மாசுபாட்டுக்கு விலையாக மக்கள் உயிரைக் கொடுக்கிறோம்: நித்யானந்த் ஜெயராமன் நேர்காணல்

By செய்திப்பிரிவு

சு. அருண் பிரசாத்

நாட்டின் தலைநகர் டெல்லி மீண்டும் உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. அதற்குக் காரணம் ஒட்டுமொத்த டெல்லியையும் மூச்சுத்திணற வைக்கும் காற்று மாசுபாடுதான். இந்தக் காற்று மாசுபாடு டெல்லியுடன் நிற்காமல், சென்னைவரை வந்துவிட்டது.

உயிரைப் பறிக்கும் இந்தப் பிரச்சினை குறித்துச் சற்றும் அலட்டிக்கொள்ளாத மனோபாவமே நாடெங்கும் நிலவுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவு நம் ஒவ்வொருவரையும் பாதிக்கத் தொடங்கி ஆண்டுகள் பல கடந்துவிட்ட நிலையில், காற்று மாசுபாட்டுப் பிரச்சினையை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெளிவுபடுத்துகிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்:

டெல்லியைச் சூழ்ந்திருக்கும் காற்று மாசுபாட்டுக்கு அடிப்படைக் காரணம் என்ன?

இப்போது ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு ஒற்றைப் பிரச்சினையால் உருவானதல்ல. எவ்விதப் பாதுகாப்பும் இன்றிக் கட்டப்படும் கட்டிடங்கள்; நகரைச் சுற்றி நிலக்கரி உள்ளிட்டவற்றை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகள்; அளவுக்கு அதிகக் குப்பையை எரித்தல்; டெல்லியில் இருந்து மூன்று மணிநேரத் தொலைவில் மதுராவில் செயல்படும் பெரிய சுத்திகரிப்பு ஆலை; போதாக்குறைக்கு நகரின் கட்டற்ற வாகனப் பெருக்கம் உள்ளிட்டவை காற்று மாசுபாட்டுக்கு அடிப்படைக் காரணிகள். டெல்லியைச் சுற்றியிருந்த பசுமை அரண்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, கட்டிடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

காற்று மாசுபாட்டின் அளவில் மிகப் பெரிய மாற்றமில்லை; பசுமை அரண்களின் அழிவின் காரணமாகவே காற்று மாசு வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது. ஒரு பக்கம் பசுமை அரண்களின் எண்ணிக்கை குறைந்து, மறுபக்கம் மாசு ஏற்படுத்தும் காரணிகள் அதிகரித்திருக்கின்றன. மேலும், தற்போது நிலவும் தட்பவெப்ப சூழல், காற்றின் வேகம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் காற்றோட்டத்துக்கான வழியில்லாமல் ஒரே இடத்தில் மாசுபாடு நிற்கிறது. சாதாரண நாட்களில் வெளியேற்றப்படும் மாசு காற்றோடு காற்றாக அடித்துச் செல்லப்படும். ஆனால், குளிர் காலத்தில் அப்படிச் செல்லாமல் கீழே படிந்துவிடுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே டெல்லியின் காற்று மாசு குறித்துப் பேசப்படுகிறது; பிறகு வேறு விஷயங்களைக் குறித்துப் பேச்சு மாறிவிடுகிறது. இது சுற்றுச்சூழல் அக்கறையின்மை இல்லையா?

சுற்றுச்சூழல் குறித்த அக்கறை பரவலாக இல்லை. டெல்லி, சென்னை எனப் பிரச்சினை எங்கிருந்தாலும் அது நேரடியாக உயிரைப் பறிக்காதவரை, அதைப் பிரச்சினையாகப் பார்க்கும் மனோபாவம் இல்லை. வளர்ச்சி என்ற பெயரில் உருவாகும் ஒவ்வொன்றுமே சூழலியலை அழித்தே உருவாக்கப்படுகின்றன. நாம் வாழும் சூழலியல் குறித்த ஆழமான புரிதலோ, அதை மதிக்கும் அணுகுமுறையோ பெரும்பாலோரிடம் இல்லை. இந்த நிலையில், சூழலியல் குறித்த புரிதலை ஏற்படுத்தினாலும்கூட, பொருளாதார அடித்தளத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. நாம் வாழும் சுற்றுச்சூழல் குறித்த நம்முடைய மதிப்பீட்டில், அணுகுமுறையில் மாற்றம் தேவை.

மோசமான காற்று மாசு கொண்ட நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இருந்த பெய்ஜிங், இன்று அதிலிருந்து மீண்டிருப்பது எப்படிச் சாத்தியமானது?

முதலாவதாக நகரத்தைச் சுற்றி இருந்த, மாசுபடுத்தக்கூடிய பெரிய தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள் ஆகியவற்றை மூடிவிட்டார்கள்; குறிப்பிட்ட காலத்துக்கு அவற்றின் செயல்பாட்டை நிறுத்திவைக்கிறார்கள். இரண்டாவதாக, அங்கே கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுகிறார்கள்.

ஆனால், இந்தியாவிலோ அதற்கு நேர்மாறாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழலுக்கு எதிராகத்தான் வேலை செய்துகொண்டிருக்கிறது. நிலக்கரியை எரிக்கக்கூடிய அனல்மின் நிலையங்களில் மாசு வெளியேற்றத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிகள் 2019-க்குள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அதற்கான எந்தப் பணியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அந்த நிலையங்களுக்குச் சாதகமாக, விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறார்கள். அனல் மின்நிலையங்களுடைய லாபத்துக்காக மக்களின் உயிரைப் பலிகொடுக்க அரசு தயாராக இருக்கிறது. மக்களின் உயிர், வணிக லாபம் ஆகிய இரண்டில் எது மதிப்புமிக்கது என்ற புரிதல் தேவை. தொழிற்சாலைகள் சிரமமின்றித் தொழில் செய்வதற்கு, மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்ற நிலையே இங்கு இருக்கிறது.

சீனாவில் நகரத்தைவிட்டு மாசு தள்ளி வைக்கப்படுகிறது; ஆனால், அது தீர்வு கிடையாது. முன்பு சென்னை உயர் நீதிமன்றம் அருகே நிலக்கரி சேமிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அதனால் மாசு ஏற்படுகிறது என்பதால் எண்ணூருக்கு மாற்றப்பட்டது. எண்ணூரில் வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா? நவீனத் தீண்டாமையாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

காற்று மாசு, நீர் மாசு உட்பட எதையுமே அரசியல்வாதிகள், அரசுகள் கண்டுகொள்வதேயில்லை. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அரசு எப்படிப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்?

புதிதாக எதுவும் செய்யத் தேவையில்லை; ஏற்கெனவே இருக்கிற சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தினால் போதும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இருக்கிறது. ஆனால், அது மாசைக் கட்டுப்படுத்துவதில்லை. இன்றைய நிலையைப் பார்க்கும்போது சுற்றுச்சூழல் சட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதுபோல் தெரியவில்லை.

நம் ஆறுகளில் நீரே இல்லை; இருப்பனவும் மோசமாக மாசுபட்டிருக்கின்றன. ஆண்டு முழுவதும் காற்றின் தரம் மோசமாக இருக்கிறது. அப்படியென்றால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய பணிகளைச் செய்யவில்லை என்றுதானே அர்த்தம்? தொழில்நுட்பத்தில் பெரும் திருத்தங்கள் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை, அரசமைப்புகளைப் பொறுப்பாக்குவதுதான் இப்போதைய தேவை.

டெல்லியின் மாசு இங்கு வந்துதான் நமக்குப் பிரச்சினை வர வேண்டும் என்பதில்லை; நம்மைச் சுற்றியே மோசமான மாசுபாடு இருக்கிறது. இதைக் கவனிக்க வேண்டிய அரசு அதிகாரிகளுக்கு பொறுப்பே கிடையாது. இதனால் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் ஒரே பிரச்சினை திரும்பத் திரும்பப் பாதிப்பை ஏற்படுத்துகிறது; அப்போதைக்கு மட்டுமான பேசுபொருளாகிறது.

காற்று மாசு பிரச்சினையை எதிர்கொள்வதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன? செயல்படுத்தினாலும் கிடைக்கக்கூடிய உடனடி - நீண்டகாலப் பலன்கள் என்னென்ன?

காற்று மாசுபாட்டை இன்றைக்கு நிறுத்தினால், அடுத்த நாளில் இருந்து மாற்றம் தெரியும். ஆனால், ஆரோக்கியம் வளரப்போவதில்லை. பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிரமத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். குறைவாக பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு முழுமையாக மீண்டுவருவதற்கான சாத்தியமிருக்கிறது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிரச்சினை இருக்காது.

ஆனால் முதியவர்கள், புற்றுநோயாளிகள், இதய நோயாளிகள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள், குழந்தைகள் ஆகியோர் எளிதாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள். தாங்கக்கூடிய காற்று மாசுபாட்டு அளவுகூட இவர்களைப் பாதிக்கவே செய்யும். உலக சுகாதார நிறுவனத்தின்படி சர்வதேச அளவில் இயல்பான காற்றின் தரநிர்ணயம் என்பது PM2.5 µg/m3 என்ற அளவுக்கு 25ஆக இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த அளவுகளில், 60-90 மிதமான அளவு; 90-120 மோசம்; 120-250 மிக மோசம்; 250-க்கு மேல் தீவிரம். 60-90 அளவில் ஆஸ்துமா நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது பரிந்துரை. ஆனால், அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது, இல்லையா?

இதுபோன்ற சுற்றுச்சூழல் அக்கறையின்மை நமது பொருளாதாரத்திலும், சுற்றுச்சூழலிலும், உடல் ஆரோக்கியத்திலும், எதிர்காலத் தலைமுறையிலும் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்?

உடல் சார்ந்த பிரச்சினைகளைத் தாண்டி உளவியல் ரீதியிலான பாதிப்பையும் காற்று மாசு ஏற்படுத்துகிறது. வேலைக்குச் செல்ல முடியாத சூழலில் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த சிக்கல்கள், கவலையை ஏற்படுத்தும்; கர்ப்பிணிகளுக்குக் குழந்தைகளின் நலம் குறித்த கவலை உருவாகும். உடம்பில் நுரையீரல் செய்யும் முக்கியமான வேலை, ஆக்ஸிஜனைப் பிரித்து மூளைக்குக் கொண்டுசெல்வது.

இந்த நிகழ்வில் சிக்கல் ஏற்படும்போது, அது உடல் செயல்திறனையும் பாதிக்கும். இந்தியாவைப் போன்ற மோசமான பொருளாதார ஆதாரங்களைக் கொண்ட நாட்டில், காற்று மாசு போன்ற பிரச்சினைகள் நிறைய நோயாளிகளை உருவாக்கி மருத்துவத் துறையின் வருமானத்துக்கே வழிவகுக்கும். பணிக்குச் செல்பவர்கள் மாதத்தில் மூன்று, நான்கு நாட்கள் உடல் நலமின்மையால் விடுப்பு எடுக்கும்போது, உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. தேசிய அளவில் பார்க்கும்போது நாட்டின் மொத்த உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எது எப்படி இருந்தாலும், நீண்ட காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் எந்த அம்சமும் எதிர்காலம் என்ற ஒன்றையே இல்லாமல் ஆக்கிவிடும்!

இந்த நிலையில், மக்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அரசைப் பொறுப்பாகச் செயல்பட வைப்பதுதான்.

ஆயுளைக் கெடுக்கும் காற்று!

தலைநகர் டெல்லியைச் சூழ்ந்துள்ள காற்று மாசு குறித்து இன்றைக்குத் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. இந்தக் காற்று மாசால், நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதத்தைக் கொண்டுள்ள வடஇந்தியாவில், மக்களின் ஆயுளில் ஏழு ஆண்டுகள்வரை குறையக்கூடும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகள் அமைந்துள்ள கங்கைச் சமவெளிப் பிரதேசத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 48 கோடி. காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தப் பகுதியினரே.

அதேநேரம் இந்தப் பகுதிக்கு வெளியில் வாழும் மக்களின் ஆயுள் 2.6 ஆண்டுகள்வரை குறைவதற்குச் சாத்தியமுள்ளது.

1998-ல் இருந்த அளவுடன் ஒப்பிடும்போது, மாசு ஏற்படுத்தும் பொருட்களின் அளவு 70 சதவீதம் தற்போது அதிகரித்திருக்கிறது. இதனால் 2016-ல் இந்தியாவில் ஆயுள் சராசரி 4.3 ஆண்டுகள் குறைந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்