இரமேசு கருப்பையா
நதியின் மரணம் கேள்விப் பட்டிருப்போம். தண்ணீருக்குத் தவிக்கும் தமிழகத்தில் வாய்க்கால்களும் கொல்லப் பட்டுள்ளன; கொல்லப்படுகின்றன.
ஒவ்வொரு காலத்திலும் புதிதாக நீர்நிலைகள் உருவாக்கப்படும்போது, அந்தக் காலச் சூழ்நிலையை ஆவணப்படுத்தும் வகையில் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. பல்லவர்கள் காலம் தொட்டு சோழர்கள் காலம்வரை தொடர்ந்த இந்த வழக்கம், ஆங்கிலேயர் காலம்வரை நீடித்து வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக ராஜந்திர சோழனின் வட இந்திய வெற்றியைப் பறைசாற்றும் வண்ணம் கங்கை கொண்ட சோழபுரத்தில் அவர் உருவாக்கிய ஏரிக்கு ‘சோழகங்கப் பேரேரி' என்று பெயரிட்டார்.
அதே போன்று ஆங்கிலேயர் காலத்தில், தற்போது பெரம்பலூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்துக்கு பெரம்பலூர் நகரின் வடமேற்குப் பகுதியில் பெய்கிற மழைநீர் நூறாண்டுகளுக்கு முன்பு வாய்க்கால் அமைத்துக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளது. அந்தத் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும் அளவுக்கு மழைநீர் எப்போதும் நிறைந்து இருந்திருக்கிறது. தெப்பக்குளத்துக்கு நீர் கொண்டு சென்ற வாய்க்காலின் பெயர் ‘ஜார்ஜ் வாய்க்கால்’.
வெள்ளைக்கார வாய்க்கால்
பெரம்பலூர்-துறையூர் சாலையில் அரணாரை கைகாட்டிக்குக் கிழக்கில் அமைந்து துறையூர் சாலைவழியாக ஓடி, அரசு மருத்துமனை எதிரில் பாய்ந்து தற்போது தெப்பக்குளத்தின் வடமேற்கு மூலை வரத்து வழியாக இந்த வாய்க்கால் அமைந்திருந்தது. ஆனால், நாளடைவில் இந்த வாய்க்காலானது காணாமல் போகச் செய்யப்பட்டுவிட்டது.
இருந்தபோதும் இதற்குச் சான்றாக நூறாண்டு பழமையான கல்வெட்டு அந்த இடத்தில் இருந்தது. அந்தக் கல்வெட்டில் இங்கிலாந்து நாட்டு அரசின் ஆளுகைக் குறியீடும், GEORGE CHANNEL, 12 Dec 1911 என்று ஆங்கிலத்திலும் கீழே ‘ஜார்ஜ் வாய்க்கால்’ என்று தமிழிலும் குறிக்கப்பட்டுள்ளன.
ஜார்ஜ் வாய்க்கால் என்ற பெயரையும், அதில் குறிக்கப்பட்டு உள்ள நாள், ஆண்டு ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வுசெய்தபோது, இங்கிலாந்து பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரையே அந்தப் பெயர் குறிக்கிறது எனத் தெரியவருகிறது.
அரசர் ஜார்ஜின் பட்டமேற்பு நமது நாடு ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தபோது பிரிட்டன் அரச குடும்பத்தின் பெயரிலயே ஆட்சி நடந்தது. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆங்கிலேய ஆட்சியில் பிரிட்டன் அரசர் ஒருவர் முதன்முறையாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு 1911-ல் வந்தார். அதுவே முதலும் கடைசியும்.
அப்போது டெல்லியில் பிரிட்டனின் இறையாண்மைக்கு உட்பட்ட நாடு என்பதை காலனியாதிக்க நாடுகளுக்குப் பறைசாற்றும் விதமாக ‘டெல்லி தர்பார்’ என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மன்னர்கள், ஆங்கிலேயே ஆட்சியர்கள் கலந்து கொண்ட பட்டமேற்பு விழா, படைகள் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றன. அந்த நிகழ்வின் போதுதான் பிரிட்டிஷாரின் தலைநகராக இருந்த கல்கத்தா மாற்றப்பட்டது.
முகலாய மன்னர்களால் உருவான டெல்லிக்கு மாற்றாக, தற்போதைய புது டெல்லிக்கு அப்போது அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த நிகழ்வில் 1911 டிசம்பர் 12 நாளைக் குறிக்கும் வகையிலும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆளுகையை குறிக்கும் வகையில் பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அவற்றின் இரண்டு பக்கங்களிலும் இந்த செய்திகள் அச்சிடப்பட்டு உள்ளன.
அப்போது வழங்கப்பட்ட பதக்கம் போன்றே பெரம்பலூர் கல்வெட்டிலும் இங்கிலாந்து அரசரின் மகுடம், அதன் கீழே இரண்டு இலைக்கொத்துகள் பதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறிப்பிடும் வண்ணம் பெரம்பலூரில் வெட்டிய வாய்க்காலுக்கு ஜார்ஜ் வாய்க்கால் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கண்டுகொள்ளாத அரசு
புதுடெல்லி உருவாக அடிக்கல் நாட்டப்பட்ட அதே நாளில்தான் இந்த வாய்க்கால் திறக்கப்பட்டிருக்கிறது. பெரம்பலூர் ஒரு பெரிய நகரமாகவும், ஒரு மாவட்டத்தின் தலைநகரமாகவும் இல்லாத காலத்தில் இது நடந்துள்ளது. நீரின் தேவை நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில், நூறாண்டு கண்ட வாய்க்கால் காணாமல் போய்விட்டது. அதற்குரிய கல்வெட்டும் பாதுகாக்கப்படவில்லை. இந்தக் கல்வெட்டு முறையான பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி, சாலையோரப் புதரில் கிடந்தது.
கடந்த 2015 ஆண்டில் ‘பொதுநீர்’ அமைப்பினர் இந்தக் கல்வெட்டை மீட்டெடுத்து, தூய்மைப்படுத்தி நட்டு வைத்தனர். ஜார்ஜ் வாய்க்காலைக் காணவில்லை என்று கைகளில் விளக்கு ஏந்தி தேடும் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த தாரேஷ் அகமது, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, நகராட்சி, ஊரகவளர்ச்சித் துறை ஆகிவற்றோடு ஆலோசனையும் மேற்கொண்டார். ஆவணங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. பின்னர் ஏதோ காரணத்தல் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
அழிக்கும் வளர்ச்சி
தற்போது பெரம்பலூர்-துறையூர் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காகப் பல நூறு புளிய மரங்கள் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கப்பட்டு அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்த வேளையில் சாலைப் பணியின் ஒரு பகுதியாக ‘ஜார்ஜ் வாய்க்கால்’ கல்வெட்டு பிடுங்கி எறியப்பட்டு தலைகுப்புறக் கிடக்கிறது. நிலத்தில் இருந்து நீக்கப்பட்ட ஜார்ஜ் வாய்க்கால், தற்போது நினைவில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறது! நீர்ப் பற்றாக்குறைக்கு மற்றொரு பக்கம் காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். வரலாற்றுப் புகழ்பெற்ற அந்த வாய்க்காலை மீட்பதும் கல்வெட்டு பழைய இடத்தில் நிறுவப்படுவதும்தானே இதற்கு பதில்?
கட்டுரையாளர் தொடர்புக்கு:
mazhai5678@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 mins ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago