பருத்திக் காய்ப் புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி?

By செய்திப்பிரிவு

த.சத்தியசீலன்

பருத்தி விளைச்சலைப் பாதிக்கக்கூடிய முக்கியக் காரணிகளில் காய்ப்புழுவும் ஒன்று. இவை பூ, காய்ப் பருவங்களில் தாக்குதல் ஏற்படுத்துவதால், இவற்றால் உண்டாகும் சேத அறிகுறிகளைச் சரியாகக் கண்டறிந்து அதற்கேற்றாற் போல் மேலாண்மை செய்வது அவசியமானது. கோவை மாவட்ட வேளாண்மை அலுவலர் ஆர்.சக்திவேல், அதற்கான மேலாண்மை முறைகளை விளக்குகிறார்

தமிழகத்தில் அமெரிக்கக் காய்ப்புழு, இளஞ்சிவப்புக் காய்ப்புழு, புள்ளிக் காய்ப்புழு என 3 வகையான காய்ப்புழுக்கள் பருத்தியில் மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. அமெரிக்கக் காய்ப்புழுவின் தாய் அந்துப்பூச்சிகள் இட்ட முட்டையில் இருந்து வெளிவரும் இளம்புழுக்கள், பருத்திப் பயிரின் பூக்களில் சேதம் ஏற்படுத்தும்.

பின்னர் காய்களில் துளைகளை உண்டாக்கி, உள்ளிருந்து திசுக்கள், விதைகள் ஆகியவற்றை உட்கொண்டு அதிக அளவில் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துகிறது. தாய் அந்துப்பூச்சி பூக்களிலோ காய்களிலோ சுமார் 100-150 முட்டைகள் வரை இடும். இவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள் உடலின் இருபுறமும் பக்கவாட்டில் வெண்மை அல்லது மஞ்சள் நிறக்கோடுகளோடு வெளிர் பச்சை, கருப்பு அல்லது அடர்பழுப்பு நிறங்களில் காணப்படும்.

முதிர்ந்த புழுக்கள் 15 முதல் 25 நாட்களில் மண்ணில் விழுந்து, தனது உடலைச் சுற்றிலும் மண்ணால் கூட்டை உண்டாக்கிக் கூட்டுப்புழுவாகி, சுமார் 5 முதல் 10 நாட்களில் அந்துப்பூச்சிகளாக வெளிவரும். அந்துப்பூச்சிகள் செம்பழுப்பு நிற இறக்கைகளில் 'A' என்ற ஆங்கில எழுத்து வடிவத்தைப் போன்ற அடையாளத்தைக் கொண்டிருக்கும்.

டிரைகோகிராம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியைப் பூக்கும் தறுவாயில் பயன்படுத்தி இப்பூச்சியின் முட்டைப் பருவத்தை அழிக்கலாம்.

ஹெலிலியூர் எனப்படும் இனக்கவர்ச்சிப் பொறியை ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஹெலிகோவெர்பா ஆர்மிஜிரா என்.பி.வி. எனும் வைரஸ் கரைசலை மாலை வேளைகளில் பயிர்களில் தெளித்துப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். வைரஸ் கரைசலுடன் சிறிது வெல்லம் சேர்த்துத் தெளிக்கும்போது இனிப்புச்சுவை காரணமாகப் பயிரினை புழுக்கள் நன்கு உண்பதால் அதிக எண்ணிக்கையில் புழுக்கள் இறக்க நேரிடும். பயிர் சுழற்சி முறையின் அடிப்படையில் பருத்தியைத் தவிர்த்து மாற்றுக் குடும்பப் பயிர்களைப் பயிர் செய்வதால் இப்பூச்சிகளின் அடுத்த தலைமுறையைக் கட்டுப்படுத்தலாம்.

சரியான பி.டி. பருத்திக் கலப்பினங்களை வாங்கிப் பயிர் செய்வதன் மூலமாகவும், பருத்திச் சாகுபடி செய்யும் நிலப்பரப்பில் 20 சதவீதப் பரப்பில் பி.டி. அல்லாத பருத்தி ரகங்களைப் பயிர் செய்வதன் மூலமாகவும் இப்புழுக்களில் ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்புத்தன்மையை மேலாண்மை செய்து புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

பின்வரும் பூச்சி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளித்தும் புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். குளோரான்டிரானிலிப்ரோல் 18.5 சதவீதம், இமாமக்டின் பென்சோயேட் 5 சதவீதம், பிப்ரோனில் 5 சதவீதம், ஃபுளுபென்டியமைடு 20 சதவீதம், இன்டோக்ஸாகார்ப் 14.5 சதவீதம், ஸ்பைனோசேட் 45 சதவீதம், தையோடிகார்ப் 75 சதவீதம், புரோபனோபாஸ் 50 சதவீதம், குயினால்பாஸ் 25 சதவீதம், கார்பரில் 50 சதவீதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தைப் பயன்படுத்தலாம்.

இளஞ்சிவப்புக் காய்ப்புழு

இளஞ்சிவப்புக் காய்ப்புழுக்கள் மட்டும் பருத்தியில் சுமார் 40 முதல் 85 சதவீதம் வரை சேதம் விளைவிப்பதாக அறியப்படுகிறது. இப்புழுக்கள் ஒன்றிணைந்து கூடுகளை உருவாக்கிப் பூக்களின் திசுக்களை உண்பதால், பூ மொட்டுகள், இளம்பூக்கள் கொத்துக் கொத்தாக உதிர ஆரம்பிக்கும். பின்னர் காய்களின் நுனிப்பகுதியில் துளைகளை உண்டாக்கி, உள்ளே சென்று திசுக்கள், விதைகள் ஆகியவற்றை உட்கொண்டு உள்ளிருந்தே நடுவில் உள்ள சுவரின் வழியே துளையிட்டு மற்ற அறைகளுக்கும் சென்று சேதம் ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்ட காய்கள் விரிவடையும்போது, உள்ளிருக்கும் பஞ்சு சரியாக வளர்ச்சி அடையாமல் நிறம் மாறிக் காணப்படுவதுடன், விதைகளும் சீரற்ற வடிவத்துடன் உருமாறிவிடும். அடர்ப் பழுப்பு நிறத்தாலான அளவில் சிறிய பெண் அந்துப்பூச்சிகள் சுமார் 110 முதல் 140 முட்டைகளைப் பூ மொட்டுகள் அல்லது பூக்கள் அல்லது காய்களில் இடுகின்றன. பின்னர் இவை 3 முதல் 4 நாட்களில் இளஞ்சிவப்பு நிற இளம்புழுக்களாக வெளிவரும். இவை பயிரில் சேதம் உண்டாக்கிச் சுமார் 25 முதல் 35 நாட்களில் காய்களிலோ மண்ணிலோ விழுந்து கூட்டுப்புழுவாக மாறிவரும். 6 முதல் 20 நாட்களில் அந்துப்பூச்சிகளாக வெளிவந்து இணை சேர்ந்து அடுத்த தலைமுறையை உண்டாக்கும்.

புள்ளிக்காய்புழு

புள்ளிக் காய்ப் புழுக்கள், பூ மொட்டுகள், பூக்கள் ஆகியவற்றை உண்பததால் அவை உதிர்ந்து விடுகின்றன. பின்னர் காய்களில் துளையிட்டு திசுக்களை உண்பதோடு, தனது எச்சத்தால் காய்கள், உள்ளிருக்கும் பஞ்சு ஆகியவற்றையும் சேதப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட காய்களில் உள்ள பூவடி செதில்கள் நீட்சியடைந்து காய்களைவிடப் பெரிதாகக் காணப்படும்.

முட்டையிலிருந்து வெளிவரும் பழுப்புநிறப் புழுக்கள் பூ, காய்களில் சேதத்தை உண்டாக்கி 10 முதல் 15 நாட்களில் தன் உடலைச் சுற்றி இலைகளான கூட்டை உண்டாக்கி அதனுள் கூட்டுப்புழுவாக மாறிவிடும். பின்னர் சுமார் 7 முதல் 10 நாட்களில் அந்துப்பூச்சிகளாக வெளிவரும்.

அந்துப்பூச்சிகள் பச்சை வண்ண முன் இறக்கைகளையும் வெள்ளை நிற பின் இறக்கைகளையும் கொண்டிருக்கும். தாய் அந்துப்பூச்சிகள் சுமார் 300 எண்கள் வரை தனது முட்டைகளைப் பூக்களிலோ காய்களிலோ இடும். புள்ளிக் காய்ப் புழுக்களை மேலாண்மை செய்ய குளோரான் டிரானிராப்ரேஸ் 18.5 சதவீதம், புளுபென்டியமைடு 39.5 சதவீதம், இன்டாக்ஸோகார்ப் 14.5 சதவீதம், புரோபனோபாஸ் 50 சதவீதம், டிரையஸோரோஸ் 40 சதவீதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.

பிற மேலாண்மை உத்திகள் ஆழமாக நிலத்தை உழுவதன் மூலம் காய்ப்புழுக்களின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். மாலை நேரங்களில் விளக்குப்பொறிகளை வைத்து அந்துப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கண்காணிப்பதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

3 சதவீதம் வேப்ப எண்ணெய் அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டைச்சாறு கரைசலை 15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் பருத்திப் பயிரில் தெளித்து காய்ப்புழுக்களின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை மேலாண்மை செய்யலாம். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற உயிரியல் பூச்சிக்கொல்லியை ஏக்கருக்கு 2 கிலோ கிராம் என்ற அளவில் பயன்படுத்தி புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

24 mins ago

சிறப்புப் பக்கம்

30 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்