பொதுவாகப் பூச்சிக் கொல்லிகள் பயிர்களில் தெளிக்கப் பயன்படுகின்றவோ இல்லையோ, உயிர்களைக் கொல்ல நிச்சயம் பயன்படுகின்றன. உலகம் முழுவதும் இந்தக் கொடுமை அதிகமாகிவருவதை உலகச் சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆண்டுக்கு மூன்று லட்சம் உழவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக Gunnell & Eddleston- Bulletin of the World Health Organization- Suicide, suicide attempts and pesticides: a major hidden public health problem ஆகியோரின் ஆய்வு குறிப்பிடுகிறது. அத்துடன் ஆசிய, தென்னமெரிக்க நாடுகளில் தற்கொலைகளின் அளவு மிக அதிகமாக உள்ளதையும் அந்த ஆய்வு வெளிக்கொண்டுவந்துள்ளது.
உறவாடுதல் ஆபத்து
பூச்சிக்கொல்லிகளை உட்கொண்டால் சாவு உறுதி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பூச்சிக்கொல்லிகளுடன் உறவாடினாலும் ஆபத்து என்பது நமக்கெல்லாம் புதிய செய்திதான். அதாவது பூச்சிக் கொல்லிகளைத் தொடர்ந்து தெளிப்பதாலும், அதைச் சுவாசிப்பதாலும் ஒரு வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சூழலியல் உடல்நலச் செய்தி என்ற இதழ். ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School report) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பீட்டர் என்ற உழவரின் தற்கொலையைப் பற்றி ஆய்வு செய்து அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இதேபோன்று கேரளத்தில் உள்ள காசர்கோடில் முந்திரித் தோட்டங்களில் தெளித்த எண்டோசல்பான் என்ற கொடிய பூச்சிக்கொல்லியால் ஏற்பட்ட பின்விளைவுகளில் ஒன்றாகத் தற்கொலை தூண்டல் கூறப்பட்டது. ஆனால், அது குறித்த விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை.
அச்சுறுத்தும் நஞ்சு
இதற்குக் காரணமாக இருக்கும் ஆர்கனோபாஸ்பேட் வகைக் கொல்லிகள் குளோரோபைரிபாஸ், மிதைல் பாரத்தியான், மாலத்தியான் போன்ற பல வணிகப் பெயர்களில் விற்பனையாகின்றன.
ஆர்கனோ பாஸ்பேட் வகைப் பூச்சிக்கொல்லிகள் நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றன. இதனால் மனத்தில் ஒரு வகை அழுத்தம் ஏற்படுகிறது. தொடர்ந்து பூச்சிக்கொல்லி தெளிப்புக்கு உள்ளாகும்போது இந்த அழுத்தம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்த வகை பூச்சிக்கொல்லிகளைக் குடிப்பதால் மட்டும்தான் உடலுக்கு ஆபத்து என்று எண்ணிவிடக் கூடாது. இது மனித வாழ்வில் தொடர்ந்து அச்சுறுத்தும் நஞ்சு என்று புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான தேசிய உடல்நலப் பயிற்றகம் (US National Library of Medicine National Institutes of Health) தெரிவிக்கிறது.
எந்தப் பாதுகாப்பும் இன்றி
அது மட்டுமல்லாமல், வேளாண் சமூகத்தில் மட்டுமே அதிகமாகத் தற்கொலைகள் நடப்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. இந்தக் கொல்லிகளைச் சுவாசித்தால் மட்டுமல்ல, தோலின் மீது பட்டாலும் ஆபத்து என்று தயாரிப்பாளர்களே குறிப்பிடுகிறார்கள். நமது நாட்டில் யாரும் முகமூடி அணிந்துகொண்டு பூச்சிக்கொல்லி தெளிப்பது கிடையாது, அது மட்டுமல்ல பூச்சிக்கொல்லிகளை நீருடன் சேர்ந்து கையால் கலக்குகின்றனர்.
இதைவிடக் கொடுமை ஒரு தொழிலாளி சுட்டிக்காட்டிய ஒரு விஷயம். அவர் வயலில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் வேலையை மட்டுமே செய்துவருபவர். ஒருமுறை அவர் கூறும்போது பூச்சிக்கொல்லியை நன்றாக நீரில் கலக்கி, பின்னர் நாக்கில் வைத்துப் பார்த்தால் ‘சுர்ர்' என்று எரிந்தால் அது நல்ல பூச்சிக்கொல்லி என்றார். இவரைப்போல எத்தனை விவசாயிகள் இருக்கிறார்களோ தெரியாது. இப்படிப் பூச்சிக்கொல்லிகள் பற்றி விழிப்புணர்வே இல்லாமல் நமது சூழலில் தெளிக்கப்படும் இந்த நஞ்சுகள், ஒரு கட்டத்தில் நம் அனைவரையும் கொல்லும் ஆலகாலமாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
நின்று கொல்லும்
முதன்முதலில் கண்டறியப்பட்ட தீவிரப் பூச்சிக்கொல்லியான டி.டி.டி. என்பது ஒருவகையான நின்று (persistence) கொல்லும் வகையைச் சார்ந்தது. இது தெளித்த பின்னரும், தெளிக்கப்பட்ட சூழலில் இருந்து நீண்ட நாட்களுக்கு அகலாது. இதனால் நீண்ட நாட்களுக்கு நஞ்சு இருந்துகொண்டே இருக்கும். ரேச்சல் கார்சன் போன்ற அறிவியலாளர்கள் இதை உயிரைக் கொடுத்து எதிர்த்தார்கள். பின்னர் பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டது.
ஆனால், இந்தியாவில் இந்தப் பூச்சிக்கொல்லி, இன்னும் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. இவ்வாறு உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட பல பூச்சிக்கொல்லிகள் இந்தியச் சூழலில் கம்பீரமாக உலா வந்துகொண்டுதான் இருக்கின்றன. நமது அரசின் அலட்சியத்தை எடுத்துக்காட்ட வேறென்ன புதிதாக வேண்டும்?
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago