ஜா. செழியன்
அந்தக் காட்டுக்குள் நுழைந்ததும் ஒரு மரக்கிளையில் இருந்து, அடுத்த மரக் கிளைக்குச் சாம்பல் நிற அணில் தாவிச் சென்றதைப் பார்த்தது காட்டுயிர் ஆர்வலர்களைப் பொறுத்தவரை நல்லதோர் அனுபவமே. அதுவரை உருவில் சிறிய அணிலையே பார்த்துப் பழகியிருந்ததால், உருவில் பெரிய சாம்பல் அணில் சற்றே ஆச்சரியத்தைத் தந்தது. நாங்கள் இருப்பதைச் சிறிதும் கவனிக்காமல் தன் வாழிடம், தன் மரக்கிளை என்று ஆனந்தமாக அது விளையாடிக் கொண்டிருந்தது.
நாங்கள் இருந்த இடம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அணில் சரணாலயம் (Grizzled Squirrel Wildlife Sanctuary). பெயரில் அணில் சரணாலயம் இருந்தாலும், எண்ணற்ற பறவை வகைகளையும் இங்கே பார்க்க முடியும். பொதுவாகப் புலி, பறவை சரணாலயங்களே செய்திகளில் அதிகம் இடம்பிடிக்கின்றன. அதேநேரம் அணில் ஒன்று சரணாலயம் எந்த அளவுக்கு ஆச்சரியத்தைத் தரும் என்பதை நேரில் சென்று பார்த்தால்தான் உணர முடியும்.
ஈப்பிடிப்பானின் குளியல்
நாங்கள் இருந்த பகுதி யானை வழித்தடம் என்பதால், யானைகள் வருவதற்கான சாத்தியம் உண்டு. அதனால் சீக்கிரம் சென்று திரும்புவது நல்லது என்றொரு நண்பர் கூறினார். ஆனால், புறப்படத் தாமதமாகி மதியம் மூன்று மணியளவில் ராஜபாளையத்தில் இருந்து சரணாலயத்தை நோக்கி ஏழு பேர் குழுவாகப் புறப்பட்டோம்.
கதிரவனை மேகங்கள் மறைத்ததால், செல்லும் வழி குளிர்ச்சியாக மாறியது ஒரு திருப்பத்தில் வண்டி சென்றபோது, வண்டியில் இருந்து கீழே இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம்... பறவைகள்! அங்கிருந்த சிறு ஆற்றுப் பாலத்தில் இறங்கி நின்றால், எந்தப் பக்கம் பார்ப்பது என்று குழப்பம் தோன்றும் அளவுக்கு இரண்டு பக்களிலும் பறவைகளின் சத்தம் குதூகலமாகக் காதுகளை வந்தடைந்தது.
அரசவால் ஈப்பிடிப்பான் ஒன்று நீரில் குளியல் போட்டுக்கொண்டிருந்தது. பறப்பதும், மீண்டும் நீரில் இறங்கி இறக்கையை நனைப்பதும் என்று ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருந்தது. பெரும்பாலும் மாலை நேரத்தில்தான் அரசவால் ஈப்பிடிப்பான் குளியல் போடும் என்ற தகவல் ஆச்சரியம் தந்தது. மனிதர் குளிப்பதை நினைவுபடுத்தும் எந்த அம்சமும் அதில் இல்லையென்றாலும், அதன் குளியல் மகிழ்ச்சியாக இருப்பதை உணர முடிந்தது.
வகை வகையான பறவைகள்
இருபதுக்கு மேற்பட்ட செந்தலைப் பஞ்சுருட்டான்கள் (Chestnut-headed bee-eater) சத்தம் எழுப்பாமல் விளையாடிக் கொண்டிருந்தன. இரண்டு பஞ்சுருட்டான் வகைகளைப் பரவலாகப் பார்க்க முடியும்: சிறிய பஞ்சுருட்டான் (Green Bee-eater) நீர்நிலை அருகில் எப்போதும் பறந்துகொண்டிருக்கும். மற்றோரு வகையான நீல வால் பஞ்சுருட்டான் (Blue-tailed bee-eater) குளிர்காலத்தில் தமிழகத்துக்கு வலசை வரக்கூடியது. இவற்றிலிருந்து வேறுபட்ட செந்தலைப் பஞ்சுருட்டான் மலைப் பிரதேசத்தில் மட்டும் பார்க்கக்கூடிய பறவை.
பாலத்தின் அடியில் இருந்த சிறு செடிக்கு சிறிய மீன்கொத்தி (Common Kingfisher) ஒன்று வேகமாக வந்து அமர்ந்தது. வெண் மார்பு மீன் கொத்தியை (White throated kingfisher) பார்க்க முடிகிற அளவுக்கு, உருவில் சிறிய இந்த மீன்கொத்தியைப் பார்ப்பது சற்றுக் கடினம். முதல் முறை பார்ப்பவர்கள் இதன் உடல் அளவைப் பார்த்து ஏமாற்றம் அடைவார்கள். தமிழ்நாட்டின் மாநிலப் பறவையான மரகதப் புறா எங்கள் முன்பாகப் பறந்து சென்று, சற்றுத் தொலைவில் இருந்த ஒரு மரக் கிளையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. நான்கு மரகதப் புறாக்களை அங்கே பார்க்க முடிந்தது.
செழித்திருந்த காடு
அங்கிருந்து புறப்பட்டு பேச்சியம்மாள் கோயில் முன்பு இறங்கினோம். இந்தக் கோயிலுக்கு மக்கள் அதிகம் வந்து செல்கிறார்கள். அங்கிருந்த குரங்குகள் மனிதர் கொடுக்கும் உணவுக்குக் காத்திருப்பதைப் பார்க்க முடிந்தது. அங்கிருந்து காட்டுக்குள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இது யானைகள் வரும் நேரம் என்று நண்பர்கள் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
புலி சரணாலயத்துக்குள் சென்று புலியைப் பார்க்காமல் வருபவர்கள் ஏராளம். ஆனால், அணில் சரணாலயத்தில் நிச்சயம் அணிலைப் பார்த்துவிட்டு வர முடியும். அதற்குக் காரணம் இந்த இரண்டு உயிரினங்களின் வாழ்க்கை முறை. சுதந்திரம் என்றால் என்ன என்பதைக் காட்டுக்குள் இருக்கும் பறவை, காட்டுயிர்களைப் பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம். இந்தக் காட்டுப் பகுதியில் உயிரினம் செழித்திருப்பதை பார்த்த உடனேயே உணரமுடிந்தது.
அரிய அணில்கள்
சரணாலயத்தின் பெயருக்கேற்ப சாம்பல் அணில் காட்சி தந்தது. ஒரு மரக்கிளையில் அந்த அணிலின் கூடு இருப்பதைப் பார்த்துவிட்டு, முதலில் காக்கை கூடு என்று தவறாக நினைத்துவிட்டேன். அது அணில் கூடு என்று நண்பர் சுட்டிக்காட்டினார்; கூடு நேர்த்தியாக அமைந்திருந்தது. ஒரு அணில், மரத்தில் ஓய்வெடுத்ததைப் பார்த்துகொண்டிருந்தபோது மற்றொன்று நீண்ட வாலை எங்களுக்குக் காட்டிவிட்டுக் கீழே இறங்கியது. உள்ளூர் மக்கள் இருசக்கர வாகனத்தில் மலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். நாங்கள் அணில்களைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர், இன்னும் உள்ளே சென்றால் நிறைய அணில்களைப் பார்க்கலாம் என்றார்.
காட்டில் சுற்றி வரும்போது எல்லா பக்கங்களிலும் நம் கவனம் இருக்க வேண்டும். சிறு உயிரினங்கள் முதல் பெரிய உயிரினங்கள்வரை வாழக்கூடிய இடம் என்பதால், பெரிய உயிரினங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது சிறு உயிரினங்கள் நம் பார்வையில் இருந்து தப்பிவிடும்.
இயற்கையுடன் இணைந்த மனிதர்கள்
அணில்களைத் தேடிச் சென்றிருந்த எங்களுக்கு அரிய பறவையான நீல ராபின் (Indian Blue Robin) ஆற்றில் ஐந்து நிமிடங்கள் குளித்துக் கொண்டிருந்த காட்சி காணக் கிடைத்தது. அந்த நேரம் இரண்டு பழங்குடிப் பெண்கள் தலையில் சுள்ளிகளைச் சுமந்து மேல்நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். இவர்களும் எங்கள் கண்களுக்கு அரிதாகவே தெரிந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கை பறவை, உயிரினங்களின் வாழ்க்கையைப் போல் ஆனந்தமானதுதான். இயற்கையுடன் இணைந்து வாழும் அரிய வாழ்க்கை இவர்களுடையது.
காட்டுக்குள் சுற்றி முடித்துவிட்டுத் திரும்பிவரும் வழியில், அடர்ந்த புதர் பகுதியில் காட்டுக் கோழியின் அழைப்பைக் கேட்டு நின்று, புதரைப் பார்த்தோம். பூங்குருவி (Thrush) ஒன்று தனியாகத் தரையில் நடந்துகொண்டிருந்தது. சத்தம் எழுப்பாமல் நின்று பார்த்தபோது அது முன்னோக்கி நகர்ந்தது. நாங்களும் நின்றுவிட்டோம். அதன்பிறகு எங்களை அது நேருக்கு நேர் பார்த்தபோது, மீண்டும் என்றைக்காவது ஒரு நாள் சந்திப்போம் என்று மனதுக்குள் சொல்லிவிட்டு ராஜபாளையம் நோக்கித் திரும்பினோம்.
கட்டுரையாளர்,
இயற்கை செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: lapwing2010@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago