அறிவியல்: ஆளை வெட்டுமா, ஆப்பிளை வெட்டுமா?

By பாமயன்

அறிவியல் பொதுத்தன்மை கொண்டது என்றும், அதற்கு எந்தச் சார்புத் தன்மையும் கிடையாது என்றும் கூறப்படுகிறது. அறிவியல் விதிகளுக்கு வேண்டுமானால் சார்புத் தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அறிவியல் தொழில்நுட்பங்களுக்குச் சார்புத் தன்மை உள்ளது. குறிப்பாக அறம்சார் அறிவியல் நுட்பங்கள், அறமற்ற அறிவியல்நுட்பங்கள் என்று அதைப் பிரிக்க முடியும். எடுத்துக்காட்டாக, ‘கத்தியைக் கொண்டு ஆளையும் வெட்டலாம் ஆப்பிளையும் வெட்டலாம்’ என்ற சொற்றொடரை அடிக்கடி கேட்டிருப்போம். அதேநேரம் அணுகுண்டை வைத்து எந்த நல்ல செயலைச் செய்துவிட முடியும்? அறிவியலின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு தானே அது.

அணுகுண்டைப் போலக் கட்டுப்பாடற்ற அறிவியல்நுட்பங்கள் இன்றைக்குப் பெருகிவருகின்றன. குறிப்பாக அணுவுக்குள் நடத்தப்படும் ஆய்வுகள், விதையின் மீது நடத்தப்படும் ஆய்வுகள், நோய் தீர்க்கப் போகிறோம் என்று உயிரினங்களின் மீது நடத்தப்படும் ஆய்வுகள், ஏன் புதிய மருந்துகள் என்ற பெயரில் ஏழை நாடுகளின் மீது ‘பணக்கார' நாடுகள் நடத்தும் பரிசோதனைகள், ஆய்வுகள் யாவும் சார்புத்தன்மை கொண்டவை. அது மட்டுமல்லாமல், அவர்களுடைய கைகளை மீறிச் சூழலியலில் கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவையும்கூட. இவற்றைச் செய்வதற்கு அறிவியல் அறிஞன் என்ற முத்திரையை மட்டும் போட்டுக் கொண்டால் போதும் என்று கருதுகின்றனர்.

நவீன சாத்தான்கள்

இந்த நவீன அறிவியலாளர்கள் கண்டுபிடித்த களைகளைக் கொல்வதற்குத் தெளிக்கப்படும் களைக்கொல்லிகள் தொடர்ந்து மண்ணில் இருந்து அகலாமல் தீங்கு விளைவிக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதன் உடன் விளைவாகக் களைக்கொல்லிகளை எதிர்கொள்ளும் திறன்மிக்க மற்ற களைகளையும் இயற்கை உருவாக்கும் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகின்றனர்.

களைகளைப் போலவே அணுவைப் பிளந்து வெளியேற்றும் கதிர்கள் (நியூட்ரினோ உட்பட) தொடர்ந்து சூழலியலில் தனது 'வேலை'யைக் காட்டிக்கொண்டுதான் இருக்கும். யாருடைய கட்டுப்பாட்டிலும் அது இருக்காது. அணு உலையில் இருந்துவரும் கதிரியக்கக் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி அதை மீண்டும் பாதுகாப்பான ஒரு பொருளாக மாற்றும் அறிவியல்நுட்பம் வளரும்வரை, அது மிக ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதுபோலவே நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்கு உட்பட்டு நுண்ணுயிர்களாலோ பிற உயிரியல் முறைகளிலோ சிதைக்கப்பட்டு மாறும் முறை கண்டுபிடிக்கப்படும்வரை, அது மிக மோசமான பொருள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவற்றைப் போலவே பூச்சிக்கொல்லிகளும் களைக்கொல்லிகளும் சூழலியலில் செய்துவரும் நாசவேலைகளை விவசாயத்துக்கான பிரச்சினையாக, சாதாரணமாக மட்டும் புரிந்துகொள்ள முடியாது.

விளையாட்டும் வினையும்

எல்லா அறிவியல்நுட்பங்களையும் மேலை அறிவியல் நுட்பங்கள் என்றும் கீழை அறிவியல் நுட்பங்கள் என்றும் பிரித்தறிய முடியும். ஐரோப்பியர்களுக்கு முன்பே சீனர்கள் வெடிஉப்புகளைக் கண்டறிந்திருந்தாலும், அதை விளையாட்டுக்கு மட்டுமே, வாண வேடிக்கைக்காகப் பயன்படுத்தினர். ஆனால், அதைக் கொலைக் கருவியாக மாற்றியவர்கள் ஐரோப்பியர்களே. நீராவியின் ஆற்றல் கீழை நாடுகளில் உணவு சமைக்கவே பயன்பட்டது. அதை எந்திரங்களில் புகுத்திச் சுரங்கம் தோண்டவும், அதைக் கொண்டு சந்தை பிடித்து உலகைக் கைப்பற்றவும் மாற்றியது ஐரோப்பியர்களே. எனவே, இதில் இரண்டு போக்குகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோலக் கட்டுப்பட்ட அறிவியல்நுட்பங்கள், கட்டுப்படா அறிவியல் நுட்பங்கள் என்றும் பிரித்துப் பார்க்க வேண்டும். இன்னும் தெளிவாகப் புதுப்பிக்கக்கூடிய (renewable) அறிவியல் நுட்பங்கள், புதுப்பிக்க முடியாத (non-renewable) அறிவியல் நுட்பங்கள் என்றும் பிரிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக அறம்சார் அறிவியல்நுட்பங்கள், அறமில்லா அறிவியல்நுட்பங்கள் என்றும் பிரிக்க வேண்டும்.

‘அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய்போல் போற்றாக்கடை'

என்று அறிவியலைத் திருக்குறள் திட்டவட்டமாகப் பிரித்திருக்கிறது. ஆகவே, இவ்வளவு வேறுபாடுகளைக் கொண்ட அறிவியல்நுட்ப உலகத்தை ‘அனைவருக்கும் பொதுவானது அறிவியல்’ என்று மேம்போக்காகப் பேசித் தப்பிக்க முடியாது.

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்