பெ. தமிழ் ஒளி
பருவநிலை மாற்றத்தின் தாக்கம், சுற்றுச்சூழலை, அதைச் சார்ந்திருக்கும் மனிதச் சமூகங்களைப் பல்வேறு வகைகளில் பாதிக்கும் என்றாலும், வேளாண்மை குறித்தும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, அதன் தாக்கங்களை மட்டுப்படுத்த - எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கு, உணவில் நுண்ணுட்டச்சத்துப் பாதுகாப்பிற்காக எதிர்காலத் தானியப் பயிர் வகை, உகந்த விவசாய முறை குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இன்றைக்கும் கிராமப்புறங்களில் இருக்கும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விவசாயமே வாழ்வாதாரம். பருவநிலை மாற்றத்தால் விவசாயச் சூழலைப் பாதிக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகள், நிலத்தின் மேற்பரப்பு வெப்பமாதல், வருடாந்திர மழை அளவு, மழைபெய்யும் கால அவகாசத்தில் நிகழும் மாறுதல்கள்.
இம்மாற்றங்களால் விவசாயத்துக்கு முக்கியத் தேவையான நீர் குறையும் அல்லது தேவையான காலத்தில் இல்லாமல் போகும். பயிர்களைத் தாக்கக்கூடிய பூச்சி, நோய் தாக்குதல் அதிகரிக்கும். இதன் விளைவாகப் பயிர் விளைச்சல் குறையும் அல்லது பயிரிடமுடியாத சூழல் ஏற்படும். இதுபோல் நிகழும் மாற்றங்களால் எதிர்கொள்ள வேண்டிவரும் பிரச்சினைகளை, தவிர்க்கவோ, மட்டுப்படுத்தவோ சமாளிப்பதற்கான வழிமுறைகளோ நம்மிடையே இல்லை.
பருவநிலை மாற்றத்தால், மழை அளவு குறைவதால் வறட்சி ஏற்படும். தொடர்ந்து ஆண்டுதோறும் மழை குறைந்தால் தொடர் வறட்சி ஏற்படும். இதனால் ஏற்கெனவே வறண்ட பிரதேசங்கள் மேலும் அதிகப்படியான வறட்சியின் தாக்கத்துக்கு உள்ளாவதால் அப்பகுதியின் இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டு வேளாண்மை பெருமளவில் பாதிக்கப்படும். இது குறித்த ஆய்வுகள் இதுபோன்ற மாற்றங்களால் 50 விழுக்காடுவரை விளைச்சல் குறைய வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கின்றன.
இதனால் உணவுக்குத் தேவையான தானியங்களின் உற்பத்தி அளவு குறையும். இதனால் அச்சமூகங்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படும். மழை வரவு, அளவு குறையப் போவதால் நிகழப் போகும் இன்னொரு பாதகமான விளைவு, தொடர்வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், வறண்ட பகுதியின் நிலப்பரப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த ஒரு பேரிடரிலும் முதலில் பாதிக்கப்படுவது மிகவும் பாதகமான சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையில் வாழும் சமூகங்கள்தாம். பருவநிலை மாற்றத்தால் வரப்போகும் வேளாண்மைப் பாதிப்புகளால் முதலில் பாதிக்கப்படப்போவது சிறு, குறு உழவர்களும், விவசாயக் கூலிகளும்தாம். இவர்கள் தவிர பாதிக்கப்படப்போவது தங்களது உணவுத் தேவைக்காகச் சிறிய அளவில் பயிர்செய்து பிழைக்கும் பழங்குடிச் சமூகங்கள்.
இந்தியாவின் ஒட்டுமொத்த உணவுத் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை நெல், கோதுமை ஆகிய இரண்டு தானியங்களே பூர்த்திசெய்கின்றன. அதே போல் முப்பதுக்கும் குறைவான பயிர் வகைகளே 95 விழுக்காடு உணவுத் தேவையை நிறைவேற்றுகின்றன. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் நிலைமை இவ்வாறு இல்லை.
மக்களுக்குத் தேவையான உணவை வழங்க நூற்றுக்கணக்கான உணவுப் பயிர் வகைகள் இருந்தன. இவ்வாறு அதிக எண்ணிக்கையில் தானியங்களால் நிறைந்து இருந்த தானியக் கூடை ஏன் இவ்வளவு சுருங்கிவிட்டது. புவிப்பரப்பில் வெவ்வேறு பகுதிகளில் பயிரிட்டுப் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான தானியப் பயிர்கள் ஏன் மறைந்துவிட்டன என்பது போன்ற கேள்விகள் எழும்.
நெல்லும் கோதுமையும் மட்டுமே ஆதாரமாகிவிட்ட பண்ணையில் வேளாண் பல்லுயிர்ச் சூழல் (agrobiodiversity) மறைந்து வருவது பின்னடைவு ஆகும். நிலத்தில் பல வகையான பயிர்களை விளைவிக்காமல் ஒற்றைப்பயிர் முறையைக் கடைபிடிப்பதால் முன்பு பயிரிட்டு வந்த பல பயிர்கள் அப்பகுதியிலிருந்து மறைவதுடன் மீண்டும் பயிரிடுவதற்கான வாய்ப்பையும் இழக்கின்றன.
அதே வேளை தொடர்ந்து பயிரிடக்கூடிய குறிப்பிட்ட சில முக்கியத் தானியப் பயிர்களும் காலப்போக்கில் அதிகமான பூச்சி நோய் தாக்குதலுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி அவற்றை எதிர்கொள்ளும் திறனையும் இழக்கின்றன. ஏற்கெனவே வேளாண் பல்லுயிர்ச் சூழல் மறைந்த சூழலில் பயிரிடுவதற்கான மாற்றுப் பயிர்களும் இல்லாமல் போகிறது.
உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு என்பதே வேளாண் பல்லுயிர்ச் சூழலின் அடிப்படை. வேளாண் பல்லுயிர்ச் சூழல் என்றால் பாரம்பரியமாக உழவர்கள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்டு வந்த தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தோட்டக்கலைப் பயிர்கள் எனப் பல ஆயிரக்கணக்கான பயிர்களை உள்ளடக்கியதாகும். ஆனால் தற்போது முன்பிருந்த அளவுக்கு விளை நிலங்களில் இப்பயிர்கள் காணப்படுவதில்லை.
1960களில் தொடங்கிய, பஞ்ச காலத்துக்குத் தீர்வாகத் தானிய உற்பத்தியில் தன்னிறைவு என்கிற நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப்புரட்சியில் நெல், கோதுமை என்று இந்த இரண்டு தானியங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
உழவர்கள் லட்சக்கணக்கான ஏக்கர்களில் வீரியரக நெல், கோதுமை ஆகிய இரண்டு தானியங்களை மட்டுமே பயிரிடத் தொடங்கினர். தொழில்நுட்பம், மூலதனம், விரிவாக்கப் பயிற்சிகள், இருபொருட்கள் என அனைத்து உதவிகளும் இவ்விரண்டு பயிர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன. இதன் விளைவாக நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது இரண்டு முக்கியத் தானியங்களை மட்டுமே நம்பியுள்ள நிலைமை உருவானது.
இதனால் நடைமுறையில் இருந்த பல தானியப் பயிர்கள் முக்கியத்துவம் இழந்து, உழவர்களின் தானிய வகைப் பாட்டிலிருந்து வெளியேறி மறையத் தொடங்கின. இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட பயிர்களில் அதிகம் பாதிப்பிற்குள்ளானது சிறுதானியப் பயிர்கள்தாம். 1951-ல் 5,290 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன.
ஆனால் 2010-ல் இது 970 லட்சம் ஹெக்டேர்களாகப் பாதிக்கும் மேலாகக் குறைந்து விட்டது. இந்த காலக் கட்டத்தில் சிறுதானியங்களிலிருந்து செய்யப்படும் உணவு வகை பழங்கால அல்லது நாகரிகச் சமூகத்துக்கு ஏற்ற உணவு வகை இல்லை. மேலும் இது ஏழைகளின் உணவு என்கின்ற கருத்துகளும் பரவத் தொடங்கி, நெல்லும் கோதுமையும் முக்கிய உணவுத் தானியங்களாயின.
தொடரும்…
கட்டுரையாளர், சமூக மானுடவியலாளர்
தொடர்புக்கு: thamizoli@hotmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago