பசுமை எனது வாழ்வுரிமை 20: தேரி அணைப் போராட்டம்

By செய்திப்பிரிவு

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

உயரமான இடத்தில் அமைந்துள்ள உலக அணைகளில், இமயமலையின் பாகீரதி ஆற்றின் மேல் கட்டப்பட்ட தேரி (Tehri) அணையும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. நீர் மின்சாரம், குடிநீர் விநியோகம், நீர்ப்பாசனம், சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு அணையாக அது திட்டமிடப்பட்டது. உத்தரப்பிரதேச அரசும் மத்திய அரசும் கூட்டாக அமைத்த டி.எச்.டி.சி. நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த அணை, உத்தராகண்டில் அமைந்துள்ளது.

இந்த அணைக்கான ஒப்புதல் 1972-ம் ஆண்டு வழங்கப்பட்டு, 2005-ம் ஆண்டு முடிவில் செயல்படத் தொடங்கியது. தேரி அணை எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் ஹன்னா வெர்னர் எழுதிய ‘Politics of Dams: Developmental Perspectives and Social Critique in Modern India’ (2015) என்ற நூலிலும், ஹின்யா இஷிகாவா என்ற ஜப்பானிய அறிஞர் எழுதிய கட்டுரையிலும் (2006) உள்ளன. ஷின்யாவின் கூற்றுப்படி இந்த அணை எதிர்ப்புப் போராட்டத்தை ஐந்து கட்டங்களாகப் பிரிக்கலாம்.

முதல் கட்டம்

அணை எதிர்ப்புப் போராட்டம் 1978-ம்ஆண்டு அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணி நடைபெறத் தொடங்கியது. இந்த எதிர்ப்பு வட்டார சூழலியல் பாதுகாப்பு ஆர்வலர்களாலும், நிறுவனங்களாலும் தொடங்கப்பட்டது. வி.டி. சக்லானி என்ற வழக்கறிஞரின் தலைமையில் தேரி அணை எதிர்ப்புக் குழு போராட்டத்தில் இறங்கியது. அவருக்குப் பின் 1980 முதல் 2004 வரை இந்த இயக்கத்துக்கு சிப்கோ இயக்கத்தின் சுந்தர்லால் பகுகுணா தலைமை வகித்தார்.

இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக அணை கட்டமைப்புப் பணி 1978 ஏப்ரல் 24-ல் நிறுத்தப்பட்டது. அணை கட்டப்படுவதன் காரணமாக ஏற்படக்கூடிய கட்டாய இடப்பெயர்வுக்கு எதிராகவும், ஏற்கெனவே எளிதில் சிதைந்துவிடக்கூடிய நிலையில் இருந்த சூழலியல் ஒழுங்கை அணை வலுவிழக்கச் செய்யும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேற்கூறப்பட்ட இரண்டு காரணங்களைத் தவிர இந்த அணையின் நில அமைப்பியல் (geomorphology), நிலைத்தன்மை (stability) ஆகியவற்றைப் பற்றிய கவலை மக்களிடம் எழுந்தது. இந்த அணை மத்திய இமயமலையின் நில அதிர்வு இடைவெளியில் (seismic gap) அமையவிருந்தது.

1991-ல் 6.8 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டது மட்டுமின்றி, தேரி அணைப்பகுதியிலிருந்து 53 கி.மீ. தொலைவில் நில அதிர்வு மையம் (epicentre) கொண்டிருந்தது. இந்தப் பகுதியில் 8.4 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டால் அணை உடைந்து பல நகரங்கள், கிராமங்கள், காடுகள், பயிர் நிலங்கள், 5 லட்சம் மக்கள், வளர்ப்புப் பிராணிகளை மூழ்கடித்துவிடும். ஆனால், இந்த அணை ரிக்டர் அளவுகோலில் 8.4 நில அதிர்வைத் தாங்கக்கூடியது என்று பொறியாளர்கள் உறுதியளித்தனர்.

அணை எதிர்ப்புக்குழு எதிர்பார்த்தபடி 1,00,000-க்கும் அதிகமான மக்கள் அணைப்பகுதியில் இருந்து இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதால் போராட்டம் வலுத்தது. மறுகுடிபெயர்வு உரிமைகள் தொடர்பாக சட்டப் போர்கள் பல நடைபெற்றன. இதனால் அணை கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. 1978 ஆகஸ்ட் 14 அன்று அணை கட்டுவதை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று 8,000 பேர் கையெழுத்திட்ட மனு மக்களவையில் சமர்பிக்கப்பட்டது. போராட்டங்கள் தொடர்ந்தன.

இரண்டாம் கட்டம்

பிப்ரவரி 1980-ல் தொடங்கி 1990-ம்ஆண்டுவரை இரண்டாம் கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. முதல்கட்டப் போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு எஸ்.கே. ராயின் தலைமையில் ஒரு சூழலியல் ஆய்வுக்குழுவை அமைத்தது. அதற்குப் பிறகு இந்தப் போராட்டம் மனித உரிமை இயக்கமாக மாறியது மட்டுமின்றி பரவலும் அடைந்தது. வந்தனா சிவா உட்பட அறிஞர்கள் பலர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்தக் காலகட்டத்தில் மூன்று முக்கியக் கருத்துகள் போராட்டக் குழுவால் முன்வைக்கப்பட்டன: 1) அணையால் ஏற்படும் நன்மைகளைவிட அணையின் செலவு மிகவும் அதிகம்; 2) அணைப்பகுதியின் நில அதிர்வு விளைவுகள் பற்றி மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டது; 3) ஏற்கெனவே அணையின் ஓரிடத்தில் ‘L’ வடிவ விரிசல் ஏற்பட்டதால் அணையின் பாதுகாப்புத்தன்மை பற்றி அதிக கவனத்துடன் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

(தொடரும்)

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்