“இன்றைக்கு நாம் இருக்கும் நிலைக்கு எப்படி வந்தோம், ஏன் வந்தோம் என்பதற்கான காரணங்களை அறிந்துகொள்வதற்கு வரலாறு முக்கியம். அதனுடன், ஆதிகாலத்தில் இருந்து இப்போதுவரை மக்கள் எவ்வாறு இயற்கையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வதுதான் சுற்றுச்சூழல் வரலாற்றின் முக்கிய அம்சம்" - சூழலியல் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறார் மகேஷ் ரங்கராஜன்.
தேசிய அளவில் ரொமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர் மகேஷ் ரங்கராஜன். இந்தியாவின் சுற்றுச்சூழல் வரலாறு குறித்துப் பல ஆண்டுகளாக ஆராய்ந்துவருபவர். ‘Fencing the Forest', ‘India's Wildlife History' உட்படப் பல முக்கியமான புத்தகங்களை எழுதியவர். தற்போது டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் இயக்குநராகப் பணியாற்றிவருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து:
இந்தியாவின் இயற்கை வரலாறு குறித்து ஆழமாக ஆராய்ந்தவர் நீங்கள். அந்த வரலாறு இன்றைய சூழ்நிலையோடு எவ்வளவு தூரம் ஒத்துப் போகிறது? அல்லது விலகியிருக்கிறது?
வரலாறு, சுற்றுச்சூழல் என்றெல்லாம் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. வரலாற்றின் துணையோடு சுற்றுச்சூழலை, இயற்கையை அணுக வேண்டும். இன்றைக்கு நாம் இருக்கும் நிலைக்கு நமது கடந்த காலம்தான் காரணம். எதிர்காலத்துக்கு நம்முடைய இன்றைய நிலை காரணமாக இருக்கும். இறந்தகாலத்தைப் பற்றி அறிந்துகொள்ளாமல் போனால், நமக்கு எதிர்காலம் என்ற ஒன்றில்லை. இது நமது சுற்றுச்சூழலுக்கும் பொருந்தும்.
நமது அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தின் முகப்பில் இரண்டு தந்தங்களுடன் கூடிய யானைப் படம் ஒன்று இருக்கிறது. அது ஏன்? நமது ரூபாய் நோட்டுகளில் அசோக சின்னத்தில் உள்ள சிங்கங்களும், ரிசர்வ் வங்கியின் சின்னமாகப் பனை மரத்தின் கீழிருக்கும் புலியும் இடம்பெற்றிருப்பது எதற்காக? இவற்றை ஆராய்வதன் மூலம் நம்முடைய முன்னோர்கள் உயிரினங்களுடன் என்ன மாதிரியான உறவைக் கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நமக்கு இயற்கையுடன் உள்ள நீண்டகாலத் தொடர்பை அந்தச் சின்னங்கள் எடுத்துக்கூறுகின்றன.
மக்கள் எவ்வாறு இயற்கையை அணுகினார்கள் என்பதை வரலாற்றில் இருந்து புரிந்துகொள்ளும்போது, நிகழ்காலத்தில் இயற்கையைப் பேணுவதன் அவசியம் தெரியவரும். அதன் பலன் நமக்கு மட்டுமல்லாது, எதிர்காலச் சந்ததியினருக்கும் போய்ச் சேரும்.
இப்போது இயற்கை குறித்த சிந்தனை மக்களிடம் அதிகரித்திருக்கிறது. இன்றைக்கும் இயற்கையோடு சேர்ந்த வாழ்வியலைக் கொண்ட மக்களும் இருக்கிறார்கள். ஆக, இயற்கையை நேசிக்கிற வழக்கம் நிகழ்காலத்திலும் தொடர்கிறது என்றே சொல்ல வேண்டும். வரலாறு நமக்குப் பாடம் கற்றுத் தருவதில்லை. உள்நோக்கிப் பார்ப்பதற்கான அறிவை அது நமக்குத் தருகிறது!
பொதுவாக, இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது என்ற ஒரு கருத்து உள்ளதே. இது சுற்றுச்சூழல் வரலாற்றுக்கு எவ்வளவு தூரம் பொருந்தும்?
அப்படியல்ல! நான் ஏற்கெனவே சொன்னதுபோல இன்றைக்கும் இயற்கையோடு இணைந்து வாழ்கிற மக்கள் இருக்கவே செய்கிறார்கள். இயற்கை அவர்களோடு இரண்டறக் கலந்திருக்கிறது. காற்று வீசும் திசையையும் வேகத்தையும் வைத்து மழைப்பொழிவைக் கணிப்பது, பெய்கிற மழையைக் கணக்கிட்டு விதைப்புக் காலத்தை உறுதி செய்வது உட்படப் பல விஷயங்கள் காலங்காலமாக நம்மிடையே தொடர்ந்துவருகின்றன. பொதுவாகவே வரலாறு குறித்த உணர்வு குறைவாக இருக்கிறது. அத்துடன் இயற்கை வரலாறு குறித்த அக்கறை இன்னும் அதிகரித்தால் நல்லது என்பது என் கருத்து.
மத்திய அரசின் யானைகள் பாதுகாப்புக் குழுவில் தலைவராக இருந்தவர் நீங்கள். இன்று வரையிலும் கோயில் யானைகள் துன்புறுத்தப்படுவதற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லையே?
கோயில் யானைகள் மட்டுமல்லாது, ‘பழக்கப்படுத்தப்பட்ட வளர்ப்பு யானைகள்' (கேப்டிவ் எலிபண்ட்ஸ்) காலங்காலமாக நம்மிடையே இருந்துவருகின்றன. கோயில்களில் யானைகள் வளர்க்கப்படுவதும் அதன் தொடர்ச்சிதான். அவற்றை நாம் கொண்டாடி இருக்கிறோம். அவற்றுக்கு மரியாதை செய்திருக்கிறோம். ஆனால் அதேநேரம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.
இந்தப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து 2010-ம் ஆண்டே மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துவிட்டோம். இப்போது 2015. அந்த அறிக்கையின் நிலை என்னவென்று இப்போதுவரை தெரியவில்லை. எனவே, இதற்கான பதிலை மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.
ஆனால் நாட்டிலேயே, தமிழகத்தில் யானைகளைப் பாதுகாக்கும் புத்துணர்வு முகாம் நடைமுறைகள் சிறந்த வகையில் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம்.
ஒரு பக்கம் புலிகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், இன்னொரு பக்கம் மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளல் நிகழ்வுகளும் அதிகரிக்கின்றன. சட்டங்களை இறுக்கமாக்குவதன் மூலம் மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளல் நிகழ்வுகளைக் குறைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
புலிகள் அல்லது யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகரிக்கிறது என்று கூறுவது தவறு. உதாரணத்துக்குக் கிர் காடுகளில் உள்ள சிங்கங்களை எடுத்துக்கொள்வோம். கிர் மிகவும் பரந்த சரணாலயம் அல்ல. அங்கு ஒரு சிங்கம் 1,900 சதுரக் கிலோமீட்டர் அளவுக்குத் தன்னுடைய வாழிட எல்லையைக் கொண்டிருக்கிறது. இன்னொரு சிங்கத்தின் வாழிட எல்லையோ 1,200 சதுரக் கிலோ மீட்டர்களுக்குள் இருக்கிறது.
இப்போது இந்த இரண்டு சிங்கங்களும் தங்களுக்கான குறிப்பிட்ட எல்லைகளில் இருந்து வெளியே வந்து மனிதர்களைக் கொன்றாலோ அல்லது மனிதர்களால் கொல்லப்பட்டாலோ, அதை மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளல் என்று கருத முடியாது. காரணம், சரணாலய எல்லைகள் இருக்கின்றன என்பது உயிரினங்களுக்குத் தெரியாது. மனிதர்களுக்குத்தான் தெரியும்.
மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளலைச் சட்டங்கள் மூலம் குறைத்துவிட முடியாது. சில இடங்களில் அத்தகைய சட்டங்கள் செல்லுபடியாகலாம். ஆனால், அதே சட்டம் எல்லா இடங்களுக்கும் ஒத்துப் போகாது.
பொதுவாக, மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளல் சம்பவங்களில் சிறு, குறு விவசாயிகள்தான் அதிகமாகப் பலியாகிறார்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், அது மட்டும் போதாது. அவர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அதோடு, கூட்டு வேளாண்மை முறைக்கும் நமது விவசாயிகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.
காட்டுக்குள்ளிருக்கும் பழங்குடிகளையோ, எல்லையோரம் இருப்பவர்களை இடம்பெயரச் செய்வதும் இதற்கு இறுதி முடிவாகாது. காட்டின் மீதான அவர்களுடைய சார்பை, கூடிய மட்டும் ஆக்கப்பூர்வமான வழிகளில் குறைக்க வேண்டும். எடுக்கப்படும் நடவடிக்கைகள் இறுதியில் ஒட்டுமொத்தக் காட்டையும், அங்கு வாழும் உயிரினங்களையும், மனிதர்களையும் மோசமாகப் பாதிக்காத வகையில் முடிவெடுக்க வேண்டும். அது ஒவ்வொரு இடத்தைப் பொறுத்தும் மாறும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
46 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago