சு. தியடோர் பாஸ்கரன்
கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருப்பதுடன் ஒப்பிட்டு, கூண்டுக்குள் அடைப்பட்ட செல்லப்பிராணிகளின் பாடுகள் குறித்து சில 'மீம்ஸ்' வெளிவந்தன. அதேநேரம், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக செல்லப் பிராணிகளுக்கு ஓர் நன்மை விளைந்துள்ளது.
கல்லூரியில் நான் படித்துக்கொண்டிநத காலத்தில் சென்னை மூர் மார்கெட்டுக்கு அவ்வப்போது போவது வழக்கம். விதவிதமான பறவைகளையும் சிறு உயிரினங்களையும் விற்கும் கடைகள், அங்கே பல இருந்தன. கிளிகள், மைனாக்கள், பல வகைப் புறாக்கள், காடை, கெளதாரி, மலை மைனா எனப் பலவிதப் பட்சிகள் அங்கே விற்பனைக்கு இருக்கும்.
கிளி, காடை போன்ற பறவைகளையும், கீரிப்பிள்ளைகளையும் வீட்டில் வைத்திருப்பது நம்மிடையே ஒரு பாரம்பரியமாக இருந்திருக்கிறது. 1972-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘காட்டுயிர் பாதுகாப்பு சட்டம்', இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தது. காட்டில் வாழும் பறவைகளைப் பிடிப்பதும், வைத்திருப்பதும்கூட சட்ட விரோதமாக்கப்பட்டது. என்றாலும், திருட்டுத்தனமாக அவை விற்கப்படு கின்றன.
கொல்லப்படும் உயிரினங்கள்
இன்றும் சில வீடுகளிலும் கடைகளிலும் கிளிகளைக் கூண்டில் வளர்ப்பதைக் காணலாம். சொல்லப்போனால் கிளி ஜோசியம்கூட சட்ட விரோதமானதுதான் இந்தத் திருட்டு விற்பனை யாளர்கள் கிளிக்குஞ்சுகளை கூட்டிலிருக்கும்போதே பிடித்து விடுகிறார்கள். ஐந்து குஞ்சுகள் பிடிபட்டால், ஒன்றுதான் பிழைக்கும். பாதுகாக்கப்பட்ட காட்டுக்கு வெளியேயும் கிளிகள் இனப்பெருக்கம் செய்வதால், அவற்றைப் பிடிப்பது எளிதாகிறது.
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற மலைக்கு அருகிலுள்ள ஊர்களில் சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), கருமந்தி ஆகியவற்றையே வீட்டில் வளர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்று காண்பதற்கே அரிதாகிவிட்ட அலங்கு எனும் எறும்புதின்னிகளை வீடுகளில் சிலர் வளர்த்துவந்தனர். ஆனால், இன்று எந்தக் காட்டுயிரையும் நாம் வீட்டில் வளர்க்கக் கூடாது.
இந்த செல்லப்பிராணி வணிகம் (Pet trade) உலகெங்கும் காட்டு உயிரினங்களுக்குப் பெரும் சேதம் விளைவித்தது. கருமந்தி, சோலைமந்தி ஆகியவற்றின் குட்டிகளைப் பிடித்து விற்கத் தாய்க்குரங்குகள் கொல்லப்பட்டன. போர்னியோவின் உராங் ஊத்தனின் குட்டிகளைப் பிடிக்கவும், ஆப்பிரிக்காவில் சிம்பன்சி, கொரில்லா போன்ற வாலில்லா குரங்குகளைப் பிடித்து, மேலை நாடுகளில் விற்கவும் ஆயிரக்கணக்கான முதிர்ந்த குரங்குகள் கொல்லப்பட்டன.
இதனால் அவற்றின் இயல்பான வாழிடத்தில் இனப்பெருக்கம் தடைபட்டது. வாலில்லாக் குரங்குகளின் எண்ணிக்கை சரிந்ததற்கு, இந்த வணிகமும் ஒரு முக்கியக் காரணம்.
புதிய விதிமுறை
நம் நாட்டில் இன்றும் சில செல்வந்தர்கள் தோட்டங்களிலும் பண்ணை வீடுகளிலும் பல வெளிநாட்டுப் பறவைகளை வளர்த்துவருவதைப் பற்றி பத்திரிகைகளில் வாசிக்கிறோம். பஞ்சவர்ணக்கிளிகளும், பேசும் கிளி எனறு பெயர் பெற்ற ஆப்பிரிக்கக் கிளிகளும், ஆஸ்திரேலிய வெள்ளைக் கிளியும் பல்லாயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படுகின்றன. நம்மூர் பிரமுகர்கள் பலர் இந்தப் பறவைகளை வளர்ப்பதை அந்தஸ்தின் குறியீடாகவே கருதுகிறார்கள்.
இதில் பிரச்சினை என்னவென்றால் சட்டத்திலுள்ள ஒரு பெரிய ஓட்டையை பயன்படுத்தி, இந்த பறவைகள் விற்கப்படுகின்றன. ‘இந்தியக் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் 1972', நம்மூர் காட்டுயிர் எதையும் வைத்திருப்பதைத் தடைசெய்கிறது. அதேநேரம் வெளியூர் பறவையையோ, விலங்கையோ வைத்திருந்தால் எந்த சட்டமும் மீறப்படுவதில்லை. லவ் பேர்ட்ஸ் என்று குறிப்பிடப்படும் பட்ஜரீகர் கிளிகள் உட்பட.
இந்த வெளிநாட்டு உயிரினங்களைப் பற்றி ஒரு முக்கியமான விதிமுறையை மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி, அயல்நாட்டுக் காட்டுயிரை கொண்டு வருவதோ, விற்பதோ, வைத்திருப்பதோ தடைசெய்யப்படுகிறது. இது காட்டுயிர் மேலுள்ள கரிசனத்தால் அல்ல. வெளிநாட்டிலிருந்து கரோனா கிருமிகள் உள்ளே வருவதை தடுப்பதற்காக என்ற நோக்கத்திலேயே தடை செய்யப்பட்டிருக்கிறது. நோக்கம் எதுவாயிருந்தாலும் அழிவின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கும் பஞ்சவர்ணக்கிளி போன்ற வெளிநாட்டுக் காட்டுயிர்களுக்கு, இந்த முன்னகர்வு நன்மையே பயக்கும்.
அயல்நாடு வழிக் கடத்தல்
இதே வேளையில் கொல்கத்தா விமான நிலை யத்தில் பிடிபட்ட ஒரு கடத்தல் பேர்வழியிடமிருந்து கைப்பற்றப்பட்ட உயிரினங்களைப் பற்றிய செய்தியும் வந்தது (22.6.20 ‘தி இந்து' ஆங்கில செய்தித்தாள்). இருபத்தியிரண்டு அரிய பஞ்சவர்ணக்கிளிகள் வங்கதேசம் வழியாகக் கடத்தப்பட்டிருக்கின்றன. கடத்தல்காரர்கள் பெங்களூருவுக்குக் கொண்டு செல்லவிருந்த இந்த பறவைகள், சுங்க அதிகாரிகள் கையில் சிக்கின. மியான்மர், வங்கதேச எல்லைகள் அருகில் இருப்பதால், அந்த வழியாகக் கடத்தல் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியப் பறவைகளான குக்குபரா, காக்கட்டூ கிளி ஆகியவற்றுடன் கிழக்கு நாடுகளிலிருந்து கிப்பன் எனும் வாலில்லாக் குரங்கு, மடகாஸ்கரில் வாழும் லீமர் போன்ற உயிரினங்களும் இங்கு பிடிபட்டிருக்கின்றன.
இம்மாதிரியான அரிய காட்டுயிர்களை கடத்தி விற்கும் வணிகம் உலகெங்கும் பரவியிருப்பது மட்டுமல்லாமல், அது போதைப்பொருட்கள், கள்ள ஆயுதச் சந்தை, பயங்கரவாதம் போன்ற பல தளங்களிலும் தன் வேர்களைப் பதித்திருக்கிறது. இந்த வணிகத்தில் பெரும் பணம் புரளுகிறது: 2.3 கோடி டாலர்கள்.
இணைய வழி வணிகம்
இந்த வணிகம் இணையத்தில் மூலமும் நடைபெறுவதால் தடுப்பது கடினமாகி உள்ளது. உலகின் இணையக் காட்டுயிர் வணிகத்தில், 12% நம் நாட்டில் நடக்கிறது. ஆகவே, ஒரு நாட்டில் மட்டும் இதைக் கண்காணித்தால் போதாது. இப்பூவுலகின் காட்டுயிர் பாதுகாப்பு, எல்லா நாடுகளின் அக்கறையாகவும் இருக்க வேண்டும். ஆசிய, ஆப்பிரிக்க யானைகளைப் பாதுகாக்க யானையே இல்லாத பல ஐரோப்பிய நாடுகளில் தந்த விற்பனை தடை செய்யப்பட்டிருக்கிறது. இதைக் கண்காணிக்க 1975-ல் உலக நாடுகள், இந்தியா உட்பட ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதற்கென ஒரு பன்னாட்டு நிறுவனம் (Convention on International Trade in Endangered Species of Wild Flora and Fauna, சுருக்கமாக CITES) இயங்கிவருகிறது.
அயல்நாட்டு காட்டுயிர் எதையும் செல்லப்பிராணியாக வீட்டில் வைத்திருப்பவர்கள், அது பற்றிய விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் அமைச்சக விதிமுறை ஜூன் 16-ல் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், இந்த விதிமுறை பற்றி செய்தித்தாள்களில் வெளியான விளம்பரம், அரசு நிர்வாக அளவில் தமிழ் மொழிபெயர்ப்பு எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. விளம்பரத்தின் தலைப்பை பாருங்கள்: “உயிருடன் உள்ள வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்பது குறித்து தகவலை தாமாகவே முன்வந்து தெரிவிக்கும் திட்டம்”. மொழிபெயர்ப்பு மட்டுமில்லாமல், காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்து பல வகைகளில் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு இது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago