பசுமை எனது வாழ்வுரிமை 05: பஸ்தார் புரட்சி

By செய்திப்பிரிவு

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு அடிபணிந்த இந்திய சமஸ்தானங்களும், அரசர்களும் அவரவருக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த காடுகளின் வணிக மதிப்பை உணர்ந்துகொள்வதில் பிரிட்டிஷ் அரசு கடைப்பிடித்த வழிமுறையையே பின்பற்ற முயன்றனர். இதனால் சமஸ்தான அரசர்களும் இடமாற்ற வேளாண் புரிந்த மக்களுடன் அடிக்கடி மோதல்களையும் முரண்பாடுகளையும் சந்தித்தனர்.

இப்படிக் காடுகளை அரசு கையகப்படுத்திக்கொண்டதும் தங்கள் மரபு உரிமைகளை இழந்ததற்கு இணையாகக் கருதிய பழங்குடி மக்கள் பலர், போராட்டங்களிலும் புரட்சிகளிலும் ஈடுபடத் தொடங்கினர்.

பற்றியெரிந்த பஸ்தார்

1910-ம் ஆண்டு பஸ்தார் பகுதியில் (இன்றைய சத்தீஸ்கர்) ஏற்பட்ட புரட்சி முக்கியமானது. அங்கு இடமாற்ற வேளாண்மைக்கும், காடு - அதன் உற்பத்திப் பொருட்களைப் பழங்குடிகள் பயன்படுத்தவும் விதிக்கப்பட்ட புதிய தடைகள் இந்தப் புரட்சி நிகழ முதன்மைக் காரணங்களாக அமைந்தன.

அத்துடன் அரசரின் அதிகாரிகளால் பழங்குடி மக்களிடமிருந்து பேகர் (begar) என்றழைக்கப்பட்ட, ஊதியமற்ற கட்டாய வேலை வாங்கலும் இந்தப் புரட்சிக்கு மற்றொரு முக்கியக் காரணம். நாட்டின் பல பகுதிகள் திடீரெனப் பாதுகாக்கப்பட்ட/ தடை செய்யப்பட்ட காட்டுப் பகுதிகளாக மாற்றப்பட்டவுடன் இந்தப் பிரதேசத்தில் பல பழங்குடி கிராமங்கள் சிதைந்து, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்தது.

தங்களுடைய பிரச்சினைகளையும் சிரமங்களையும் அரசர் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காகப் பழங்குடி மக்களில் சிலர், ஜக்தால்பூரில் அரண்மணைக்கு வெளியில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அரசருக்கும் தங்களுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட விவகாரம் என்று கூறிப் போராடினார்கள் (இவர்களில் பெரும்பாலோர் மரியா, மியூரியா இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள்). அங்கு அமைக்கப்பட்டிருந்த தொலைதொடர்பு மின்தொடர்புக் கம்பிகளை வெட்டி, சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். அதேநேரத்தில் காவல்நிலையங்களையும், வன சோதனைச் சாவடிகளையும் (forest outposts) எரித்தனர்.

பழங்குடிகளின் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட போராட்டக்காரர்கள் வனத்துறை சேமித்து வைத்திருந்த மரக்கட்டைகளை அபகரித்தார்கள். பல சந்தைகளை அழித்து, பொருட்களைக் கைப்பற்றினார்கள். வெளியாட்களுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தினார்கள். அரசு அதிகாரிகள், பணக்கார வியாபாரிகள் ஆகியோரில் சிலரைத் தாக்கியும் கொன்றார்கள்.

ஆர்த்தெழுந்த எதிர்ப்பு

இந்தப் புரட்சி சில நாட்களுக்குள் பஸ்தார் ஆட்சிப் பகுதியின் பாதி அளவுக்குப் பரவியது - அதாவது 6,800 சதுர மைல்களுக்கும் அதிகமான பகுதியில் பரவியிருந்தது. இந்தப் புரட்சிக்கு அஞ்சாத அரசர், பிரிட்டிஷ் அரசின் 22-ம் பஞ்சாப் ராணுவப் படையையும், (இதன் தலைவராக ஒரு பிரிட்டிஷ் அதிகாரி இருந்தார்) மதராஸ், மத்தியப் பிரதேசத்தின் காவல் படையையும் உதவிக்கு அழைத்தார். ஜக்தால்பூருக்கு அருகில் நடைபெற்ற ஒரு மோதலில் வேல், அம்புகள், ஈட்டிகள் போன்ற பழங்குடிக் கருவிகளை மட்டுமே கொண்டிருந்த 900 பழங்குடி மக்களுக்கும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவரங்களை கிரிக்சன், கிளெமென்ட் ஸ்மித் ஆகியோரின் கட்டுரைகள் கொடுத்துள்ளன. இந்த நிகழ்வுக்குப் பின்பு பஸ்தாரில் இடமாற்ற வேளாண்மை முடிவுக்கு வந்தது. இருந்தபோதும், இந்திய சுற்றுச்சூழல் வரலாற்றில் பஸ்தார் பழங்குடி மக்கள் நடத்திய புரட்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்