சு. தியடோர் பாஸ்கரன்
சூழலியல், சுற்றுச்சூழல் போன்ற சொற்கள் புழக்கத்தில் வந்திருக்காத காலம். திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஓர் ஆசிரமத்தில் வாழ்ந்துவந்த காந்தியவாதி ஒருவர், நீர் மேலாண்மை பற்றிய முக்கியமான ஒரு கட்டுரையை எழுதினார்
வார்தாவில் காந்தியின் வலதுகைபோல் இயங்கிவந்த ஜே.சி. குமரப்பா (1892-1960), நாடு விடுதலை பெற்ற பின்னர், காந்திஜியின் மறைவுக்குப் பின், தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்து கல்லுப்பட்டியில் ஐம்பதுகளில் சிறிய ஆசிரமத்தை நிறுவினார். கிராமப்புறப் பொருளாதாரத்தில் தன் கவனத்தைச் செலுத்தி, சில முக்கியமான புரிதல்களைப் பதிவுசெய்தார். கிராமங்களையும் அங்கு வாழும் மக்களின் தேவைகளையும் கவனித்துக்கொண்டால், நாடு வளம் பெறும் என்பது அவரது அடிப்படை நம்பிக்கை. திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் 27 கிராமங்களின் பொருளாதார நிலையை ஆராயத் தொடங்கி ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். இன்று அவரது எழுத்தை வாசிக்கும்போது அவர் ஒரு 'சூழலியல் தீர்க்கதரிசி' என்பது விளங்குகிறது.
நீராதாரங்களை ஏன் காக்க வேண்டும்?
கிராமத்து நீராதாரங்களை அவர் ஆழ்ந்து கவனித்தார். ஏரிகள், கண்மாய்கள், ஊருணிகள் போன்றவை வேளாண்மை நீர்ப்பாசனத்துக்கும் நிலத்தடி நீரைத் தக்கவைக்கவும் உதவுவதைக் குறிப்பிட்டு எழுதினார்.
“பாசன ஏரிகள் யாவுமே தூர்ந்து போய் மண் அரிப்பால் சீர்கெட்டுவிட்டன. இந்த ஏரிகளை ஐந்தாறடி ஆழத்துக்குத் தூர்வாரினால், பாசன சீர் பற்றாக்குறை தீரும். ஒரு போகச் சாகுபடிக்குக்கூடத் திண்டாடும் இன்றைய நிலை மாறி, இரண்டு அல்லது மூன்று போக விளைச்சலைக் காணலாம். இந்த ஏரிகளைப் பராமரித்தால் வெள்ளச்சேதத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நில அரிப்பையும் தடுக்கலாம்” - என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஏரிகளின் மரணம்
தமிழ்நாட்டில் 41,000 ஏரிகள் இருந்ததாக அண்மைக்காலக் கணிப்பு ஒன்று கூறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. ஆனால், இந்த நீர்நிலைகள்
சிறிது சிறிதாகச் சீரழிக்கப்பட்டன. நகரங்களுக்கு அருகே இருந்த ஏரிகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. சேலம் பேருந்து நிலையம் இருக்குமிடம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏரியாக இருந்தது. அதேபோல கோயம்பத்தூரிலுள்ள பரந்த நீர்நிலையாய் இருந்த வாலங்குளம் குறுகி, சிறுத்துப் போய்விட்டது.
நிலத்தைத் தேடியலைபவர்கள் கண்ணில் முதலில் படுவது ஏரிகளும் மற்ற நீர்நிலைகளும்தாம். ஏரிகள் வறண்டு போயிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவற்றை ஆக்கிரமித்துகொண்டார்கள். சிறுசிறு கால்வாய்கள் மூலம்தான், ஓர் ஏரிக்கு நீர் போகிறது. மழையில்லா நாட்களில் அவை கால்வாய்கள் என்று அடையாளம் கண்டுகொள்வதுகூடக் கடினம். இந்த நீர்போக்குகளின் மேல் கட்டிடங்கள் கட்டப்படுவதால், மழை பெய்தாலும் ஏரிகள் நிரம்புவதில்லை. இதுதான் ஏரிகளின் மரணத்துக்கு முதன்மைக் காரணம்.
ஏரிகள் மறைவதால் நீர் வளம் மட்டுமல்ல, பல்லுயிரியமும் அடிவாங்குகிறது. பாம்பு, தவளை, மீன், ஆமை எனப் பல உயிரினங்களுக்கும் ஒரு ஏரி வாழிடமாக விளங்குகிறது. பல பறவை இனங்களும் ஏரிகளில் இரை தேடுகின்றன. தமிழ்நாட்டிலிருக்கும் எல்லாப் பறவை சரணாலயங்களுமே ஏரிகளில்தான் உள்ளன. வலசை வரும் லட்சக்கணக்கான புள்ளினங்கள், நம் நீர்நிலைகளுக்கு இரை தேடி வருகின்றன. உள்ளூர் நீர்ப்பறவைகளும் வேடந்தாங்கல், கூந்தன்குளம் போன்ற ஏரிகள் அருகே கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன.
மறையாத அசோக ஏரி
மரபாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது வேளாண்மை ஏரிப்பாசனத்தை நம்பிதான் இருந்திருக்கிறது. நிலத்தடி நீரையும் ஏரிகள் தக்கவைக்க உதவின. ஏரிகள்தாம் வேளாண்மையின் உயிர்நாடி என்பதை மக்கள் முன்பு உணர்ந்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான ஊர்களுக்கு பெயரிலேயே குளம், ஏரி என்று பெயர் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அரசர்களும் இதை உணர்ந்து ஏரிகளைக் கொண்டாடினார்கள். குஜராத்தில் ஜுனகாத் அருகே அசோக மன்னர் தோண்டிய ஏரி இன்னும் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் கரையில் அசோகரின் பாறைக் கல்வெட்டு ஒன்றில், ஏரியை அவ்வப்போது சீரமைக்கத் தான் செய்திருந்த ஏற்பாட்டை சக்கரவர்த்தி அந்தக் கல்லில் பொறித்துவைத்திருக்கிறார்.
மரபாகப் பெருவாரியான ஏரிகள் கிராமத்து மக்களாலேயே பராமரிக்கப்பட்டு வந்தன. அவர்களே தூர் வாரி, கரையை வலுப்படுத்தி, சீரான பாசனத்தை அமைத்துக்கொண்டனர். ஏரிகளிலிருந்து எடுக்கப்பட்ட வண்டலை வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்தினார்கள். இம்மாதிரியான பணிகள் யாவுமே உள்ளூர் மக்களின் பங்கேற்புடன் செய்யப்பட்டன. கடந்த இரு நூற்றாண்டுகளாக அரசு இதில் இடையிட்டதால், ஏரிகள் புறக்கணிக்கப்பட்டன.
மறைநீரைக் கண்டறிந்தார்
நாடு விடுதலை பெறுவதற்குமுன், காங்கிரஸ் கட்சி அமைத்த ‘வேளாண் சீரமைப்பு குழு' சார்பாக நாடு முழுவதும் பயணித்த குமரப்பா ஏரிகள், குளங்கள்தாம் நாட்டின் வளத்துக்கு அடிப்படை என்பதைக் கண்டறிந்தார். பெரிய அணைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை. வேளாண்மையில் மின்சாரப் பயன்பாடு பற்றிகூட அவருக்கு நம்பிக்கை இல்லை.
1951இல் எழுதிய கட்டுரை ஒன்றில் தென்னார்க்காடு மாவட்டத்தைத் தனது வாதத்துக்கு சான்றாகச் சுட்டிக்காட்டுகிறார். அங்கு சோளம், கம்பு போன்றவற்றைப் பயிரிட்டுக்கொண்டிருந்த உழவர்கள் மின்சார நீரிறைப்பு மோட்டார்கள் பயன்பாட்டுக்கு வந்தபின், பழத் தாவரங்களைப் பயிரிடத் தொடங்கினார்கள். பின்னர் இங்கிருக்கும் நிலத்தடி நீர் பழங்கள் உருவில் இன்றைய சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதியாகிறது என்றார்.
நீர்வளத்தின் சீர்கேட்டால் குறு உழவர்கள் நகர்ப்புறத்துக்குக் கூலிகளாகக் குடிபெயர்வதைச் சுட்டிக்காட்டுகிறார். மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி போன்ற கருத்தாக்கங்களைப் பற்றி குமரப்பாவின் பார்வை வேறு விதமாக இருந்தது. சுற்றுச்சூழல் என்பது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது என்றார். காடு, காட்டுயிர் மட்டும் கொண்ட மக்களற்ற புறச்சூழலை அவர் ஏற்கவில்லை.
அங்கீகரிக்காத நேரு
‘தீர்க்கதரிசிகளுக்குச் சொந்த ஊரில் மதிப்பில்லை' என்பதற்கேற்ப குமரப்பாவுக்கு நினைவுச்சின்னம் எதுவும் இல்லை. நேரு உட்பட டெல்லியில் பதவியேற்றிருந்த காங்கிரஸ் தலைவர்கள், அவரையோ அவரது கிராமப்புற அணுகுமுறையையோ கண்டுகொள்ளவே இல்லை. முக்கியமாக குமரப்பாவின் அணுகுமுறையும் சிந்தாந்தமும் நேருவுக்குப் பிடிக்கவில்லை. குமரப்பாவுக்கு ஒரு அஞ்சல் தலைகூட இதுவரை வெளியிடப்படவில்லை.
அண்மையில் பெங்களூருவில் வாழும் வேணு கோவிந்த், தீபக் மால்கன் என்கிற இரு இளம் ஆய்வாளர்கள் குமரப்பாவின் வரலாற்றையும் கருத்துகளையும் ஆராய்ந்து 'The Web of Freedom: J C Kumarappa and Gandhi’s Struggle for Economic Justice' (OUP) என்ற நூலை எழுதியிருக்கிறார்கள். குமரப்பாவின் ‘கிராம இயக்கம்’ போன்ற சிறு நூல்களை எழுத்தாளர் குமுதினி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மதுரையில் உள்ள ‘சர்வோதய இலக்கியப் பண்ணை' அவருடைய நூல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago