கிரெட்டாவின் பேச்சு ஏன் நம்மைத் தொந்தரவு செய்வதில்லை?

By செய்திப்பிரிவு

ஆதி வள்ளியப்பன்

இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் பேச்சில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே ‘அமெரிக்கா’ இடம்பிடித்திருந்தது. அது அவர்கள் அமெரிக்கா செல்வது பற்றியோ, ஒரு நாட்டின் தலைவர் அமெரிக்காவில் கொண்டாடப்படுவது குறித்தோ அல்ல; ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பர்க் என்ற 16 வயது பருவநிலை செயற்பாட்டாளர் பற்றிய பேச்சு அது.

அமெரிக்காவில் இந்த வாரம் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஐரோப்பாவிலிருந்து ஒரே நாளில் சென்றுவிடக்கூடிய விமானப் பயணத்தைத் தவிர்த்துவிட்டு, சூற்றுச்சூழலுக்கு உகந்த பாய்மரப் படகில் 15 நாள் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்து கிரெட்டா நியூ யார்க்கைச் சென்றடைந்தார்.

‘ஒரு பள்ளிச் சிறுமியின் பேச்சைக் கேட்கவா இத்தனை ஆர்வம்?’என்ற பலருடைய சந்தேகம், செப்டம்பர் 23 அன்று தகர்ந்திருக்கும். அன்றைக்கு கிரெட்டா பேசியது வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே. ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் ஒரு நாட்டின் சர்வாதிகாரியைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட எளிய முடிதிருத்துநர், பெரும் மக்கள் திரளுக்கு முன்னால் மனித குல விடுதலையைப் பற்றியும் மனித குலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமெனவும் ஆற்றிய புகழ்பெற்ற உரைக்குச் சற்றும் குறையாதது கிரெட்டாவின் ஐ.நா. உரை.இரண்டு பேருமே எளியவர்கள்; பெரிய தலைவர்களாகப் பலராலும் நம்பப்பட்டவர்கள் அல்லர். ஆனால், அவர்களுடைய உணர்ச்சி ததும்பிய பேச்சு மனித குலத்தை உடனடியாகக் காக்க வேண்டுமென்பதற்கானக் கூக்குரல்.

சில கேள்விகள்

“எவ்வளவு தைரியம் உங்களுக்கு?”என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு கிரெட்டா நிகழ்த்திய அந்த உரையைப் பற்றி உலகம் இன்றைக்கு விவாதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கிரெட்டாவின் பெயரும், கிரெட்டா முன்வைக்கும் வாதங்களும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டில் என்னவிதமான எதிர்வினையை உருவாக்கியிருகின்றன?
- ‘ஒரு பள்ளிச் சிறுமி பேசுறதையெல்லாம் நம்ப முடியுங்களா?’
- ‘இதுக்குப் பின்னாடி ஏதோ கார்ப்பரேட் நிதி இருக்கும். எல்லாமே சும்மா பம்மாத்து’
- ‘இந்த உலகத்துல நிறைய
பிரச்சினை இருக்கிறது மாதிரியே என்.ஜி.ஓ.க்கள் திட்டமிட்டு ஒரு சித்திரத்தைக் கட்டமைப்பாங்க. அப்பதானே அவங்க சம்பாதிக்க முடியும்’
- ‘ஐ.நா. சபைக்கு இந்த உலகத்துல என்ன அதிகாரம் சார் இருக்கு? தான் புகழ்பெறுவதற்காக ஐ.நா. சபை இதுபோன்ற சிறுமிகளைப் பிரபலப்படுத்துகிறது’
தமிழ் ‘சமூக வலைதள அறிஞர்கள்’, தொலைக்காட்சி ‘விவாத மேதைகள்’, அனைத்துப் பொருள்கள் சார்ந்தும் கருத்து சொல்லும் ‘எழுத்தாளர்களாக பிரகடனம் செய்துகொண்டவர்கள்’ - ‘சமூக ஆர்வலர்கள்’ உள்ளிட்ட பலரும் இதுபோல இன்னும் பல கேள்விகளை எழுப்பலாம்.

அறிவியலுக்குக் காதுகொடுங்கள்

‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ என்ற தனிநபர் போராட்டத்தைத் தன் தாய்நாடான ஸ்வீடனில் கடந்த ஆண்டு தொடங்கியது முதல், தற்போது உலகெங்கும் அந்தப் போராட்டம் பரவியுள்ளதுவரை கிரெட்டா பேசிவருவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.“நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதைக் கேட்பதற்காக நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. 30 ஆண்டுகளாக அறிவியலாளர்கள் சொல்லிவருவதைக் காது கொடுத்துக் கேளுங்கள், செயல்படுங்கள். வேறொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் அப்படி என்னதான் சொல்லி வருகிறார்கள்? இந்த உலகம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு நாம் ஒவ்வொருவர் செய்துகொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடும் காரணம். சமூகப் படிநிலையில் மேலே செல்லச் செல்ல, உலகை அழிப்பதில் நம்முடைய பங்கு அதிகரித்துவருகிறது. அடுத்த தலைமுறைக்கு உத்தரவாதமான எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. - இதையெல்லாம் ஐபிசிசி எனப்படும் ‘பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழு’வும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’வும், இன்னும் பல முன்னணி அறிவியலாளர்களும், முன்னணி அறிவியல் நிறுவனங்களும் திரும்பத் திரும்பத் தெளிவுபடுத்தி வருகின்றன.

அறிவியல் புரிகிறதா?

பழமைவாதத்தைப் போற்றி, அதை வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கடைப்பிடித்துவரும் இந்தியா போன்றதொரு நாட்டில், அறிவியல் ஆராய்ச்சிகளோ-முடிவுகளோ மிகப் பெரிய மாற்றங்களைத் தாமதமாகக்கூட நிகழ்த்திவிடுவதில்லை. ஏனென்றால் நம் நாட்டில் அறிவியல்-தொழில்நுட்பம் வளர்ந்ததில் சிறு அளவுகூட அறிவியல் மனோபாவம் வளரவில்லை. ‘இந்தியத்தன்மை’ என்று குழப்பமான சில அம்சங்களை வரையறுக்கலாம்.

அவற்றில், அறிவியல்-அறிவியல் மனோபாவம் சார்ந்த இரட்டைத்தன்மையும் ஒன்று. நம்முடைய ஸ்மார்ட் போனில் செயற்கை நுண்ணறிவு எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்று விதந்தோதுவோம், ஆனால் அதிவேகமாக உலகம் அழிந்துகொண்டிருக்கிறது என்று அறிவியல் சொன்னால்,‘அதெல்லாம் சுத்தப் பொய்’ என்பது போலத்தான் நம்முடைய எதிர்வினையும் செயல்பாடுகளும் அமைந்திருக்கிறது.

பருவநிலை நெருக்கடி குறித்த விவாதங்களில் அடிப்படையில் இரண்டு தரப்பினர் உண்டு. பருவநிலை நெருக்கடி என்பது திட்டவட்டமான அறிவியல், நம்முடைய பூவுலகு எதிர்கொண்டிருக்கும் பேராபத்தை அது சுட்டிக்காட்டுகிறது. நம்மையும் பூவுலகையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடி காலமிது என்பது முதல் தரப்பு; இரண்டாம் தரப்போ பருவநிலை நெருக்கடி என்பது பொய். அப்படியே நிகழ்ந்தால் அதற்கு மனிதச் செயல்பாடுகள் காரணமல்ல. நம்மால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று பருவநிலை நெருக்கடியை நிராகரிக்கிறது. இவர்களுக்கு ‘பருவநிலை மாற்ற நிராகரிப்பாளர்கள்’ என்று பெயர்.

அமெரிக்க அதிபர்கள், உலகப் பெருமுதலாளிகள், பெருநிறுவனங்கள் தொடங்கி இவர்களுக்காகவே அறிவியல் கண்டறிதல்களை ‘உற்பத்தி செய்து வழங்கும்’ விஞ்ஞானிகள், ஆதரவு மனப்பான்மையைக் கட்டமைக்க உதவும் தரகு நிறுவனங்கள் வரை ஒரு பெரும்கூட்டம் பருவநிலை மாற்ற நிராகரிப்புக்குத் தீவிரமாக உழைத்துவருகிறது.

நிராகரிப்பு மனப்பான்மை

அமெரிக்க ஏகாதிபத்திய உணர்வின் ஒட்டுமொத்தத் திரட்சியாக அடையாளம் காணப்படும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் போன்றோர் மட்டுமின்றி, நாம் ஒவ்வொருவருமேகூடப் பருவநிலை மாற்ற நிராகரிப்பாளர்களாக இருப்பதிலேயே பெருமை கொள்கிறோம். நம் வாழ்க்கை இன்றைக்குப் பிரச்சினையில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. நடப்பது எல்லாம் நன்மைக்கே.

எதிர்காலம் நிச்சயம் சுபிட்சமாக இருக்கும் என்று நடப்புக்கு மாறாக, போலியாக நம்பவே நம் மனம் விழைகிறது. நாளை நாம் உயிர்வாழ்வதற்கு இந்த பூமி ஆரோக்கியமான நிலையில் தேவை. அந்த ஆரோக்கியத்தைச் சீர்கெடுக்காமல் இருப்பதற்கு இன்றைய சொகுசு வசதிகளில் சிலவற்றைக் குறைத்துக்கொள்ளக்கூட நாம் தயாராக இல்லாததே இந்த நிராகரிப்பு மனப்பான்மைக்குக் காரணம்.

நுகர்வு சமூகத்தின் முழுநேரப் பிரதிநிதிகளாக நம்மில் பெரும்பாலோர் மாறிவிட்டோம். அதன் காரணமாக, பூவுலகு எதிர்கொண்டிருக்கும் பேராபத்துக்கு முகம்கொடுக்க நாம் தயாராக இல்லை. பூவுலகைச் சுரண்டுவதைக் குறைத்துக்கொண்டு, பூவுலகைக் காப்பதற்கான செயல்பாடுகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல், பிரச்சினையிலிருந்து தப்பியோடும் மனப்பான்மையுடனே வாழ்கிறோம்.

‘நம் வீடு பற்றியெரிந்து கொண்டிருக்கிறது’ என்று கிரெட்டாவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் எச்சரிப்பது நம்மை அசைத்துப் பார்க்கவில்லை. நாமும், நம்முடைய மகள்கள்/மகன்களும் எதிர்கொண்டுள்ள பேராபத்தை உணராமல், ஏற்றுக்கொள்ளாமல் - ‘வளர்ந்தவர்கள்’, ‘உலக அனுபவம் பெற்றவர்கள்’ என்று இன்னும் எத்தனை கிரெட்டாக்கள் வரும்வரை பெருமையடித்துக்கொண்டு இருக்கப் போகிறோம்?

பருவநிலைப் பேரழிவு தங்களை மூழ்கடித்த பின்னும் பருவநிலை மாற்றம் உண்மையா, பொய்யா என்பது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் - கற்பனைச் சிற்பத்தை வடித்தவர் ஸ்பானியச் சிற்பி ஐசக் கோர்தால்

தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்