விதை என்பது தேசத்தின் உயிர்

By செய்திப்பிரிவு

கே.சுரேஷ்

உழவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்து, பாரம்பரிய நெல், சிறுதானியம் ஆகியவற்றின் விதைகளைச் சிறுக சிறுகச் சேகரித்து அவற்றைச் சாகுபடி செய்வதோடு, தமிழகமெங்கும் பாரம்பரிய விதைகளைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது புதுக்கோட்டை 'இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்'.
சாகுபடியோடு நின்றுவிடாத இந்த நிறுவனம், அரிசி, மாவு, பலகாரங்கள் ஆகியவற்றையும் மதிப்புக்கூட்டி வெளிநாடு வரை வணிகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் உள்ளது. கடந்த 6-ம் தேதி இந்த நிறுவனத்தில் பாரம்பரிய விதைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மாப்பிள்ளைச்சம்பா, பூங்கார், கவுனி, மிளகி, இலுப்பைப்பூச் சம்பா, கிச்சிலிச்சம்பா, தூயமல்லி, குழியடிச்சான், அறுபதாம் குறுவை, கறுங்குறுவை, காட்டுயானம், குள்ளக்கார், காலான் நமக், வாளன்சம்பா, துளசிவாசனை சீரகச்சம்பா, தேங்காய்ப்பூச் சம்பா, ராஜபோகம், நவரா உள்ளிட்ட 40 வகையான பாரம்பரிய நெல் ரகங்களும், கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கம்பு போன்ற சிறுதானிய விதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், பாரம்பரிய ரகங்களைச் சாகுபடி செய்யும் முறை, இயற்கை முறையில் பூச்சி விரட்டி, பயிர் ஊக்கி மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த விதைத் திருவிழாவை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இதில், பல்வேறு துறை அலுவலர்கள், இயற்கை உழவர்களும் கலந்துகொண்டு பேசினர்.

“நிறுவனத்தைத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயற்கை வேளாண் முறையை முன்னெடுத்துச் செய்து வருகிறோம். இதற்குக் குறைந்த தண்ணீரே போதுமானது என்பதோடு, கால்நடைகளுக்கும் தேவையான அளவுக்கு வைக்கோலும் கிடைக்கிறது. விஷத்தன்மை இல்லாத உணவுப் பொருள் கிடைப்பதால் மீண்டும் பாரம்பரிய வேளாண்மைக்கு உழவர்கள் மாறி வருகின்றனர்” என்கிறார் இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆதப்பன்.

தமிழகத்தில் கடந்த காலத்தில் வறட்சி, வெள்ளத்தில் நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்ட போது பாரம்பரிய பயிர்கள் கைகொடுத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். இயற்கை வேளான்மையை ஊக்கப்படுத்துவதற்காக விதைகளையும் விலைக்குக் கொடுக்கின்றனர். ஒரு கிலோ விதை கொடுத்தால் அறுவடை முடிந்து 2 கிலோ திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற பரிமாற்ற முறையிலும் இந்நிறுவனத்தின் உழவர்களுக்கு விதைகளை அளிக்கின்றனர். உழவர்கள் சாகுபடிசெய்யும் நெல், தானியங்கள் ஆகியவற்றை உரிய விலைக்கு இவர்களே கொள்முதலும் செய்கிறார்கள்.

“யாருடைய வீடுகளில் விதை இருக்கிறது?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார் ‘தமிழ்க் காடு’ அமைப்பின் நிர்வாகி ரமேஷ் கருப்பையா. உழவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட அந்த அரங்கில் சிலர்தான் கையை உயர்த்தித் “தங்கள் வீட்டில் விதை இருக்கிறது” என்றனர். தொடர்ந்து பேசிய கருப்பையா, “விதைதான் ஆயுதம். விதைதான் தேசத்தின் உயிர். இதை நம்பி நாட்டில் பலகோடி வயிறு உள்ளது. விதைகளைப் பாதுகாத்தவர்கள்தான் இந்தத் தேசத்தின் பாதுகாவலர்களாக இருக்க முடியும். விதையைக் கோயில் கோபுரக் கலசத்துக்குள் வைத்து முன்னோர்கள் பாதுகாத்தார்கள்.

அந்த அளவுக்கு நம் பாரம்பரிய சொத்து அழிந்துபோய்விடக் கூடாதெனக் கருதினார்கள். விதைகளைப் பாதுகாப்பதன் அவசியத்துக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும், ஆனால், நாம் விதைகளைப் பாதுகாப்பதில்லை. அவை எப்போது நம் வீட்டை விட்டு வெளியேறியதோ, அன்றைக்கே ஆரோக்கியமான விவசாயமும் வெளியேறிவிட்டது” என விதையின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.

மேலும் பேசிய அவர், “மழை நீரைக்கொண்டு உழவு செய்வதுதான் வெற்றிகரமானது. ஆனால், ஆயிரம் அடிக்கும் கீழே இருக்கும் தண்ணீரை வெளியே கொண்டு வந்து செய்யும் உழவு, தோல்வியானது. தண்ணீரைச் சேமித்து உழவுசெய்வதற்குக் கிணறுதான் அவசியம். அதைவிட ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட பல்வேறு முறைகளில் தண்ணீரை எடுத்து உழவு செய்வதென்பது ஒருவரின் உடலில் இருந்து அளவுக்கு அதிகமான ரத்தத்தை எடுப்பதற்குச் சமம்” என்றார்.

(புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவன மேலாண்மை இயக்குநரைத் தொடர்புகொள்ள:
98420 93143.)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்