ச.ச.சிவசங்கர்
மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையின் முடிவில் உள்ளது பூஞ்சேரி. அதன் வலப்புறம் பாண்டிச்சேரி-செங்கல்பட்டு பிரியும் சாலையில் குச்சிக்காடு எனும் பகுதியில் அமைந்துள்ளது ‘இட்லர்ஸ் கபே’ என்ற இயற்கை உணவகம்.
எல்லோரும் எதையோ துரத்திக்கொண்டு அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஆசுவாசமாக உணவை ரசித்து ருசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உணவகத்துக்கு இட்லர்ஸ் (idlers) கபே எனப் பெயர் சூட்டினோம் என்கிறார் இதன் நிறுவனர் டேவிட் ராஜ்.
குடும்ப உணவகம்
டேவிட் ராஜ், அவருடைய மனைவி ஆன் டேவிட், இவர்களுடைய மகன் சித்தார்த், மகள் அருந்ததி ஆகியோர் இணைந்து இந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்தின் மனிதவளத் துறையில் வேலை பார்த்துவந்த டேவிட் ராஜ் அதைத் துறந்துவிட்டு, 10 ஆண்டுகளாகக் குடும்பத்துடன் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுவருகிறார். அதன் வளர்ச்சிகளில் ஒன்றாக சமீபத்தில் இந்த உணவகம் தொடங்கப்பட்டிருக்கிறது. தங்கள் பண்ணையில் விளையும் வேளாண் பயிர்களையும் காய்கறிகளையுமே இங்கே உணவு தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.
அதனால் வீட்டுச் சுவையுடன் ஆரோக்கியமான உணவு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. உணவகத்துடன் இயற்கைப் பொருட்கள் விற்பனையகத்தையும் இவர்கள் நடத்திவருகிறார்கள்.
செங்கற்களால் ஆன இந்த உணவகத்தின் மாறுபட்ட கட்டுமானம் பார்த்தவுடன் ஈர்க்கிறது. இந்தக் கட்டிடமும் இந்தக் குடும்பத்தின் கைவண்ணம். காந்தியக் கட்டிடக் கலை நிபுணர் லாரி பேக்கரின் தாக்கத்தால் இந்த உணவகத்தைத் தாங்களே வடிவமைத்ததாகச் சொல்கிறார்கள். உள்ளூர்க் கொத்தனார்களைக் கொண்டு இந்தக் கட்டிடத்துக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
இந்த உணவகக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப் பட்டுள்ள பெரும்பாலான கட்டுமானப் பொருட்கள், மறுபயன்பாட்டுப் பொருட்கள். கூரையாக வேயப்பட்டுள்ள ஓடுகள், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுக் கைவிடப்பட்டவை. இதேபோல் மேஜைகள், மரச் சாமான்கள் போன்ற அறைகலன்களுக்கும் பழையவற்றையே வாங்கிச் சீரமைத்துப் பயன்படுத்தியுள்ளனர். இப்படிப் பழைய பொருட்களை வாங்கியதன் மூலம் கொள்முதல் செலவு பாதியாகக் குறைந்துள்ளது. இப்படி மிச்சமான பணத்தைக் கட்டிடப் பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளமாக வழங்கியுள்ளனர்.
புத்தம்புது சிறப்புணவு
உணவகத்துக்குத் தேவையான தண்ணீருக்குக் கிணற்று நீரையும் மின்சாரத் தேவைக்குச் சூரிய மின்கலத்தையும் பயன்படுத்துகின்றனர். இங்கு கிடைக்கும் உணவைப் போலவே இந்த வளாகக் கட்டுமானமும் மற்ற பயன்பாடுகளும்கூட இயற்கையைச் சார்ந்ததாகவே உள்ளன. இதையெல்லாம் விசாரித்துவிட்டு கை நனைக்கப் போகும்போது, மனது பாதி நிறைந்த நிலைக்குச் சென்றுவிடுகிறது. அப்புறம் என்ன, மதிய விருந்துதான். அதிலும் ‘இட்லர்ஸ் கபே’யில் நிரந்தரத் துணை உணவு கிடையாது.
அன்றைக்குப் பண்ணையில் என்ன விளைந்திருக்கிறதோ, அதுவே அன்றைய சிறப்புணவு. அன்றைக்கு விளைந்த காய்கறிகளால் செய்யப்பட்ட குழம்பு, கூட்டு, பொரியல் போன்றவை பரிமாறப்படுகின்றன. சாப்பாடு என்றால் வெறும் சோற்றை மட்டும் வேகவைத்துத் தருவதில்லை. மாப்பிள்ளைச் சம்பா கைக்குத்தல் அரிசிச் சோறு, கீரைக் கூட்டு, பச்சைப்பயறு பெசரட் தோசை, பப்பாளி சாலட், வாழைத்தண்டு பச்சடி, வாழைப்பூ வடை என உடலுக்கு வலுச் சேர்க்கும், சுவையான உணவைப் பரிமாறுகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதுடன், இயற்கை வேளாண்மை மீது தனிப் பிரியமும் கூடுகிறது.
உள்ளூர்க் காய்க்கு முக்கியத்துவம்
கேழ்வரகு, மாப்பிளைச் சம்பா, கீரை வகைகள், காய்கறிகள் எனப் பெரும்பாலான பொருட்கள் இவர்களுடைய பண்ணையிலேயே விளைந்தவை. தங்கள் பண்ணையில் இல்லாத காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள உழவர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்கின்றனர். நம்பிக்கையான இயற்கை உழவர்களிடம் இருந்து மட்டுமே பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். நாட்டு மாட்டுப் பால், மாமல்லபுரத்திலிருந்து மீன் என மூலப்பொருள் தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். பிராய்லர் கோழி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பயன்படுத்துவது இல்லை.
அதேபோல் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற மலைகளில் விளையும் காய்கறிகளின் பயன்பாடும் இந்த உணவகத்தில் மிகக் குறைவு. “சாதாரணமாக நமது நாட்டுக் காய்களாக கொத்தவரங்காய், வெண்டைக்காய் போன்றவற்றின் மீது இந்தத் தலைமுறை பெரிய
ஆர்வம் காட்டுவதில்லை. அது மட்டுமல்லாமல் காய்கறிகளை வேறொரு ஊரிலிருந்து தருவிப்பதால், பயணத்தில் அவற்றின் இயல்புத்தன்மை குறைந்து வாடி, வதங்கிவிடுகிறது. உள்ளூர் காய்கறிகள்தான் எங்களுடைய நட்சத்திரம். அதனால் உள்ளூர்க் காய்கறிகளையே இங்கே அதிகம் பயன்படுத்துகிறோம்” எனக் காரணத்தை விளக்குகிறார் ஆன் டேவிட்.
அத்துடன் ஓர் உணவகத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் நாமே தயாரிப்பது சாத்தியமற்றது. எங்கள் சுற்றுவட்டாரத்திலேயே பலர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் பொருட்களை நாமே பயன்படுத்தாவிட்டால் எப்படி? அதனால்தான் வெளியிலிருந்து பல விளைபொருட்களைப் பெறுகிறோம் என்கிறார் அருந்ததி.
“இங்கே மதியம் முழுச் சாப்பாடு கிடைக்கும். அதுபோக பீட்சா, சாலட், பழ ஐஸ்கிரீம் போன்றவற்றை நாங்களே தயாரிக்கிறோம். சுற்றுவட்டாரத்தில் உள்ள இயற்கை உழவர்களும் பொருளாதார ரீதியில வளரணும், நல்ல பொருட்கள் மூலமாகத் தரமான உணவை வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கணும். இதுதான் எங்கள் நோக்கம்” என்று ருசியான ஒரு சாப்பாட்டை நிறைவுசெய்த திருப்தியுடன் கூறுகிறார் ஆன் டேவிட்.
‘இட்லர்ஸ் கபே’
தொடர்புக்கு: 9445278967
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago