தாவர நேசம்: பிள்ளைப் பருவத்துத் தாவரங்கள்

By செய்திப்பிரிவு

- ப. ஜெகநாதன்

மரங்களைக் காணும்போது பெரியவர்கள் என்னவெல்லாம் நினைப்பார்கள் என்பதை ஓரளவுக்கு ஊகிக்கமுடியும்: மரத்தைத் தெய்வமாக வழிபடுவார்கள் பலர்; மரங்களை ரசித்துப் போற்றிப் பாதுகாக்கப் பாடுபடுவார்கள் சிலர்; சிலருக்கோ மரங்களைக் கண்டால் கண்களில் காசும் பணமும் ‘டிங்… டிங்…’ என வந்து போகும்; விறகாகவும், மேசை நாற்காலியாகவும், மருந்தாகவும் சிலருக்குத் தெரியும்; ஒரு சிலருக்கு எதுவுமே தோன்றாமலும்கூடப் போகலாம்!

குழந்தைகள் உலகில்...

குழந்தைகள் தாவரங்களை, குறிப்பாக மரங்களை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்? நான் சிறுவனாக இருந்தபோது என்ன செய்தேன் என்று நினைவுபடுத்திப் பார்த்தேன். பள்ளி விடுமுறை நாட்களில் கிராமத்துக்குப் போகும்போது அங்குள்ள மரங்களின் பெயர்களை அம்மாவும் அப்பாவும் சொல்லிக் கொடுத்தது உண்டு. என்றாலும், இப்போதும் நன்றாக நினைவில் நிற்பது கோவை இலை, காட்டாமணக்கு, பூவரசு, வெண்டைக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், நுணா, ஒட்டுப்புல், காஞ்சூறு போன்றவைதான். ஆனால், இவை மட்டும் ஏன் உடனே நினைவுக்கு வருகின்றன? சிறு வயதில் இவற்றையெல்லாம் வைத்து விளையாடியிருக்கிறோம்.

கோவைக்காய்க் கொடியின் சாறுள்ள இலையைக் கசக்கி சிலேட்டை அழிப்போம்; சொப்பு சாமான் வைத்து விளையாடும்போது காட்டாமணக்கு குச்சியை உடைத்தால் வரும் நிறமற்ற பாலைச் சின்ன குப்பியில் சேர்த்து, ஒரு குச்சியால் சிலுப்பினால் நுரைக்க நுரைக்க மோர் தயாராகிவிடும்; நுணா (மஞ்சணத்தி) காய்களைப் பறித்து ஈர்க்குச்சியால் அவற்றை இணைத்து தேர், கட்டிடம் எல்லாம் தயாரித்தது உண்டு; பூவரசு இலையைப் பாதியாகக் கிழித்து உருட்டி பீப்பீ ஊதுவோம்.

காஞ்சூறு எனும் செடி மேலே பட்டால் அரிக்கும். சில சேட்டைக்கார நண்பர்கள், அதன் இலையை எடுத்து ஒரு முறை என் மேல் தேய்த்துவிட்டதால் அன்று முழுவதும் கையைச் சொறிந்துகொண்டே இருந்தேன்; வீட்டில் அம்மா வெண்டைக்காயை அரிந்து ஒதுக்கி வைத்திருக்கும் காம்பை முகத்தில் ஒட்டிக்கொண்டு அடுத்தவர்களை பயமுறுத்துவோம், வாழைத்தண்டை அரிவாள்மனையில் அம்மா அரியும்போது அதிலிருந்து நீண்டு வரும் நாரைச் சுருட்டி எங்கள் விரலில் மாட்டிவிட்டு ‘இந்தா மோதிரம்' என்பார்! இப்படி நாங்கள் சிறு வயதில் வைத்து விளையாடிய பல தாவரங்கள்தாம், இன்றும் நினைவில் நிற்கின்றன.

இன்றைய மரங்கள்

அண்மைக் காலமாகப் பள்ளிக்கு மீண்டும் சென்று குழந்தைகளிடம் இயற்கையின் அதிசயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வேளைகளில் பள்ளிக் குழந்தைகளின் விளையாட்டுத் தாவரங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. அரசூரில் உள்ள பள்ளிக்குச் சென்றிருந்தபோது அருகில் இருந்த குளக்கரையில் வீற்றிருக்கும் பெரிய ஆலமரத்துக்கு அந்தப் பள்ளி மாணவர்கள் அழைத்துச் சென்றார்கள். அங்கே சென்ற உடனேயே கைக்கெட்டும் தூரத்தில் உள்ள விழுதுகளைப் பிடித்து போட்டி போட்டுக் கொண்டு மாணவர்கள் ஆடினார்கள்.

ஒரு மாணவி அந்த மரத்தின் மேலே ஏற ஆரம்பித்தாள்; அதைப் பார்த்ததும் ஒரு கூட்டமே மரமேற ஆரம்பித்தது. நானும் அவர்களுடன் சேர்ந்து மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். முக்கால் மணிநேரம் போனதே தெரியவில்லை. இறங்க மனமே இல்லாமல்தான் அந்த மரத்தைவிட்டு அகன்றோம். கோவை பள்ளி ஒன்றில் படிக்கும் ஒரு மாணவி அந்தப் பள்ளியில் உள்ள மயில்கொன்றை மரத்துக்கு இட்ட செல்லப் பெயர் ‘The Walk’ (‘நடை’). ஏனென்றால், அந்த மரத்தின் ஒரு கிளையில் அவள் நடந்து செல்ல வசதியாக, கிடைமட்டமாக அமைந்திருந்ததாலேயே அப்படிப் பெயர். சமீபத்தில் அங்கே சென்றிருந்தபோது பள்ளி நிர்வாகம் ஏதோ காரணத்தால் அந்த மரக்கிளையை வெட்டிவிட்டதாகக் கவலையோடு முறையிட்டாள்.

பிரிக்க முடியாத தாவரங்கள்

விழுப்புரத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்கள் ஏழிலைப்பாலை மரத்தை ‘எழுத்து மரம்’ என்றனர். விசாரித்தபோது, ஒரு மாணவன் அந்த மரத்தின் இலையை உடைத்து மற்றொருவனின் கையில் பெயரை எழுதினான். நிறமற்ற திரவமாதலால் என்ன எழுதினான் என்பது தெரியவில்லை. பின்னர் எழுதிய இடத்தின் மேல் மண்ணைத் தூவியவுடன் எழுத்துகள் தெளிவாகத் தெரிந்தன.

வெள்ளியங்காட்டில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவன், ஒரு வகை காட்டாமணக்குச் செடியொன்றின் இலைக்காம்பை ஒடித்து வாய்க்கருகில் வைத்து மெதுவாக ஊதி நீர்க்குமிழிகளை உருவாக்கி விளையாடிக்கொண்டிருந்தான். மயில்கொன்றை மரத்தின் சிவப்பான பூவின் இதழ்களைக் காக்கும் புல்லிதழ்கள் வெளியே பச்சை நிறமாகவும் உள்ளே இளஞ்சிவப்பாகவும் இருக்கும். அரசூர் பள்ளி மாணவர்கள்
இதைப் பிய்த்து விரல் நகங்களின் மேல் ஒட்டிக்கொண்டு, அதன் கூரான முனையைக் காட்டி பயமுறுத்தி விளையாடுகிறார்கள்.

விளையாட்டை மீட்போம்

இன்னும் பல வகையான தாவரங்களுடன் இந்தக் காலத்துப் பிள்ளைகள் விளையாடக்கூடும். நீங்களும் சிறு வயதில் வைத்து விளையாடிய தாவரங்களை நினைவுபடுத்தி உங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒருவேளை அவர்களுக்கெல்லாம் உங்களைப் போன்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சிறு வயதில் விளையாடியவற்றை அவர்களுடன் சேர்ந்து மீண்டும் ஆடிப்பாருங்கள்.

அந்த வாய்ப்பை இந்தக் காலக் குழந்தைகளுக்கும் தருவது மிகவும் அவசியம். இயற்கையைப் போற்ற, பாதுகாக்க முதலில் அவற்றுடனான தொடர்பை நல்ல வகையில் ஏற்படுத்திக்கொள்வது அவசியம். அதுவும் சிறு வயதில் புறவுலகின் விந்தைகளை அறிந்துகொள்வதும் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொள்வதும், இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கும் ஒரு பொறுப்பான சந்ததியை உருவாக்க வழிகோலும்.

மரங்களைத் தேடி ஒரு பயணம்!

நாடு முழுவதும் செப்டம்பர் 13 முதல் 16 வரை ‘மரங்களை நோக்கி ஒரு பயணம்’ என்ற நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நாட்களில் தனியாகவோ குழுவாகவோ, தெரு, பூங்கா போன்ற பொது இடங்களில் உள்ள மரங்களைப் பற்றி ‘சீசன் வாட்ச்’ என்ற கைப்பேசி செயலியின் மூலம் பதிவுசெய்யலாம். மரத்தைத் தேர்வுசெய்து, மரத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு அதன் தளிர், இலை, காய்ந்த இலை, மொட்டு, மலர், காய், பழம் உள்ளிட்டவற்றைக் குறித்து செயலியில் ‘Casual' பக்கத்தில் பதிவிட வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு:

http://www.seasonwatch.in/events.php

செயலியைப் பதிவிறக்கம் செய்ய:

https://bit.ly/2mdETz6

கட்டுரையாளர்,
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE