தமிழகத்தில் தற்போது உள்ளது, பொதுவான வேளாண்மைக் கொள்கை. இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதில் ரசாயன வேளாண்மைக்குத்தான் முதன்மைப் பங்கு கொடுக்கப்படுகிறது. ரசாயனமல்லாத உயிர்ம வேளாண்மைக்கான அக்கறை மிகக் குறைவாகவே உள்ளது. எனவேதான், உயிர்ம வேளாண்மைக்குத் தனியாகக் கொள்கை வேண்டும் என்று இயற்கை வேளாண் ஆர்வலர்கள் வேண்டுகிறார்கள்.
மானியமில்லை
மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 2015-16-ம் ஆண்டில் உயிர்ம வேளாண்மைக்கு என்று ஒதுக்கியுள்ள தொகை வெறும் ரூ. 300 கோடி மட்டுமே. அதாவது இந்தியா முழுவதும் சான்று பெற்ற உயிர்ம வேளாண்மைப் பண்ணைகள் 7,23,039 ஹெக்டேர் உள்ளன என்று அரசு புள்ளிவிவரமே கூறுகிறது. ஆனால், ஒதுக்கப்பட்டுள்ள தொகை சொற்பம்தான்.
ரசாயன வேளாண்மை மேற்கொள்பவர்களின் ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ஏறத்தாழ ரூ. 10,000 வரை மத்திய, மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன. இது பெரும்பாலும் உழவர்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதில்லை. உர நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆனால் உயிர்ம வேளாண்மைக்கு வெறும் ரூ. 1,600 மட்டுமே வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
இந்தப் பின்னணியில் நம் நாட்டில் உயிர்ம வேளாண்மை எப்படி வளரும், எப்படி இயற்கையை மாசுபாட்டில் இருந்து மீட்க முடியும்? எப்படி நம் குழந்தைகளை நஞ்சூட்டப்பட்ட உணவுகளில் இருந்து காப்பாற்ற முடியும்? எப்படி கொடிய நோய்களில் இருந்து நாம் மீள முடியும்?
கொள்கை, திட்டங்கள்
இந்த மானிய ஏற்றத்தாழ்வின் மூலமாக உழவர்கள் ரசாயனங்களை விட்டு வெளியேவர அஞ்சுகின்றனர். ஏனென்றால் ஒப்பீட்டளவில், உயிர்ம உரங்களைவிட ரசாயன உரங்கள் மானியத்துடன் வருவதால் மலிவானதாகப் பார்க்கப்படுகின்றன. இதை மாற்றி உயிர்ம வேளாண்மைக்குள் உழவர்களைக் கொண்டுவர வேண்டுமானால் அதற்கொரு கொள்கை, அதற்குரிய திட்டங்கள் அரசிடம் தேவை.
கடந்த ஆண்டு ரூ. 2,500 கோடிக்கு உயிர்ம வேளாண் பொருட்கள் சந்தையில் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டு அது ரூ. 6,000 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தேசங்களிடை உயிர்ம வேளாண்மைத் தகைமை நடுவத்தின் (International Competence Centre for Organic Agriculture (ICCOA) செயல் இயக்குநர் மனோஜ்குமார் மேனன் தெரிவிக்கிறார். எனவே, விரைவாக வளர்ந்துவரும் இத்துறையைக் கவனிப்பது அரசின் கடமை அல்லவா?
சிறப்பு மண்டலங்கள்
தமிழகம் 7 வகையான வேளாண் பருவநிலை மண்டலங்களைக் கொண்டது, உலகில் வளரும் பெரும்பாலான பயிர்களை இங்கே சாகுபடி செய்ய முடியும். வெப்ப மண்டலப் பயிர்கள் மட்டுமல்லாமல், ஈரமண்டலப் பயிர்களையும் சாகுபடி செய்ய முடியும். இதன்மூலம் பண்ணையில் கழிவாகக் கருதப்பட்டவை, நல்ல உரமாகப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் உழவர்களுக்கு நேரடி வருவாய் கிடைக்கும். அது மட்டுமின்றி ரசாயனங்கள் ஏற்படுத்தும் மாசுபாடும் குறைக்கப்படும்.
கர்நாடகா, கேரளா அரசுகள் சில குறிப்பிட்ட பகுதிகளை உயிர்ம வேளாண்மை மண்டலங்களாக அறிவித்துச் செயல்படுத்துகின்றன. அதேபோலத் தமிழகத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளை ஒதுக்கிச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்போல, உயிர்ம வேளாண்மை சிறப்பு மண்டலங்களாக அறிவித்தால், பல உழவர்கள் கூடுதலாகப் பயன்பெறுவார்கள்.
முன்னோடி மாநிலம் ஆக
இது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு அமைப்புகள் பல பரிந்துரைகளை வழங்கியுள்ளன. முந்தைய தமிழக ஆட்சியில் முன்னோடி உழவர்களையும், ஆர்வலர்களையும், ஆய்வாளர் களையும் அழைத்துத் தஞ்சையில் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அதன் பரிந்துரைகள் அரசுக்குத் தரப்பட்டன. அதன் பின்னர் அரசின் சார்பில் குழுக்கள் போடப்பட்டன. ஆனால், இன்னும் கொள்கை வெளியிடப்படவில்லை. நமக்குப் பின்னர்ப் பல மாநிலங்கள் தமக்கான கொள்கைகளை உருவாக்கி வெளியிட்டுவிட்டன.
மற்ற மாநிலங்களில் இல்லாமல் முன்னோடியாக, உயிர்ம வேளாண்மைக்கான சான்று தரும் அமைப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன் பெயர் தமிழ்நாடு அங்கக வேளாண்மை சான்றிதழ் துறை (Tamil Nadu Organic Certification Department - TNOCD), 2007-08 ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. இதன் கீழ் பல பண்ணைகள் சான்று பெற்று இயங்கிவருகின்றன. ஆனால், இன்னும் நமக்கு உயிர்ம வேளாண்மைக்கெனத் தனிக் கொள்கை இல்லை.
எனவே, தமிழக அரசு உடனடியாக ஒரு முற்போக்கான உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிக்கையை உருவாக்கி வெளியிட வேண்டும். அதன் மூலம் தமிழகத்தை ஒரு முன்னோடி இயற்கைவழி வேளாண் மாநிலமாக மாற்றிக் காட்ட வேண்டும். ஏற்கெனவே, மரபீனி மாற்ற விதைகளை ஏற்கமாட்டோம் என்று தமிழக அரசு தெளிவாகக் கூறிவிட்டது. அந்த அடிப்படையில் மற்றொரு மைல்கல்லை நாட்டி, மக்கள் நலம் பெறச் செய்ய வேண்டும். 'உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என்று கொள்கை வகுத்த நமது சங்கப் புலவன் குடப்புலவியனாரின் வழிகாட்டுதலின்படி, ஓர் உயிர்ம வேளாண்மைக் களஞ்சியமாகத் தமிழகம் மாறட்டும்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago