பி.துரைசிங்கம், ஆர்.பொன்னம்பலம்
நம்மிடையே தற்போது புழக்கத்தில் உள்ள அரிசி வகைகளில் நமது உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் மிகவும் குறைவாக உள்ளன. இதன் காரணமாக ஊட்டசத்துப் பற்றாக்குறையால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் பெருகிவருகின்றன.
இத்தகைய சீரழிவிலிருந்து நுகர்வோர், விவசாயம் ஆகியவற்றைக் காப்பாற்ற இயற்கை வழி வேளாண்மையின் மூலம் நமது நெல்லைக் காப்போம் (Save Our Rice) என்ற தாரக மந்திரத்தை கிரியேட் (Consumer Research, Education Action Training and Empowerment) கையிலடுத்துக் கடந்த 13 ஆண்டுகளாகத் திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவில் வருட வரும் 4000 விவசாயிகளுக்கு இலவசமாக 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி வருகிறோம்.
இந்நிலையில் இனத்தூய்மையான, கலப்பிடமில்லாத தரமான விதையால் 18 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை உற்பத்தி பெருகும். எனவே, திருவாரூர் மாவட்டம் குடவாசால் வட்டம் ஆவணப் பருத்தியூர் கிராமத்தில் 10 ஏக்கரில் கிரியேட் - நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் விதை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு அறிவியல் ரீதியில், நேர்த்தியான முறையில், இனத் தூய்மையுடன் அங்கக விவசாயச் சான்றளிப்பு அலுவலர் யோசனைப்படி 10 வகையான விதை நெல் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இம்மையத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள பாரம்பரிய விதை நெல், வரும் 2020 மே மாதம் நடக்க விருக்கும் 14-வது ஆண்டு தேசிய நெல் திருவிழாவில் 4000 விவசாயிகளுக்கு 2 கிலோ வீதம் இலவசமாக வழங்கப்படும். இது இந்தியாவிலே முதன் முறையாகப் பாரம்பரிய விதை நெல்லுக்காகத் தொடங்கப்பட்டுள்ள விதை ஆராய்ச்சி மையம்.
பிரசித்திபெற்ற 10 பாரம்பரிய விதை நெல்கள் 1. மாப்பிள்ளைச் சம்பா 2. காட்டுயாணம் 3. இலுப்பைப் பூ சம்பா 4. கருப்புக் கவுணி 5. கருங்குறுவை 6. தூயமல்லி 7. சொர்ணமசூரி 8. சீரகச்சம்பா 9. வெள்ளைப் பொன்னி 10. ஆத்தூர் கிச்சிலிச் சம்பா
மாப்பிள்ளைச் சம்பா
இந்த நெல் ரகம் 160 நாள் வயதுடைய மோட்டா ரகம். இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது. நேரடி விதைப்பும் செய்யலாம். இந்த ரகம் அதிக மருத்துவக்குணம் கொண்டது. சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இந்தச் சாதத்தில் வடித்த நீர் மிகவும் சத்துள்ளதாகவும் வலிமையைக் கொடுக்கும் தன்மையுள்ளது. இந்த வைக்கோலை உண்ணும் கால் நடைகளுக்கு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி கிட்டும். 5 அடி உயரம்வரை வளரக்கூடியது. அந்தக் காலத்தில் அரிசியும் அதன் சாத வடிநீரையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாப்பிள்ளை பலசாலியாக மாறமுடியும். அதனால்தான், இந்த நெல்லுக்கு மாப்பிள்ளைச் சம்பா எனப் பெயர் வந்தது.
காட்டுயாணம்
பாரம்பரிய நெல்ரகங்களின் பயன்பாட்டில் நீண்ட வயதுடைய, அதிக வளர்ச்சி அடையும் தன்மை உள்ளது இது. முழு வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்க கூடியது. அதிகபட்சம் 7 அடி வரை வளரக்கூடியது. வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும் தன்மை கொண்டது. இதில் கிடைக்கும் தவிட்டை மாட்டுக்குக் கொடுத்தால் அதிக பால் கிடைக்கும். இந்த ரகம் 180 நாள் வயதுடையது. வீடுகளுக்கு மேல் கூரையாக இதன் வைக்கோலைப் பயன்படுத்தினால் வெயில் காலங்களில் குளிர்ச்சியையும் பனிக் காலங்களில் வெப்பத்தையும் தரும்.
இலுப்பைப் பூ சம்பா
இந்நெல் நாவல்பழ நிறத்தில் இருக்கும். அரிசி வெள்ளைப் பழுப்பு நிறமாக இருக்கும். சாகுபடிக் காலத்தில் பயிர் பூக்கும்போது இலுப்பைப்பூ வாசனை இருக்கும். அதிக மருத்துவ குணம் கொண்டது. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடியது. குறிப்பாகச் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. மேலும் மூட்டுவலி, பக்கவாதம் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கஞ்சியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும். இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது. இதன் வயது 135 - 140 நாட்கள் சராசரியாக 5 ½ அடி உயரம் வரை வளரக்கூடியது. இனிப்புச் சுவையுடன் இரும்புச்சத்தும் கொண்டது. எலும்பை உறுதிப்படுத்தும் தன்மையுடையது. உடலில் உள்ள கழிவு, மாசுகளை வெளியேற்ற இது உதவும்.
கருப்புக் கவுணி
பாரம்பரிய நெல் ரகங்களில் சோழர் காலம் முதல் இன்றுவரை அதிகப் பயன்பாட்டில் உள்ள ரகம். மோட்டா ரகத்தைச் சார்ந்தது. களர் நிலத்துக்கும் நீர்பிடி நிலத்துக்கும் ஏற்றது. 6 அடி உயரம்வரை வளரக்கூடியது. இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும். இதன் வயது 140 முதல் 150 நாள். கவுணி அரிசிக் கஞ்சி சாப்பிட்டால் குதிகால் வலி, நாய்க் கடி விஷம் நீங்கும். மேலும் உடலில் தேவையற்ற நச்சுப்பொருள்களை வெளியேற்றும். புழுங்கல் அரிசியைவிடப் பச்சரிசி சிறந்தது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது. விழாக்களிலும் வீட்டு விசேஷங்களிலும் காப்பரிசி செய்ய இந்த ரகத்தை விரும்பி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
கருங்குறுவை
பாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படுத்தப்படும் ரகம் இது. சித்த மருத்துவத்தில் முக்கிய மூலப்பொருளாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதன் வயது 110 முதல் 120 நாளாகும். அரிசி சிவப்பாக இருக்கும். 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. கருங்குறுவை சாதத்துடன் சேர்த்து லேகியம் செய்து சாப்பிட்டால் யானைக்கால், தொழு நோய் போன்ற நோய்கள் குணமாகும். சாப்பாடு, இட்லி, தோசை செய்ய ஏற்ற ரகம். சுகப்பிரசவத்துக்கு இந்த அரிசிச் சாதம் வழிவகுக்கும். இந்த அரிசியை மூலிகையுடன் சேர்க்கும்போது வீரியம் அதிகரிக்கும். கிரியா ஊக்கியாகவும் செயல்படும்.
தூயமல்லி
இந்த ரகம் வெப்ப மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடிய நெல் ரகம். இந்தப் பயிரின் வயது 135 - 140 நாட்கள். பாரம்பரிய நெல் விதைகளில் இது வித்தியாசமானது. வெள்ளை அரிசி, சன்ன ரகம். மானாவரிப் பகுதிக்கு ஏற்ற ரகம். அரிசி மிகச் சின்ன ரகமாகவும், வெந்த அரிசிச் சாதம் மல்லிகைப்பூ போல வெள்ளையாகவும் இருக்கும். இதன் தவிடும் சத்து மிகுந்தது; நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவை தரக்கூடியது. இந்த ரகம் 5 ½ உயரம் வரை வளரும். மிதமாகக் கரையும் நார்ச்சத்து இதில் உள்ளது.
சொர்ண மசூரி
இந்த ரகம் தற்போது தமிழகத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. இந்த ரகம் திருந்திய நெல் சாகுபடி முறைக்கு ஏற்றது. இதன் வயது 130 நாள். பயிரின் சராசரி உயரம் 5 ½. ஆற்றுப் பாசனம், கிணறு, ஆழ்குழாய்க் கிணறு வசதி உள்ள பகுதிகளுக்கு ஏற்ற ரகம்.
பூச்சித் தாக்குதல் முற்றிலும் இருக்காது. இது சன்ன ரகம். சீரகச் சம்பாவுக்கு அடுத்த நிலையில் பிரியாணி தயாரிப்புக்கு ஏற்றது. இதனுடைய பழைய சாதம் அருஞ்சுவை கொண்டது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. வயதானவர்கள் விரும்பிச் சாப்பிடக் கூடியாது. தோல் நோய்க்குச் சிறந்த மருந்து.
சீரகச் சம்பா
தமிழகத்திலுள்ள அனைத்து வேளாண் மண்டலத்திலும் பயிரிட ஏற்ற நெல் ரகம். அதிகச் சத்தும் ருசியும் கொண்டது. பயிரின் சராசரி உயரம் 4 அடி. மிதமான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது. சீரகத்தின் வாசனை இந்த அரிசியில் உள்ளதால் சீரகச் சம்பா என்ற பெயர் பெற்றது. இது மிகச் சின்ன ரகம். அதனால் குழந்தைகளுக்கு ஏற்றது. நேரடி விதைப்புக்கும் நடவுக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணமாகவும்; விரைவில் வேகவும் கூடியது.
வெள்ளைப் பொன்னி
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடிய நெல் ரகம். குறிப்பாகக் காவிரிப் பாசனப் பகுதியில் செழித்து வரும். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்யலாம். புழுதிக்கால், நாற்று நடவு ஆகிய முறைகளுக்கு ஏற்றது. இந்த ரகப் பயரின் வயது 140 முதல் 150 நாட்கள். அதிகபட்சமாகப் பயிரின் உயரம் 5 ½ அடி. இது சன்ன ரக அரிசி.
ஆத்தூர் கிச்சிலிச் சம்பா
கிச்சிலிச் சம்பா மலை சார்ந்த பகுதிகளில் பயிரிடப்பட்டு வந்துள்ளது. இது சன்ன ரகம். நேரடி விதைப்பிலும் பயிரிடலாம். மழை வெள்ளத்துக்குக் கொஞ்சம் தாக்கு பிடிக்கும். 4 ½ முதல் 5 அடிவரை உயரம் வளரும். கதிர் முற்றியவுடன் சாயும் தன்மை கொண்டது. அறுவடைக்கும் நெல்லுக்கும் பாதிப்பு உண்டாகாது. சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி வட்டங்களில் பிரதான பயிராக விளைவிக்கப்படுகிறது. இதனால் இதற்கு ஆத்தூர் கிச்சிலிச் சம்பா என பெயர்.
சமீப காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான உணவுக்கு இந்த ரக அரிசி பயன்படுத்துவதாக அறிகிறோம். சத்து மிகுந்த கிச்சலிச் சம்பா அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும். இதன் வைக்கோல் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. அதனால் நல்ல மாட்டுத் தீவனமாக இருக்கும்.
தொடர்புக்கு: createdurai@gmail.com
createpon@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago