எவ்வளவு தைரியம் உங்களுக்கு?

By செய்திப்பிரிவு

கிரெட்டா துன்பர்க்

நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பருவநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் நிகழ்த்திய பரவலான கவனம் பெற்ற உரை:

எல்லாமே தவறு. நான் இங்கு இருந்திருக்கக் கூடாது. அட்லாண்டிக் பெருங்கடலின் எதிர்க்கரையில் என்னுடைய பள்ளிக்கூடத்தில் தான் நான் இப்போது இருந்திருக்க வேண்டும். என்றாலும் நம்பிக்கையைத் தேடி ஏன் எங்களிடம் நீங்கள் வருகிறீர்கள்? எவ்வளவு தைரியம் உங்களுக்கு! வெற்று வார்த்தைகளால் என்னுடைய குழந்தைப் பருவத்தையும் கனவுகளையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். அப்படி இருந்தபோதிலும் அதிர்ஷ்டம் மிக்க ஒருத்தியாகத்தான் நான் இருக்கிறேன். மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தச் சூழலியல் தொகுதிகளும் சிதைந்துகொண்டிருக்கின்றன. பெரும் பேரழிவின் தொடக்கத்தில் இப்போது நாம் இருக்கிறோம். இந்த நிலையில்தான் நீங்கள் எல்லோரும் பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சி பற்றிய கற்பனைக் கதைகளையும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு தைரியம் உங்களுக்கு!

பருவநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பது குறித்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் மிகத் துல்லியமான ஆதாரங்களை முன்வைத்து வருகிறது. அதேநேரம் அரசியல்ரீதியிலான தீர்வுகள் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை புலப்படாதபோது, தேவையானதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம் என்று எந்த தைரியத்தில் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு தைரியம் இருந்தால் அறிவியலுக்குக் காதுகொடுக்க நீங்கள் மறுப்பீர்கள்?

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து எங்கள் குரலுக்கு நீங்கள் ‘காதுகொடுப்பதாக'ச் சொல்கிறீர்கள். எவ்வளவு கோபத்துக்கும் சோகத்துக்கும் ஆட்பட்டாலும்கூட அதை நான் நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால், நிலைமையின் தீவிரத்தை உண்மையிலேயே நீங்கள் உணர்ந்திருந்தால், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடாமல் காலம் தாழ்த்திக்கொண்டு, தீய சக்தியாக மாறியிருக்க மாட்டீர்கள்; உங்களை நான் நம்பத் தயாராக இல்லை.

கரியமில வாயு வெளியேற்றத்தை இன்னும் பத்து ஆண்டுகளில் பாதியாகக் குறைத்தாலும், புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருப்பதற்கு 50 சதவீத சாத்தியமே இருக்கிறது. இதன் விளைவாக மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத தொடர் எதிர்வினைகள் நிகழத் தொடங்கிவிடும்.

‘பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழு’ (IPCC) கணிப்பின்படி, புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கான சாத்தியம் 67 சதவீதம் மட்டுமே இருக்கிறது. 2018 ஜனவரி 1-ன்படி 420 ஜிகா டன் அளவுக்குக் கரியமில வாயுவை இனிமேல் வெளியேற்றுவதற்குச் சாத்தியம் இருந்தது; இந்த அளவு 350 ஜிகா டன் அளவுக்குத் தற்போது சுருங்கிவிட்டது.

வழக்கமான நடைமுறைகளையும் தொழில் நுட்பத் தீர்வுகளையும் பயன்படுத்தி இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்று எந்த தைரியத்தில் நீங்கள் கூறுகிறீர்கள்? தற்போதைய கரியமில வாயு வெளியேற்ற அளவுகளைப் பார்க்கும்போது, மீதமிருக்கும் கார்பன் பட்ஜெட் இன்னும் எட்டரை ஆண்டுகளுக்குள் தீர்ந்துவிடும். அதற்கு மேல் கார்பனை வெளியேற்றுவது பேராபத்து.

புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, இதை எதிர்கொள்வதற்கான தீர்வுகளோ திட்டங்களோ நம்மிடம் இல்லை என்பது புலனாகிறது. ஏனென்றால், இந்த எண்கள் அனைத்தும் பெருத்த சங்கடத்தை ஏற்படுத்துபவை. இந்தப் பிரச்சினை இப்படி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதற்கான பக்குவத்தைக்கூட இன்னும் நீங்கள் அடைந்திருக்கவில்லை!

எங்களை நீங்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களுடைய துரோகத்தை இளைய தலைமுறை புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டது. எதிர்கால சந்ததியினரின் கண்கள் உங்கள் மீதுதான் நிலைகொண்டுள்ளன. மீண்டும் ஒருமுறை எங்களை நீங்கள் ஏமாற்றத் துணிந்தால், ஒருபோதும் நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம். உங்களை நாங்கள் இப்படியே விட்டுவிடப்போவதில்லை. இங்கு, இப்போது அதற்கான கோடு வரையப்படுகிறது. உலகம் விழித்துகொண்டுவிட்டது; மாற்றம் வந்துகொண்டிருக்கிறது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்!

தமிழில்: சு. அருண் பிரசாத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்