கு.வி. கிருஷ்ணமூர்த்தி
ஆப்பிரிக்காவின் நைரோபியில் 1985-ம் ஆண்டு நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் ‘பெண்களும் சூழலியலும்’ என்ற தலைப்பிலான விவாதத்தின்போதுதான் இந்தியாவின் இமாலயப் பகுதியில் நடைபெற்ற சிப்கோ இயக்கம் உலக மக்களின் கவனத்துக்குச் சென்றது. ‘சிப்கோ’ என்ற சொல்லுக்கு ‘பற்றுடன் தழுவிக்கொள்ளுதல்’ அல்லது ‘கட்டிப்பிடித்துக்கொள்ளுதல்’ என்று பொருள்.
சிப்கோ பிறந்தது
குஜராத்தில் நடந்த பிஷ்னோய் இயக்கத்தால் ஊக்கம் பெற்று, இமயமலையின் மத்தியப் பகுதியில் தேராய் காடுகளில் அரசு ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடற்ற மரம் வெட்டுதலுக்கு எதிராக சிப்கோ இயக்கம் தோன்றியது. ஒப்பந்தக்காரர்கள் காட்டின் சில பகுதிகளை மொட்டையடித்ததால், கட்டுப்பாடற்ற வெள்ளம், மண்சரிவு, மண் அரிப்பு போன்றவை ஏற்பட்டன. அலகானந்தா பள்ளத்தாக்கில் பல ஆற்றுப் பாலங்களையும், 160 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களையும் வெள்ளம் அடித்துச் சென்றது.
அதன் பிறகு மரம் வெட்டும் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்; மக்களுடைய மரபார்ந்த காடு-பயன்பாட்டு உரிமைகளை மீண்டும் கொடுக்க வேண்டும்; சமமான முறையில் சிர்-பைன் மரச்சாறு (பிசின்) தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 1971-ல் கோபேஷ்வர் என்ற இடத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1973-ல்மார்ச் சாமோலி மாவட்டத்தின் கோபேஷ்வரில்தான் சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக அப்போது இருந்த கோபேஷ்வர், அலகானந்தா பள்ளத்தாக்கின் மிகப் பெரிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகத் திகழ்ந்தது. அலகாபாத்தைச் சேர்ந்த விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் சைமண்ட்ஸ் நிறுவனம் கோபேஷ்வரில் இருந்த 10 மிகப் பெரிய சாம்பல் மரங்களை வெட்ட அரசு அனுமதியோடு வந்தது; 22 இதர மரங்களும் இதே நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
அதே வேளை, சாண்டி பிரசாத் பட் உருவாக்கிய தஷாலி கிராம் சுயராஜ்ய சங்கம் என்ற கூட்டுறவு வெட்டுமரப் பொருள் உற்பத்தி நிறுவனத்துக்கு சாம்பல் கட்டை பயன்படுத்த ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த உரிமையை உத்தரப் பிரதேச அரசு ரத்து செய்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
அரசும் பெருநிறுவனமும்
சைமண்ட்ஸ் நிறுவனத்திலிருந்து மரம் வெட்ட வந்தவர்களைஅந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தடுத்தனர். கோஷங்களை எழுப்பி, மரங்களைக் கட்டித் தழுவிக்கொண்டு அவர்கள் போராடினர். இதனால் ஒப்பந்ததாரர்கள் மரங்களை வெட்டாமல் திரும்பிவிட்டனர். சில நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் மரம் வெட்ட வந்தபோது, மீண்டும் போராட்டம் நடந்தது. என்றாலும், 1978 டிசம்பரில் மரத்தைக் காக்க மக்கள் யாரும் இல்லாதபோது 5 மரங்கள் வெட்டப்பட்டன.
ஐந்து மரங்கள் வெட்டப்பட்ட பின்பு போராட்டம் தீவிரமடைந்தது. இதற்கு முக்கியக் காரணம் தலித் மக்களின் மேம்பாட்டுக்காகப் போராடிய, நவஜீவன் ஆசிரமத்தை உருவாக்கி, நடத்திவந்த சுந்தர்லால் பகுகுணாவின் பங்கேற்புதான். சுற்றியிருந்த பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது.
அவர் நடைப்பயணமாகப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சிப்கோ இயக்கத்துக்கு ஆதரவு திரட்டினார். மார்ச் 1974-ல் இந்தப் போராட்டம் அதன் உச்சத்தை அடைந்தது. படிப்பறிவு இல்லாத, 50 வயதான கவுரா தேவி (இவர் கிராம மண்டலத்தின் தலைவி) என்பவரின் தலைமையில் ரேனி கிராமத்துப் பெண்கள் மரங்களைத் தழுவிக்கொண்டும், பின்வரும் முழக்கங்களை முழங்கிக்கொண்டும், மரம் வெட்ட வந்தவர்களைத் தடுத்தார்கள்.
“இந்தக் காடு எங்கள் தாயின் வீடு, இதை எப்பாடு பட்டாவது நாங்கள் காப்போம்”
“மரத்தைக் கட்டித் தழுவுங்கள் வெட்டப்படுவதிலிருந்து அவற்றைக் கட்டித் தழுவுங்கள் இது நம்முடைய மலையின் சொத்து பறிக்கப்படுவதிலிருந்து அவற்றைக் காப்பாற்றுங்கள்”
1975-ல் சிப்கோ இயக்கம் மீண்டும் தொடர்ந்தபோது, கோபேஷ்வரைச் சேர்ந்த ஏறத்தாழ 200 பெண்கள் பங்கேற்று மரம் வெட்டப்படுவதைத் தடுத்தனர். இதைத் தொடர்ந்து 1980-ல் டுங்ரி-பைட்டோலி கிராம மக்கள் - பெரும்பாலும் பெண்கள், 1,600 மரங்கள் வெட்டப்படுவதில் இருந்து காப்பாற்றினார்கள்.
சிப்கோவின் விளைவுகள்
பகுகுணா, சாண்டி பிரசாத் பட் ஆகிய இருவரும் பழங்குடி மக்களின் நியாயமான குறைகளுக்குச் செவிசாய்த்து அவற்றுக்கான தீர்வு நோக்கி செயல்படத் தொடங்கினார்கள்; அரசின் கவனத்தை ஈர்க்க ஊடகங்களையும் பொதுக்கூட்டங்களையும் பயன்படுத்தினார்கள். பழங்குடி மக்களுக்கு ஊறு விளைவிக்கும் வனத் திட்டங்களையும், வனப் பொருட்களின் வியாபார முயற்சிகளையும், மக்களோடு சேர்ந்து எதிர்க்கத் தொடங்கினார்கள். இவற்றின் மூலம் ஒரு எதிர்கால சிப்கோ இயக்கத்துக்கு ஒரு அடிப்படை அமைப்பு உருவாக்கப்பட்டது.
மக்களிடம் பரவலான விழிப்புணர்வு ஏற்பட இந்த இயக்கம் காரணமாகத் திகழ்ந்தது. இந்த இயக்கம் இயற்கைப் பாதுகாப்பு - பேணல் - முறைப்படுத்தப்பட்ட பயன்பாடு (sustainable use) ஆகியவற்றில் மனித இனத்தின் பொறுப்புடைமையை வலியுறுத்துகிறது. காடுகள், மரங்கள் பற்றிய இந்தியப் பாரம்பரியத் தத்துவங்களின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிய உதவியுள்ளது.
சிப்கோ இயக்கம் உலகம் முழுவதும் பிரபலமான ஒரு சூழலியல் பாதுகாப்பு இயக்கம். இதைப் பற்றிப் பல சிறார் நூல்களும் வெளிவந்துள்ளன. இவற்றில் முக்கியமானவை ஜே. அட்கின்ஸ் என்பவரின் ‘Aani and the Tree Hugers’, டி.எஸ். ரோஸ் என்பவரின் ‘ The People Who Hugged the Trees’.
(தொடரும்) கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago