எது இயற்கை உணவு 20: இயற்கை வேளாண்மையை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்?

By செய்திப்பிரிவு

- அனந்து

இயற்கை வேளாண்மை என்பது வேதி/செயற்கை உரம், நச்சுப் பூச்சிக்கொல்லிகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் இல்லாத (இயன்றவரை திறந்த மகரந்தச்சேர்க்கை விதை, மரபு விதைகள் மட்டுமே பயன்படுத்திய), பல வேதி / ஆபத்தான கழிவுகள், கன‌ உலோகங்களின் எச்சம் இல்லாமல், விதை/பயிர் பன்மயம் நிறைந்த வளர்ப்பு முறை, மூடாக்கு, பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மட்கு உரம் (அல்லது இயற்கை உரம்), உயிர் சுழற்சி (பூச்சி, நோய், களை), வேதிப்பொருளற்ற பூச்சி மேலாண்மை போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு வேளாண் முறை. மண்வளத்தையும் நீராதாரத்தையும் வளப்படுத்தும் வழிமுறைகளையும், நுண்ணுயிரிகளையும் பேணிப் பாதுகாக்கும் ஒரு வழிமுறைகூட.

அது மட்டுமில்லாமல், இது ஒரு வாழ்க்கை முறை (life style). இதை வேதிப்பொருளற்ற ஒரு வழிமுறையாக மட்டும் பார்ப்பது தவறு. இதனால் கிடைக்கும் நன்மைகள், நாம் முன்பே பார்த்ததுபோல் கணக்கற்றவை. நமது சுற்றுச்சூழல், மண்/நீர்/காற்று வளம், நம் எல்லோருடைய ஆரோக்கியம், நஞ்சில்லா உணவு, வேளாண் வாழ்வாதாரம், அடுத்த சந்ததிக்கு நாம் விட்டு செல்லும் நன்மைகள், நாட்டின் உணவுப் பாதுகாப்பு, பாதுகப்பான உணவு என எல்லாமே அடங்கியது.

நல்லுணவே மருந்து

நுகர்வோருக்குப் பெரும் நன்மை பயக்கும் இந்த வழிமுறையைத் தன்னலமாகப் பார்க்கக் கூடாது. விதை முதல் உயிர்ச் சூழலியல்/ சுற்றுசூழலுக்கான சரியான பாதையாகவும் பார்த்து ஆதரிக்க வேண்டும். இன்று சிறிய உடல் உபாதைகள் தொடங்கி புற்றுநோய்வரை பல நோய்களுக்கும் ஊற்றாக இருப்பது உணவே. உற்பத்தியில் மட்டுமல்லாமல் பதப்படுத்துவதிலும், பேக்கேஜிங்கிலும் பல கொடிய நச்சுகளைக் கலப்பாதாலும் ஏற்படும் கேடுகளிலிருந்து விடுபட (வரும்முன் காப்பதற்கும், வந்தபின் மீட்பதற்கும்) நல்லுணவே மருந்து.

அந்த வகையில், இயற்கை வேளாண் வழியில் வரும் நஞ்சில்லா உணவே சிறந்தது என எல்லோரும் அறிவார்கள். இந்த விழிப்புணர்வு இருந்தும், பேரமளவு மக்கள் நஞ்சேறிய உணவையே உட்கொள்கின்றனர். அதனாலேயே இயற்கை உணவுக்கு இன்று கூடுதல் விலை கொடுத்து பாவிக்கப் பலரும் முன்வருகின்றனர். ஆனால், இந்த கூடுதல் விலை நிரந்தரமல்ல. நுகர்வோரும் அதன் வழியாக உற்பத்தியும் அதிகரிக்க அதிகரிக்க, விலை குறையும். அதேநேரம் அது நியாய விலையாக இருக்கவும், நாம் கொடுக்கும் விலையில் பேரளவு உழவருக்குச் செல்லவும் நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்.

இதை மனத்தில் நிறுத்தி, சரியாக, சீராக, நேரடியாக உழவர்களிடமிருந்து விளைபொருளை வாங்கி, அதற்கான வெளிப்படைத்தன்மை, கண்டுபிடிக்கக்கூடிய தன்மை (யார் உற்பத்தியாளர் என்று எளிதாகத் தொடர்புபடுத்தி கூறக்கூடிய) கொண்ட அங்காடிகளிடமே நாம் வாங்க வேண்டும். அதுவும் சிறு அங்காடிகளாக, அண்மைக் கடைகளாக இருப்பது சிறப்பு.

அழுத்தம் தேவை

சிக்கிம் (2003), கர்நாடகம் (2004), மிசோரம் (2004), நாகாலாந்து (2007), கேரளம் (2008), மத்தியப் பிரதேசம் (2010), இமாச்சலப் பிரதேசம் (2011), உத்தராகண்ட் (2011), குஜராத் (2015), ஒடிசா (2018) ஆகிய மாநிலங்கள் இயற்கை (உயிர்ம) வேளாண்மைக் கொள்கையை வடிவமைத்துள்ளன. சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் 300-க்கும் அதிகமான இயற்கை அங்காடிகள் உள்ளன! ஆனால், தமிழகம் இன்னும் உயிர்ம வேளாண்மைக் கொள்கையைக் கொண்டு வராதது பெரும் பின்னடைவே! ஒரு வரைவு பல ஆண்டுகளாகக் கிடங்கில் இடப்பட்டுள்ளது. நிகர விதைக்கப்பட்ட பகுதி, மொத்த நிலப்பரப்பில் இயற்கை வேளாண்மையிலிருக்கும் நிலப்பரப்பு விகிதம் என இரண்டிலும், முதல் 10 இடங்களில் தமிழகம் இல்லை. இதை மாற்ற வேண்டியது நம் கையில்தான் உள்ளது.

நம் பங்கு என்ன?

ஒரு முக்கியச் செய்தியுடன் இந்தத் தொடரை நிறைவுசெய்வோம். ஒரு ஏக்கருக்கு இவ்வளவு எவ்வளவு மகசூல் என்று மட்டுமே பார்ப்பது தவறு. இடுபொருள் செலவு, மொத்த/நிகர லாபம் எவ்வளவு என்று பார்த்தால் இயற்கை வேளாண்மையே வெல்லும். மேலும், இயற்கைக்கு மாறிய ஓரிரு ஆண்டுகளுக்கு மகசூல் குறைந்தாலும், பின்னர் ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்யும். இது உலகெங்கும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

மேலும், உற்பத்தித்திறன் குறியீடு (productivity index), ஏக்கருக்கான கலோரிகள் (calories produced per acre) என்று பார்த்தால், ஒரு ஏக்கரில் கிடைக்கும் சத்து, ஆற்றல் (energy), மனித உடலுக்கு அவை தரும் நன்மைகள், அதனால் கிடைக்கும் ஆரோக்கியம், சேமிக்கப்படும் மருத்துவச் செலவு என எல்லாவற்றையும் கணக்கிலெடுத்தால், இயற்கை வேளாண்மையும், நஞ்சில்லா உணவுமே நம் எல்லோருக்கும், சுற்றுச்சூழலுக்கும், உழவர் வாழ்வாதாரத்துக்கும் சிறப்பு சேர்க்கும். இன்றில்லாவிட்டாலும், நாளை இயற்கை வேளாண்மையே வெல்லும். அதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் அவசியம்.

(நிறைந்தது)
கட்டுரையாளர், இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்