வியாண்டில் சில மாதங்களை இழந்த தற்காக 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பாடங்களி லிருந்து 30% பகுதிகளை மத்திய அரசுக் கல்வி நிறுவனமான சி.பி.எஸ்.சி. நீக்கியுள்ளது. நீக்கப்பட்டவை சூழலியல், பரிணாம வளர்ச்சி குறித்த பாடங்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இருப்பதுபோல் தோன்ற லாம். ஆனால், சற்று ஆழமாக நோக்கினால் இரண்டும் மிக நெருங்கிய தொடர்புடையவை என்பது புரியும்.
கடந்த நான்கு மாதங்களாக உலகம் கொள்ளை நோயின் தாக்கத்தால் துவண்டு கொண்டிருப்ப தற்குக் காரணம் - சூழலியலை நாம் நன்கு உள்வாங்கிக்கொள்ளாததும், நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாதாதும்தாம். கோவிட்-19 எனும் விலங்குவழி நோய்த்தொற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், சூழலியல் (Ecology), பரிணாம வளர்ச்சி (Evolution), உயிர்த்தொகை இயங்கியல் (Population dynamics), இணைவாழ் பரிணாம வளர்ச்சி (Co Evolution) போன்ற உயிரியலின் அடிப்படை துறைசார் கோட்பாடுகள் அவசியம்.
மனித மையப் பார்வையிலிருந்து நோய், நோய்க்கான சிகிச்சை, தடுப்பூசி போன்றவை குறித்த பார்வையுடன் மட்டுமே பார்த்தால் இந்த நோயை புரிந்துகொள்வது கடினமானது மட்டுமல்லாமல், இந்த நோய்க்கு மனித குலத்தையே பெருமளவு காவுகொடுக்கவும் நேரிடலாம். அதேநேரம் உயிரியல் நோக்கில் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு பத்திலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை நாம் படிக்கும் உயிரியல் பாடங்கள்தாம். ஏற்கெனவே, பொறியியலுக்குப் படிக்கிறோம் என்று உயிரியல் படத்தைப் புறந்தள்ளி, பல ஆண்டுகள் ஆயிற்று!
எங்கே தவறவிடுகிறோம்?
தற்போது பாடத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று அடிக்கட்டுமானத்தையே அசைத்துக் கொண்டிருக்கிறோம். நான்கு மாதங்களுக்கு மேல் தீவிர கரோனாவின் தாக்கத்தில் இருக்கும் நம் நாட்டில் இந்த நோய்த்தொற்றின் அறிவியலை திட்டவட்டமாக அறிந்துகொள்ள முடியாமல் போவதற்கு, சிறந்த தொற்றுநோய்ப் பரவலியல் அறிவியலாளர்கள் (Epidomologists) நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பது, அல்லது அவர்கள் கூறும் கருத்துகளை செவிமடுக்காமல் இருப்பதே காரணம். நோய்த்தொற்று அறிவியலை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்காமல், மருத்துவரீதியில் மட்டும் பார்ப்பதே இந்த விஷயத்தில் நாம் தோற்றுப்போனதற்கான முதல் காரணம்.
சரி, சமீபத்தில் தீவிரமடைந்த நோய்த்தொற்றை சற்றே தள்ளிவைப்போம். நமக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பாடத்திட்டத்தில் பரிணாம வளர்ச்சி பற்றி விரிவாகக் கற்றுத்தரப்படுகிறதா என்று கேட்டால், இல்லை என்றே கூற வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்த இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் கேட்டபோது, முதலாம் ஆண்டிலும், இரண்டாம் ஆண்டிலும் பரிணாமத்தைப் பற்றிய பாடமே இல்லை என்று தெரியவந்தது. சூழலியலும் பரிணாமக் கோட்பாடும்தாம் உயிரைப் பற்றி அறிந்துகொள்வதற்கான இரண்டு கண்கள். இந்த இரண்டு கண்களையும் கழற்றிவைத்துவிட்டு, உயிர் என்னும் அழகிய ஓவியத்தை ரசிக்க முயல்கிறோம். “ஒரு உயிரியல் ஆய்வாளர் பரிணாமக் கோட்பாட்டைத் தவிர்த்துவிட்டு யோசிப்பதற்கு பதிலாக, யோசிக்காமலேயே இருக்கலாம்” என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் பீட்டர் மெடாவர்.
பிரச்சினையும் தீர்வுகளும்
இன்று சமூகத்தில் இருக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென நினைத்தால், அந்த பிரச்சினைகளை சூழலியல், பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளை கண்டறிவதுதான் வழி. எடுத்துக்காட்டாக, பணப்பயிர்களை மேம்படுத்துவது, காலநிலை மாற்றத்தை ஆராய்ந்து அதற்கேற்ற வேளாண்மையை முன்னெடுப்பது, சூழலியல் மாற்றங்களைப் புரிந்துகொண்டு அதற்குத் தக்க தீர்வுகளை தருவது, விலங்குவழி நோய்த்தொற்றுகளைக் கண்டறிவது - அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது, நோய் தாக்கும் கிருமிகளின் மருந்து தடுப்பாற்றலைக் கண்டறிவது, புதிதாக உருவாகும் தொல்லைதரும் பூச்சிகளைக் கண்டறிவது, காட்டுயிர் - மனிதர்களுக்கு இடையே உள்ள பிணக்குகளைக் கண்டறிவது, வாழ்க்கைமுறை நோய்களின் தோற்றத்தைக் கண்டறிவது - அவற்றைக் கட்டுப்படுத்துவது, மனிதர்களின் சமூக நடத்தையை அறிந்துகொள்வது, குற்றங்களுக்கான காரணத்தை சமூக நடத்தை மூலம் புரிந்துகொள்வது, குற்றங்களைக் கண்டறிய உயிர் அறிவியலைப் பயன்படுத்துவது என மேற்கூறிய அனைத்து செயல்பாடுகளையும் சூழலியல் - பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் புரிந்துகொண்டால், இந்தப் பிரச்சினைகளில் நிரந்தர தீர்வை நம்மால் அடைய முடியும். அவற்றைத் தவிர்த்து தற்காலிகப் பார்வையுடன் பார்த்தால், இந்த பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் அடைய முடியாது.
ஏன் அவசியம்?
சூழலியல் - பரிணாம வளர்ச்சி ஆகிய இரண்டும் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாமல், அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அடிப்படை அறிவியல் பிரிவுகள். எப்படி ஒருவர் வாழ்வதற்குக் குறைந்தபட்ச கணிதத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டுமோ, அதேபோல் குறைந்தபட்ச சூழலியல் – பரிணாமக் கோட்பாடு பற்றிய புரிதல் அனைவருக்கும் தேவை. இந்த அடிப்படை அறிவு, நமக்கு வரும் சின்ன சளியிலிருந்து நம் வாழ்க்கையையே அழிக்கும் நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.
கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இந்தப் பாடங்களை கட்டாயமாக்க வேண்டிய இந்தக் காலத்தில், பள்ளி நிலையிலேயே இந்தப் படத்தை நீக்குவது மிகவும் வேதனைக்குரியது. உயிர்காக்கும் மருத்துவப் படிப்பைப் படித்துவருபவர்களுக்குப் பரிணாமத்தைப் பற்றிய அதிகப் புரிதல் உண்டாக்கும் பாடங்களே இல்லை என்பது, அதைவிட வேதனை. பரிணாமம் பற்றிய புரிதல் இல்லை என்பது மருத்துவத் துறையினரிடத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, கிருமிகளில் மருந்து தடுப்பாற்றல் உண்டாவதற்கு முதன்மைக் காரணம், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை (ஆன்டிபயாடிக்) வரைமுறையின்றிப் பயன்படுத்துவதே.
இதற்காக மருத்துவரை குறைசொல்லிப் பயனில்லை. ஏனென்றால், குறைந்த காலத்தில் நோயைப் போக்குபவரே நல்ல மருத்துவர் என்று தவறாக நம்புகிறோம். பல மருத்துவர்கள் நீரிழிவு நோயைக் கையாளும் விதத்தில், பரிணாமக் கோட்பாட்டைப் பற்றிய புரிதல் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பது அடையாளமாக இருக்கிறது. உடல் கொழுப்புகளை பற்றி பெரும்பாலான மருத்துவர்களிடையே இருக்கும் புரிதலுக்கும் இதே காரணம்தான். இதற்கு மருத்துவர்களைக் குறைகூறிப் பயனில்லை. அவர்களுக்குப் பாடத்திட்டத்தை உருவாக்கியவர்களைத்தான் உண்மையில் குறைகூற வேண்டும்.
ஆதரத்தை தேடினோமா?
‘நோய்நாடி நோய்முதல் நாடி’ என்று வள்ளுவர் அன்றைக்கே எழுதிவிட்டார். நோயின் ஆதாரத்தைத் தேடி எப்பொழுதாவது போயிருக்கிறோமா? இல்லை, அந்த நோய் காட்டும் அறிகுறிகளை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். நீரிழிவு நோய்க்கான காரணத்தை நாம் தேடியதே இல்லை. ஆனால், அதன் அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறோம்.
நோய் முதலை நாடினால், தேடினால் அனைத்து நோய்களையும் சூழலியல், பரிணாமக் கோட்பாட்டின் கண்களைக்கொண்டே பார்க்க வேண்டியிருக்கும். தற்போது உள்ள சூழ்நிலையில் சூழலியலையும் பரிணாமக் கோட்பாட்டையும் அனைவரும் அறிந்துகொள்ளாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. நமது பள்ளிகளிலிருந்து இந்த அடிப்படை அறிவியலை நீக்குவதை என்னவென்று சொல்வது? சூழலியலையும் பரிணாமக் கோட்பாட்டையும் அறியாமல் இருப்பதும், நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அவற்றின் அடிப்படையில் தீர்வுகாண முயலாமல் இருப்பதும் கிழிந்த துணிகளாலும் உடைந்த மூங்கில்களைக் கொண்டும் உருவாக்கப்பட்ட கூடாரத்துக்குள் பாதுகாப்பாக இருப்பதைப் போன்ற பிரமைதான். அது விரைவில் இடிந்து விழும்போதாவது உண்மையை உணர்வோமா?
கட்டுரையாளர், புனேயில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி
தொடர்புக்கு: diatomist@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
32 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago