கடந்து போன கோடைக் காலத்தில் ஆந்திரப் பகுதியில் வெப்ப அலைகளால் உயிரிழந்தவர்கள் 1,500-க்கும் மேல். அப்போது தார் பாலைவனத்தை தோற்கடிக்கும் வகையில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ஜூன் மாதத்தில் 10 நாட்களில் பெய்ய வேண்டிய 28 செ.மீ. மழை, ஒரே நாளில் அரபிக் கடலோரம் பெய்து தீர்த்தது.
அடுத்த நாள், இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பை, தண்ணீரில் தத்தளித்தது. இதெல்லாம் சம்பந்தமில்லாத வானிலை மாற்றங்கள் போலத் தெரியலாம். ஆனால், இதற்கும் 'பருவநிலை மாற்றம்' என்ற உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்சினைக்கும் தொடர்பிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தப் பிரச்சினைகளுக்கு நாம்தான் காரணம் என்று சொன்னால் நம்ப முடியாது. இதை தடுத்து நிறுத்த வாருங்கள் என்று அழைப்புவிடுத்தால், சட்டென்று நம் மனம் ஒப்புக்கொள்ளாது. ஆனால், இந்தப் பிரச்சினை தொடர்பாக மிகப் பெரிய பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள் ‘தி கார்டியன்’ நாளிதழும், அதன் முன்னாள் தலைமை ஆசிரியரான ஆலன் ரஸ்பிரிட்ஜரும்.
மனதை அரித்த கேள்வி
ஆக்கபூர்வமான இதழியலுக்கு உலகம் காட்டும் உதாரணமான 'தி கார்டியன்' நாளிதழை, 20 ஆண்டு காலம் தூணாகத் தாங்கியவர் அதன் தலைமை ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜர். ஜூலியன் அசாஞ்சின் விக்கிலீக்ஸ் திரைமறைவு அதிகார ரகசியங்கள் வெளியீடு, அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவின் கண்காணிப்பு பற்றிய எட்வர்ட் ஸ்னோடனின் அம்பலங்கள் போன்றவற்றை ‘கார்டியன்’ நாளிதழ் மூலமாக உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர்தான், இந்த ரஸ்பிரிட்ஜர்.
இவ்வளவையும் செய்து முடித்துவிட்ட ஆலனுக்கு ஓய்வுபெறுவதற்கு முன் மனதுக்குள் ஒரு உறுத்தல். எத்தனையோ செய்துவிட்டோம், ஆனால் உலகின் இருப்பையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த ஒரு பத்திரிகையாளனாக, ஒரு நாளிதழின் ஆசிரியனாக என்ன செய்திருக்கிறோம்?
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் அவர் மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்வி இதுதான். விடுமுறை முடிந்து வேலைக்குத் திரும்பிய உடனேயே, அவர் செய்த முதல் வேலை. ‘பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய முடியும்?’ என்று தன் ஆசிரியர் குழுவினரிடம் விவாதித்ததுதான். ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் மோதிக்கொண்டன. அதன் முடிவில் அவர்கள் எடுத்த முடிவுதான் 'கீப் இட் இன் தி கிரவுண்ட்' என்ற பிரச்சாரம்.
பயமுறுத்தும் மாற்றங்கள்
அந்தப் பிரச்சாரத்தின் சாராம்சம் இதுதான். புவி வெப்பமடைதல் காரணமாக, இன்றைக்கு உள்ள சராசரி உலக வெப்பநிலையைவிட 2 டிகிரி அதிகமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உயர்ந்தால், அதன் பின்விளைவாக ஏற்படப்போகும் பயங்கரமான இயற்கைச் சீற்றங்களை உலகம் தாங்காது. இந்த சராசரி வெப்பநிலையும் அன்றாடம் நமது வானிலை மையம் சொல்லும் வெப்பநிலையும் ஒன்றல்ல.
இது ஒட்டுமொத்த உலகத்துக்குமான சராசரி வெப்பநிலை. அன்றாட வெப்பநிலை ஒன்று-இரண்டு டிகிரி உயர்ந்தாலே நம்மால் தாங்க முடியவில்லை என்பதற்கு ஜூலை மாத வெப்பநிலையே சாட்சி. இதில் சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயந்தால் ஏற்படும் பின்விளைவு களுக்குக் கேட்கவா வேண்டும்.
உலகில் உள்ள புதைபடிவ எரிபொருட்கள்தான் பூமி வெப்பமடைவதற்கு முதன்மைக் காரணம். நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால்தான் சாதாரண பல்பு முதல் விமானம் வரைக்கும் இயங்க முடிகிறது. ஆனால், இந்தப் பொருட்கள் எரியும்போது வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடே, அளவுக்கு அதிகமாக உலகம் வெப்பமடைய அடிப்படைக் காரணம்.
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் காரணமாக 2050-க்குள் 565 கிகா டன் (கிகா டன் - 100,00,00,000 கிலோ) கார்பன் டை ஆக்சைடு அதிகரித்தால், மேலே சொன்ன 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மேலும் எரித்தால், உலகத்தின் இயக்கத்தில் எப்படிப்பட்ட மோசமான சீர்குலைவு ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது. பருவமழை மட்டுமல்ல, கடல் மட்ட உயர்வு, அன்றாட வெப்பநிலை, இயற்கைச் சீற்றங்கள் என எல்லாமே மிகமிக மோசமாகிவிடும்.
புதைபடிவ ஆபத்து
உலகில் மிச்சம் உள்ள மொத்த புதைபடிவ எரிபொருட்களை எரித்தால் வெளிப்படக்கூடிய கார்பன் டை ஆக்சைடின் மொத்த அளவு 2795 கிகா டன். இது 565 கிகா டன்னைப் போல 5 மடங்குக்கு மேல். இவ்வளவு கார்பன் டை ஆக்சைடையும் வெளியிட்டுவிட்டால், உலகம் அவ்வளவுதான். எனவே, புதைபடிவ எரிபொருட்களை பூமியிலிருந்து எடுக்காமல் இருந்தால், பருவநிலை மாற்றங்களைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
இந்த 2,795 கிகா டன் கார்பன் டை ஆக்சைடு தேங்கியுள்ள புதைபடிவ எரிபொருட்களை உலகிலுள்ள பல்வேறு கச்சா எண்ணெய் நிறுவனங்கள், நிலக்கரி நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விற்பனை செய்துவருகின்றன. இந்த எண்ணெய் நிறுவனங்களில் உலக அளவில் அதிக முதலீடு செய்திருப்பது இரண்டு அறக்கட்டளைகள்: வெல்கம் டிரஸ்ட், பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை. இவை இரண்டும் பல்வேறு பொதுநல ஆராய்ச்சிகளுக்கு ஒருபுறம் நிதியளித்துவருகின்றன. ஆனால், மற்றொருபுறம் தங்களிடம் உள்ள பெருமளவு பணத்தைக் கச்சா எண்ணெய் துரப்பணம் செய்யும் நிறுவனங்களில்தான் இவை முதலீடு செய்துள்ளன.
வெளியே எடுக்காதே!
கார்டியன் ஆசிரியர் குழுவின் விவாதத்தின் இறுதியில் அவர்கள் எடுத்த முடிவு இதுதான். கச்சா எண்ணெயில் பெருமளவு முதலீடு செய்திருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களும், தங்களுடைய முதலீட்டுப் பணத்தை எண்ணெய் நிறுவனங்களிலிருந்து திரும்பப் பெற பிரச்சாரம் நடத்துவது என்பதுதான் அந்த முடிவு.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் 'கீப் இட் இன் தி கிரவுண்ட்' என்ற கார்டியன் நாளிதழின் பிரச்சாரம் சூடுபிடித்தது. கவிஞர்கள், நடிகர்கள், செயல்பாட்டாளர்கள் என பலரும் இந்த பிரச்சாரத்தில் ஆர்வமாகப் பங்கெடுத்தார்கள். அதையெல்லாம்விட உலகின் பல மூலைகளிலிருந்து பெருமளவு வாசகர்கள், இந்த பிரச்சாரத்துக்கு உற்சாக ஆதரவளித்தார்கள். இந்தப் பிரச்சாரம் தொடர்பாக வெல்கம் அறக்கட்டளை, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையினரை நேரில் சந்தித்து ஆலன் ரஸ்பிரிட்ஜரே பேசினார்.
உள்ளே நெருக்கடி
இந்தப் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஆலன் ரஸ்பிரிட்ஜருக்கு ஒரு முக்கியமான சந்தேகம் வந்தது. கார்டியன் நாளிதழை நடத்திக்கொண்டிருக்கும் 'தி ஸ்காட் டிரஸ்ட்'டில் உள்ள பணம் எதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் அந்தக் கேள்வி. ஸ்காட் டிரஸ்ட்டும் கச்சா எண்ணெய் நிறுவனங்களில்தான் முதலீடு செய்திருக்கிறது.
கச்சா எண்ணெய் முதலீட்டை திரும்பப் பெற வேண்டும் என்று கார்டியன் நாளிதழ் பிரச்சாரம் நடத்திக்கொண்டிருக்கும்போது, அதை நடத்தும் அறக்கட்டளையே கச்சா எண்ணெயில் முதலீடு செய்திருப்பது எவ்வளவு பெரிய முரண்? இது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகத்தினரிடம் ரஸ்பிரிட்ஜர் பேசினார். ஆனால், முதலீட்டை திரும்பப் பெறுவது தொடர்பாக எந்தக் கருத்தையும் அப்போது அவர்கள் தெரிவிக்கவில்லை.
ஆனால், ஆறு வாரங்களில் மாற்றம் நடந்தது. கச்சா எண்ணெய் நிறுவனங்களிலிருந்து ஸ்காட் டிரஸ்ட் ரூ. 5,500 கோடி முதலீட்டை விலக்கிக்கொள்ள முடிவெடுத்தது. இப்படி பல்வேறு திருப்பங்களுடன் வெற்றிகரமாக நடைபெற்ற அந்தப் பிரச்சாரம், மே மாதத்துடன் நிறைவடைந்தது. உலகப் புகழ்பெற்ற ஒரு நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்த ஆலன் ரஸ்பிரிட்ஜரும் மே 29-ம் தேதி ஓய்வு பெற்றார், ஐந்து மாதங்களுக்கு முன் தன் மனதை அரித்த கேள்வியின் காரணமாக உதித்த பிரச்சாரத்தை நடத்திவிட்ட மனநிறைவுடன் .
மனநிறைவு
" ஆசிரியர் பொறுப்பிலிருந்து நான் ஓய்வுபெற்றுவிட்ட பிறகும், அந்த பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்த எனக்கு அடுத்து வந்த ஆசிரியை கேதரின் வீனர் விரும்புகிறார். இந்தப் பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் எனக்கு நிறைவளிக்கிறது. என் பேரனோ பேத்தியோ ‘இந்த உலகைக் காப்பாற்ற என்ன செய்தாய் தாத்தா?’ என்று கேட்டால், நிச்சயமாக எந்த பதிலையும் சொல்லாமல் தலைகுனிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று ‘தி இந்து’ அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையம் சமீபத்தில் சென்னையில் நடத்திய கூட்டத்தில் பேசியபோது ஆலன் ரஸ்பிரிட்ஜர் தெரிவித்தார்.
இந்த பிரச்சாரம் பருவநிலை மாற்றம் தொடர்பான எல்லாப் பிரச்சினைகளையும் கவனப்படுத்தவில்லை. அதேநேரம், எடுத்துக்கொண்ட எளிமையான, ஒற்றை நோக்கத்தை அந்தப் பிரச்சாரம் திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. பிரிட்டனை மையமாகக் கொண்டு வெளிவரும் கார்டியன் நாளிதழின் இந்தப் பிரச்சாரம் உலகின் பல மூலைகளை எட்டியிருப்பதுதான், ஆலன் ரஸ்பிரிட்ஜர் - அவருடைய குழுவினரின் ஆத்மார்த்தமான முயற்சிக்குக் கிடைத்த பரிசு.
ஒரு பத்திரிகையாளரும் ஒரு பத்திரிகையும் இந்தச் சமூகத்தில் எப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான மாற்றத்தை சாத்தியப்படுத்த முடியும் என்பதை, இந்தப் பிரச்சாரம் மூலம் ஆலன் ரஸ்பிரிட்ஜரும் கார்டியன் நாளிதழும் அற்புதமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.
மூன்று முக்கிய எண்கள்
2 டிகிரி செல்சியஸ்:
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டினால், அதன் தொடர்ச்சியாக ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் பயங்கர மானதாக இருக்கும். இந்த அதிகபட்ச வெப்பநிலை உயர்வு எல்லையை உலகின் பெரும்பாலான நாட்டு அரசுகளும் விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
565 கிகா டன்:
(கிகா டன் - 100,00,00,000 கிலோ) 2050-க்குள் 565 கிகா டன் கார்பன் டை ஆக்சைடை மனிதர்கள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது. அப்படி வெளியிட்டாலும் அபாய எல்லையான 2 டிகிரி செல்சியஸ் எட்டப்படாது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
2,795 கிகா டன்: உலகில் உள்ள மொத்த புதைபடிவ எரிபொருட்களை எரித்தால் வெளியிட வாய்ப்புள்ள கார்பன் டை ஆக்சைடின் மொத்த அளவு. இது மேலே சொன்ன 565 கிகா டன்னின் 5 மடங்கைவிடவும் அதிகம்.
இரண்டு வீடியோக்கள்
கார்டியன் நாளிதழின் 'கீப் இட் இன் தி கிரவுண்ட்' என்ற பிரச்சாரம் தொடர்பான இரண்டு வீடியோக்களை கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம்:
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago