மாடியில் ஒரு பசுந்தோட்டம்

By செய்திப்பிரிவு

பிருந்தா சீனிவாசன்

வீட்டைச் சுற்றி வேம்பு, புங்கை, முருங்கை, கொடுக்காப்புளி, கொய்யா, சீத்தா போன்ற பல வகை மரங்கள், நித்திய மல்லி, குண்டு மல்லி, கனகாம்பரம், காட்டு ரோஜா, செம்பருத்தி, டிசம்பர், சாமந்தி போன்ற பல வகைப் பூச்செடிகள், தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய், பூசணி, சுரைக்காய், பாகற்காய், அவரை போன்ற பல வகை காய்கறிச் செடிகள், மாடி முழுக்கப் படர்ந்திருக்கும் சிவப்புப் பசலை, தளதளவென்று வளர்ந்திருக்கும் மணத்தக்காளி, பருப்புக்கீரை, பொன்னாங்கன்னி, குப்பைக்கீரை போன்ற பல வகை கீரைகள் இவற்றுடன் பசுமைச் செழிப்புடன் வளர்ந்த எனக்கு சென்னை அதன் வறட்சியான தோற்றத்தால் சட்டென்று அந்நியமாகிவிட்டது.

அப்போதெல்லாம் இங்கிலீஷ் காய்கறிகள் என்று சொல்லப்படும் பீன்ஸ், கேரட் போன்றவற்றை மட்டும்தான் கடையில் வாங்குவோம். அதுவும் பட்ஜெட்டைப் பொறுத்துத்தான். எங்கள் தோட்டத்தில் ஒவ்வொரு பருவமும் காயும் பழமும் கீரையும் தவறாமல் விளைந்துவிடும். வாரத்தில் நான்கு நாட்கள் நிச்சயம் கீரை உண்டு. சிவப்புப் பசலையில் துளிரான கீரையாகப் பறித்துக் கெட்டியாகக் கடைந்துவைப்பார் அம்மா.

மார்கழி பிறந்துவிட்டால் சுரையும் பூசணியும் அவரையும் போட்டி போட்டுக்கொண்டு காய்க்கும். சுரைக்காயை நகத்தால் அழுத்திப் பார்த்து முற்றிவிடுவதற்கு முன் அறுத்துக்கொண்டு வருவது என் வேலை. இவை போதாதென்று சிறு மழைக்கே முளைத்துவிடும் பூக்காளான்கள் வேறு. அம்மா அதையும் விட மாட்டார். உணவுக் காளானாகத் தேடிப் பார்த்து எடுத்துவந்து மசாலா அரைத்துவிட்டுக் கறிக்குழம்பு போலச் சமைத்துவிடுவார். இப்படி வீட்டில் விளைகிறவற்றையே சமைக்கிறார்களே என அப்போதெல்லாம் கோபமாக இருக்கும். ஆனால், அதன் அருமையை சென்னைதான் உணரவைத்தது.

அதிரவைத்த கலப்பினக் காய்கறிகள்

திருமணத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறிய எனக்குக் கோவைக்காயைக் கடைகளில் பார்த்ததும் அதிர்ச்சி. இதைக்கூடவா சமைப்பார்கள் என்று தோன்றியது. எங்கள் வீட்டு வேலிக்காத்தான் செடிகளில் அடர் சிவப்பாகத் தொங்கும் அவற்றை நாங்கள் சட்டைசெய்ததில்லை. ஆனால், அதைக்கூட இங்கே விலைகொடுத்து வாங்குவதை நினைத்து ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது. எவ்வளவுதான் ருசியாகச் சமைத்தாலும் குழம்பில் சுவை இல்லாததுபோலவே இருக்கும்.

ஒரு முறை வெண்டைக்காயின் நுனியை உடைத்துப் பார்த்து வாங்கியபோது, “எல்லாக் காயும் உடையும்மா. எல்லாமே ஹைபிரிட்” என்று கடைக்காரர் சொன்னபோதுதான் நாம் இவ்வளவு நாட்களாக வினையைத்தான் விலைகொடுத்து வாங்குகிறோம் என்று தோன்றியது. அதற்காக ஊருக்குத் திரும்ப முடியாதே. என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் வீட்டிலேயே தோட்டம் அமைக்கும் எண்ணம் தோன்றியது.

நாங்கள் வசிப்பதோ அடுக்குமாடிக் குடியிருப்பு. இங்கே தண்ணீரை லாரிகளில் வாங்கித்தான் பெரும்பாலான நாட்கள் செலவழிக்கிறோம். தோட்டம் அமைக்க இடமும் இல்லை. செடிகளுக்கும் தண்ணீரும் இல்லை. காரணங்களைச் சொல்லிப் பின்வாங்குவதை மாற்றி, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழலாமே எனத் தோன்றியதும் மாடியில் தோட்டம் அமைக்க முடிவெடுத்தேன். உடனே அது பற்றிய தகவல்களைச் சேகரித்தேன்.

மரபு விதையே நல்லது

மாடியில் மண்ணைக் கொட்டித் தோட்டம் வைக்க முடியாது. அதற்குப் பதிலாகத் தேங்காய் நார்க் கழிவை அடித்தளமாக வைத்து அதில் செடி வளர்க்கலாம் என்பது எனக்குப் பிடித்திருந்தது. ‘காயர் பித்’ என்று சொல்லப்படும் தேங்காய் நார்க் கழிவு, வெவ்வேறு அளவுகளில் செங்கல் கட்டிபோலக் கிடைக்கிறது. அதில் தண்ணீர்க் கசிவு இருக்காது என்பதால் அதைச் சொல்லி வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற்றேன்.

தோட்டக்கலைத் துறை சார்பில் தேங்காய்நார்க் கழிவுக் கட்டிகள், விதைகள், உரம் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்படுவதாகக் கேள்விப்பட்டு அதை வாங்கிவந்தேன். அப்படி வழங்கப்படும் விதைகள் மரபணு மாற்றப்பட்டவை என்றும் அதில் விளையும் காய்கறிகளிலிருந்து பெறப்படும் விதைகள் முளைக்காது என்றும் வாட்ஸ் அப்பில் வந்த தகவலைத் தோழி அனுப்பிவைத்தாள். விதைகள் அடர் நிறத்திலும் மினுமினுப்பாகவும் இருந்ததால் அவற்றை யார் உற்பத்தி செய்தார்கள் என முகவரியைப் பார்த்தேன்.

வட இந்திய முகவரியே விதைகள் அடைக்கப்பட்டிருந்த உறைகள் அனைத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படிப் பேரளவில் தயாரிக்கப்படும் விதைகளைப் பூச்சி அரிப்பிலிருந்து காப்பதற்காக ரசாயனப் பூச்சுக்கு உட்படுத்துவார்கள். அதனால் எதற்குத் தேவையில்லாத பிரச்சினை என்று ஊரிலிருந்து விதைகளை எடுத்துவந்தேன். பூசணி, சுரை, அவரை போன்ற விதைகளைச் சாம்பலில் புரட்டி வெயிலில் காயவைத்துச் சேமித்துவைப்போம். சிலவகைத் தானியங்களைச் செம்மண்ணில் குழைத்துக் காயவைத்துச் சேமிப்போம். எவ்வளவு நாட்களானாலும் அவை அப்படியே இருக்கும்.

இயற்கைப் பூச்சிவிரட்டி

நான் வாங்கிவந்த மாடித்தோட்டப் பொருட்களில் ஆறு பைகளில் தேங்காய்நார்க் கழிவுக் கட்டிகள் இருந்தன. தண்ணீர் ஊற்றியதும் தண்ணீரை உறிஞ்சி அவை பெருத்தன. அதைக் கைகளால் உடைத்து, உரத்தையும் சேர்த்துக் கலந்தேன். இவை தவிர மண் தொட்டிகள் சிலவற்றையும் வாங்கினேன்.

சென்னையில் முருங்கைக்கீரையைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறதே என்று செடி முருங்கை விதையைப் பெரிய தொட்டியில் ஊன்றினேன். வெண்டை, பாகல், கத்தரி எனத் தொட்டிக்கு இரண்டிரண்டு விதைகளை ஊன்றினேன். மற்ற தொட்டிகளில் சிறுகீரை, தண்டுக்கீரை விதைகளைத் தூவினேன். மருந்துக்குப் பயன்படுமே என்று ஓமவல்லி, கருந்துளசி, வெற்றிலை ஆகியவற்றையும் நட்டுவைத்தேன். நான்கைந்து நாட்களில் விதை முளைத்துத் துளிர் தலைகாட்டியபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

லேசாகத் தண்ணீர் தெளித்தாலே போதும் என்பது தேங்காய்நார்க் கழிவின் சிறப்பு என்பதால் ஒருநாள் விட்டு ஒருநாள் சிறிதளவு தண்ணீர் தெளித்தேன். செடிகள் அனைத்தும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வளர்ந்துவிட்டன. பாகற்கொடி மஞ்சளாகப் பூத்தபோது செயற்கையை வென்றுவிட்ட பேரானந்தம். பாகலைத் தொடர்ந்து வெண்டையும் கத்தரியும் காய்த்தன.

வெண்டைக்காயுடன் கத்தரியைச் சேர்த்து வதக்கல் செய்தபோது கிடைத்த ருசியும் சமைத்த பிறகும் மாறாத வெண்டையின் பச்சை நிறமும் இயற்கையின் அருமையை உணர்த்தின. செடி முருங்கை காய்க்கவில்லை என்பதைத் தவிர குறையொன்றுமில்லை. ஆனால், வாரம் ஒரு முறை சமைக்கிற அளவுக்குக் கீரையைக் கொடுக்கிறது. பூச்சித்தொற்றைச் சமாளிக்க, பச்சைமிளகாய், இஞ்சிக் கரைசலைத் தெளிப்பேன். சிலநேரம் வேப்ப எண்ணெய்யும் கைகொடுக்கும்.

வீட்டில் யாருக்காவது லேசாகச் சளித்தொற்று ஏற்பட்டால் மாடிக்குச் சென்று வெற்றிலை, ஓமவல்லி, கருந்துளசி ஆகியவற்றைச் சிறிது பறித்து, கஷாயம் வைத்துக் குடித்தால் சரியாகிவிடும். தினமும் செடிகளையும் அவற்றின் வளர்ச்சியையும் பார்க்கிறபோது மனத்துக்கு நிறைவும் அமைதியும் கிடைக்கின்றன. என் குழந்தைகளையும் தோட்டப் பராமரிப்பில் ஈடுபடுத்தியிருப்பதால் அவர்களும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குத் தயாராகிவருகிறார்கள். பிறந்த வீட்டு நினைவாகப் புதிதாக வைத்திருக்கும் நித்திய மல்லியும் இரண்டு வாரங்களுக்கு முன்பு பூக்கத் தொடங்கிவிட்டது.

தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்