இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பண்ணைப் பள்ளி

By செய்திப்பிரிவு

அ.நே. ஆசைத்தம்பி

இந்தியப் பயிர் சாகுபடியில் பூச்சிகளால் மட்டும் ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 4.2 கோடி அமெரிக்க டாலர். இதனால் பூச்சிக்கொல்லி பயன்பாடு கணிசமான அளவு அதிகரித்தது. 2009-10-ல் 40,000 டன்னாக இருந்த பூச்சிக்கொல்லிப் பயன்பாடு, 2016-17-ல் 55 ஆயிரம் டன்னாக அதிகரித்தது. அதாவது 2009-10-ல் ஒரு ஹெக்டருக்கு 0.29 கிலோவாக இருந்த பூச்சிக்கொல்லிப் பயன்பாடு, 2016-17-ல் 37 சதவீதம் அதிகரித்து ஹெக்டருக்கு 0.40 கிலோவாக உயர்ந்துவிட்டது.

இந்தியாவில் அதிக பூச்சிக்கொல்லிப் பயன்பாடு உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களிலும் உள்ளன.
அதேநேரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் வரும் கேடுகளை உணர்ந்து துரிதமாக விழிப்புணர்வு பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம். பூச்சிக்கொல்லிக்கு மாற்று வழிகளையும், மாற்றுத் தொழில்நுட்பத்தையும் உழவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டி‘வயல்வெளிப் பள்ளிகள்’ அல்லது ‘பண்ணைப் பள்ளிகள்’ உருவாக்கப்பட்டுள்ளன. உழவர்களை நிபுணர்களாக ஆக்கும் களமாகவும், நவீன வேளாண்மை குறித்தான முறைசாராக் கல்விக் கூடமாகவும் பண்ணைப் பள்ளிகள் திகழ்கின்றன.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

அதிக அளவில் பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகளைத் தெளிப்பதால் காற்று, நீர், மண் ஆகியவை மாசடைந்து, இயற்கைச் சூழல் பாதிக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை உணவுப் பொருட்களில் தங்கி மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தீமையை உண்டாக்குகிறது. வேளாண் இடுபொருள் செலவும் அதிகரிக்கிறது. அதிக பூச்சிக்கொல்லிகளால் இயற்கையிலேயே பயிரைச் சேதப்படுத்தும் தீமைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒட்டுண்ணிகள், குளவிகள், தட்டான்கள், சிலந்திகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகளும் செத்து மடிகின்றன. பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும்போது தப்பித்துவிடும் பூச்சிகள், பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக எதிர்ப்பாற்றலைப் பெற்று, தொடர்ந்து தீமை செய்கின்றன. சில வகைப் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும்போது, அவற்றுக்கு மடியாத வேறு வகைப் பூச்சிகள் அதிக அளவில் பெருகிச் சேதத்தை உருவாக்குகின்றன.

இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்த்து இயற்கை முறையில் பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த ‘ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு’ முறை அவசியமாகிறது. இயற்கை முறை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பூச்சி, நோய்த் தாக்குதல் ‘பொருளாதாரச் சேத நிலையை’ அடையாமல் கட்டுக்குள் வைத்திருப்பதே இந்த முறையின் நோக்கம்.
பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பல்வேறு முறைகள் எளிமையாக இருந்தாலும் நன்மை – தீமைப் பூச்சிகளை அடையாளம் கண்டு உணர்ந்துகொள்வதில் உழவர்களுக்கு உரிய அனுபவம் இல்லை. பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்காமலேயே பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தலாம் என்ற அறிவியல் உண்மையை உழவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

அனுபவம் தரும் பண்ணைப் பள்ளிகள்

கண்ணில் படும் பூச்சிகளை எல்லாம் பூச்சிக்கொல்லி தெளித்துக் கொன்றுவிட வேண்டும் என்ற உழவர்களின் மன ஓட்டத்தைத் திசைமாற்றி, வேறு விதமாகச் சிந்திக்கவும் செயல்பட வைக்கவும் புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பின் ஒரு அம்சமாக 'வயல்வெளிப் பள்ளிகள்' அல்லது ‘பண்ணைப் பள்ளிகள்’ அமைக்கப்படுகின்றன.
1. முதலில் நன்மை - தீமைப் பூச்சிகளை உழவர்களே இனம் கண்டுகொள்வது சவாலாக இருப்பதால், உழவர் குழுக்கள் அமைத்து அவர்களே பூச்சிகளைப் பிடித்து அனுபவ அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
2. இதில் வயல்கள்தாம்
பள்ளிகள், இங்கு வழங்கப்படும் முறைசாராக் கல்வி மூலம் பாமர உழவர்களும் செயல்முறைப் பயிற்சியைப் பெறுகின்றனர்.
3. வயல்வெளிப் பள்ளிகளில் பயிரின் விதைப்பு முதல் அறுவடை வரை நிலவும் சூழல், பருவநிலை, பூச்சி - நோய்த் தாக்குதல்கள் குறித்தும் அவற்றை ஒட்டி எடுக்கப்படும் முடிவுகள் குறித்தும் உழவர்களுக்கு வேளாண் அதிகாரிகள் விளக்குகிறார்கள்.
4. நன்மை செய்யும் பூச்சிகள் குறித்தும், தீமை செய்யும் பூச்சிகள், அவற்றின் அடையாளம், பயிர் சேதாரம் ஆகியவை குறித்தும் வயல்வெளிகளில் நேரடிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அறிவியல் உண்மைகளை உழவர்களே உணர்ந்து, பூச்சிக்கொல்லி தெளித்துப் பூச்சிகளைக் கொன்றுவிட வேண்டும் என்ற மனோபாவத்தை விட்டொழிக்கும் வகையில் கற்றுத்தரப்படுகிறது.
5. அது மட்டுமல்லாது பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டுமா,
வேண்டாமா என்ற முடிவையும் அவர்களே எடுக்கின்றனர். வயல்வெளிகளில் இறங்கிப் பூச்சிகளைச் சேகரித்துக் கணக்கிடும்போது தீமை செய்யும் பூச்சிகளைவிட, நன்மை செய்யும் பூச்சிகளான தட்டான், சிலந்தி, பொறிவண்டு, குளவி வகைகள் போன்றவை அதிகம் இருந்தால் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டியதில்லை. இந்த முடிவை உழவர்களே எடுக்கும் வகையில் கற்றுத் தரப்படுகிறது.
6. ஒரு பண்ணைப் பள்ளிக்கு ஒரே கிராமத்தைச் சார்ந்த உழவுத் தொழிலில் அனுபவமும் ஆர்வமும் கொண்ட 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, 5 குழுக்களாகப் பிரிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர் தேர்வுசெய்யப்பட்டு, அதற்கு வேளாண் துறை அலுவலர்
ஒருவர் வழிகாட்டியாக நியமிக்கப்படுகிறார்.
7. பயிர்களுக்குத் தகுந்தவாறு வாரம் ஒருமுறை (அல்லது)
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்தக் குழுக்கள் கூடி, வயல்களில் இறங்கிப் பூச்சிகளைச் சேகரிக்கின்றனர். ஒவ்வொரு குழுவும் தாம் சேகரித்த பூச்சிகளை வகைப்படுத்தி, அட்டைகளில் படமாக வரைந்து, அவற்றைக் குறித்து விளக்கிப் பேசுகின்றனர்.
8. அதைத் தொடர்ந்து நன்மை செய்யும் பூச்சிகள் அதிகம்
இருந்தால் பூச்சிக்கொல்லி
தெளிக்க வேண்டியதில்லை
என்ற முடிவை அவர்களே எடுக்கின்றனர். சுற்றுச்சூழல் ஆய்வு, குழு விவாதம், பூச்சிகளை அடையாளம் காணுதல், தொடர் பயிர் கண்காணிப்பு போன்ற முறைகள் மூலம் உழவர்களை அறிவியலாளர்களாக மாற்றும் புதிய முயற்சி இது.
இந்த வகையில் வளமான பயிரை நலமான சூழலில் வளர்த்தல், நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாத்தல், பயிரைத் தொடர்ந்து கண்காணித்தல், உழவர்களை நிபுணர்கள் ஆக்குதல், காற்று, நீர், உணவை - நஞ்சாக்காமல் பாதுகாத்தல் என்ற ஐந்து முதன்மையான நோக்கங்களுடன் பண்ணைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கட்டுரையாளர்,
கோபி வட்டார
வேளாண் உதவி இயக்குநர்
தொடர்புக்கு: agrigobi@yahoo.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்