சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு நாள் மட்டும் பாடுபட்டால் போதாது, தினமும் செயல்பட்டால்தான் அதிவேகமாகச் சீரழிந்து வரும் நமது இயற்கையைச் சிறிதளவாவது காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார் என்விரான்மென்டலிஸ்ட் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் (இ.எஃப்.ஐ.) நிறுவனர் அருண். அதற்காகவே அதிவேகச் செயல்திட்டத்தை வகுத்து, 'திட்டம் 100' என்ற பெயரில் தன் குழுவினருடன் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார்.
திட்டம் 100
பிப்ரவரி 25லிருந்து ஜூன் 5 வரையிலான நூறு நாட்களில் ஆர்வலர்களுடன் இணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்காகவே இந்தத் திட்டத்தை ஆரம்பித்ததாகச் சொல்கிறார்அருண். "நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துவது, மரக்கன்று நடுவது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெருக்கூத்துகளை நடத்துவது போன்றவற்றைச் செய்கிறோம். இதுவரை 1,000 பேரைச் சூழலியல் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தியுள்ளோம்" என்கிறார் அவர். சென்னையில் மட்டுமில்லாமல் கோயம்புத்தூர், புதுச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் இத்திட்டம் நடைபெற்றுவருகிறது.
சுத்தமாகும் நீர்நிலைகள்
பல்லுயிர்கள் வாழ ஆதாரமாக இருப்பவை நீர்நிலைகள். நீர்நிலைகள் செழிப்பாக இருந்தால் நமக்கு நேரடியாக நல்ல தண்ணீர் கிடைப்பது மட்டுமில்லாமல், பல உயிர்களுக்கு அது வாழிடமாகவும் விளங்குகிறது. ஆனால் நகர்மயமாக்கம் காரணமாகச் சென்னை போன்ற பெருநகரங்களில் நீர்நிலைகள் அழிக்கப்பட்டுக் கான்கிரீட் கட்டிடங்களாக மாறிப், பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைக் கருத்தில் கொண்டே நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துவதை முக்கியப் பணியாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார் அருண்.
அரசன்கழனி, கீழ்க்கட்டளை ஏரிகளில் இருந்து நீர்நிலை மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்கியது இ.எஃப்.ஐ. மாடம்பாக்கம், முடிச்சூர், நாராயணபுரம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், தாம்பரம் போன்ற பகுதிகளில் இருக்கும் ஏரிகள், குளங்களை மறுசீரமைக்கும் பணிகளைச் செய்துவருகிறார்கள். இ.எஃப்.ஐ சார்பாகத் தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் 34 ஏரிகள் சுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றன.
நீர்நிலைகளை மறுசீரமைப்பதில் முதல் கட்டமாகத் தூர்வாருகிறார்கள். அடுத்ததாக, தூர்வாரிய படிவுகளை வைத்துக் கரையை வலுப்படுத்துகிறார்கள். மூன்றாவதாகக் கரையை உறுதிப்படுத்த ஏரியைச் சுற்றி மரக் கன்றுகளை நடுகிறார்கள். கடைசியாக, ஏரி ஆக்கிரமிக்கப்படுவதையும் மாசுபடுவதையும் தவிர்ப்பதற்கு வேலி அமைக்கிறார்கள்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
நகரங்களில் உள்ள நீர்நிலைகள் காணாமல் போனதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஏரி நிலங்களில் ஆக்கிரமிப்பு, மாநகராட்சி குப்பை கொட்டுதல் போன்றவை அவற்றில் முக்கியமானவை. பல ஏரிகளைச் சீரமைக்கும்போது இந்தப் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பதாகச் சொல்கிறார் அருண். பெரும்பாக்கம் ஏரி சீரமைப்பில் இந்தப் பிரச்சினைகள் அதிகமாக இருந்ததாகக் கூறும்
அருண், "அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளின் கழிவு நீர் ஏரியில் கலக்கிறது. அத்துடன் ஏரியில் இருக்கும் அதிகமான தூர், நில ஆக்கிரமிப்பு, எண்ணெய் கசிவு, சிறு தொழில்நிறுவனங்களின் கழிவுகளும் அதில்தான் கலக்கின்றன" என்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வேலைகளைச் செய்யும்போது முக்கியமாக எதிர்கொள்ளும் சவால் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிய அக்கறையே இல்லாத மக்களின் மனநிலைதான் என்று கூறும் அருண், "அதை மாற்றுவதற்குத்தான் 'திட்டம் 100'-ன் ஒரு பகுதியாகச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த 50 தெருக்கூத்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்" என்கிறார்.
இவர்களுடைய பணிகளில் பெரும்பாலும் ஈடுபடுவது தன்னார்வ மாணவர்களும் பகுதிவாழ் மக்களும்தான். "இ.எஃப்.ஐயின் முதன்மைக் குழுவில் 47 மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சுற்றுச்சூழல் ஆளுமைகளாக உருவாக்குவதே எங்கள் முக்கியக் குறிக்கோள்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் அருண்.
கூகுளைத் துறந்து விருது பெற்றவர்
பலரும் ஒரு பக்கம் வேலை பார்த்துக்கொண்டே, கிடைக்கும் நேரத்தில் சமூக அக்கறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால், உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு என்விரான்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (இ.எஃப்.ஐ.) என்னும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை 2011-ல் தொடங்கினார் அருண் (28).
தன் சுற்றுச்சூழல் ஆர்வத்துக்குத் தூண்டுதலாக இருந்த தாக உலகப் புகழ்பெற்ற வாலில்லாக் குரங்கு ஆராய்ச்சியாளர் ஜேன் குடாலை இவர் குறிப்பிடுகிறார். குடால் இந்தியாவுக்கு ஒரு முறை வருகை தந்தபோது, நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அருணின் டைரியில் பாராட்டுக் குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார். அதை இன்றளவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் அருண், குடாலின் ரூட்ஸ் அண்ட் ஷூட்ஸ் இந்தியப் பிரிவிலும் தன்னார்வச் சேவை புரிந்திருக்கிறார்.
தற்போது சென்னை, ஹைதராபாத், டெல்லி, கோயம் புத்தூர் நகரங்களில் அவர் தொடங்கிய இ.எஃப்.ஐ செயல் பட்டுவருகிறது. தான் உத்வேகம் பெற்றது போலவே, பள்ளி களில் மாணவர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடுவதன் மூலம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பரவலாக்கிவருகிறார் அருண். அவருடைய அமைப்பில் தன்னார்வலர்களாக இணைந்து சேவை செய்யும் பலரும் மாணவர்கள்தான். சென்னை கீழ்க்கட்டளை ஏரியைச் சீரமைத்ததற்காக 2012-ல் மதிப்புமிக்க ரோலக்ஸ் எண்டர்பிரைஸ் விருது (இளம் சாதனையாளர்) அருணுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தொடர்புக்கு: arunoogle@gmail.com, efievents@gmail.com, 9940203871
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago