சமீபத்தில் பாரிஸில் ஒரு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 54 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவரைவிட, அதில் கலந்துகொண்ட ஒருவர் உலகின் கவனத்தை ஈர்த்திருக் கிறார். காரணம், எல்லோரும் சும்மா ஓடும்போது, இவர் மட்டும் தலையில் 20 லிட்டர் தண்ணீரைச் சுமந்துகொண்டு ஓடியதுதான்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் இருந்து வந்திருந்தார் சியாபதோ சானே (43). அவருடைய உடலில், ‘ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு பெண்ணும் ஒரு குடம் நீருக்காகத் தினசரி இந்தத் தூரத்தைக் கடக்கிறார். அந்தத் தூரத்தைக் குறைக்க எங்களுக்கு உதவுங்கள்’ என்று எழுதப்பட்ட அட்டையை நெஞ்சிலும் தண்ணீரைத் தலையிலும் சுமந்துகொண்டு ஓடினார்.
நடையாய் நடந்து
காம்பியா முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை மோசமாக நிலவுகிறது. அசுத்தமான கிணற்றுத் தண்ணீருக்கே பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். குடிக்க, குளிக்க, சமைக்க, துவைக்க, தோட்டச் செடிகளுக்கு நீர் விட எனச் சகலத்துக்கும் நடையாக நடக்க வேண்டும். ஒரு குடம் தண்ணீருக்கு
16 கிலோமீட்டர் தூரம் போய்வர வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை இப்படித் தண்ணீர் எடுத்து வர வேண்டும். தண்ணீருக்காக ஒவ்வொரு பெண்ணும் தினசரி 42 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டிய மோசமான சூழ்நிலை அங்கே நிலவுகிறது.
சியாபதோவின் கிராமத்தில் 300 பேர் வசிக்கிறார்கள். 5 வயதில் தண்ணீர் எடுக்கப் புறப்பட்ட சியாபதோ, இன்றுவரை தன் நடையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அதிகாலையிலிருந்து மாலைவரை தண்ணீர் எடுப்பதே பெரிய வேலை. இதில் ஒழுங்கான சாலை வசதிகளும் இருக்காது. சுட்டெரிக்கும் வெயிலில் உடலும் மனமும் துவண்டுவிடும். வெயில் காலத்திலோ நிலைமை இன்னும் பயங்கரம்.
கரு தங்காது
கிணறு வற்றிவிடும். கிணற்றுக்குள் இறங்கி, ஆழமாகத் தோண்ட வேண்டும். சிறிது சிறிதாக ஊறும் நீரைக் குடத்துக்குள் சேகரிப்பதற்குள் விடிந்துவிடும். இன்னொரு குடம் நீர் எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் கிணற்றைத் தோண்டி, நீர் ஊறி வரும்வரை பொறுமை காக்க வேண்டும். மழை காலத்தில் ஊறும் தண்ணீர் அசுத்தமாக இருக்கும். அசுத்தமான நீரைப் பருகுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இருப்பதில்லை. பல பெண்கள் அடிக்கடி நோயால் வீழ்ந்துவிடுகிறார்கள். அருகில் மருத்துவமனைகள் கிடையாது. அதனால் நோய் குணமாவதும் மிகவும் கடினம்.
ஊட்டச்சத்து இல்லாத பெண்கள் இப்படித் தண்ணீருக்காக நடையாய் நடக்கும்போது, அடிக்கடி கர்ப்பமே கலைந்துவிடுகிறது. அதையும் மீறிப் பிறக்கும் குழந்தைகளுக்குப் போதிய தாய்ப்பால் கொடுக்க முடியாது. தாய் நன்றாகச் சாப்பிட்டு, நிறைய தண்ணீர் அருந்தினால்தான் போதுமான தாய்ப்பால் சுரக்கும். அதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி என்பது பூஜ்ஜியமாகவே இருக்கிறது. ஆறு மாதங்களுக்குள் குழந்தைகள் மரணத்தைச் சந்திக்கும் கொடூரமான சூழல் நிலவுகிறது.
தொண்டையை நனைக்க
’’நாங்கள் சொகுசான வாழ்க்கையைக் கேட்கவில்லை. எங்களுக்கு வேண்டியது எல்லாம் சுத்தமான தண்ணீரும் நடக்கும் தொலைவு குறைய வேண்டும் என்பதும் தான்… கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்காமல், ஆழ்துளைக் குழாய்கள் மூலம் நீர் எடுக்க வேண்டும். நிலையான நீர் ஆதாரத்துக்கு வழி செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமான நிலத்தடி நீரைச் சுரண்டத் தேவையில்லை. நாங்கள் வாழ்வதற்கு உரிய தண்ணீரைக் கொடுத்தால் போதும்.
இன்றைக்குக் கிணறுகளில் பெரும்பாலானவை சிதைந்துவரும் நிலையில் இருக்கின்றன. காம்பியா முழுவதும் 300 தண்ணீர்க் குழாய்களாவது தேவைப்படும். அதற்கு எங்களுக்கு உலக நாடுகளின் உதவி தேவைப்படுகிறது. அதற்காகவே பாரிஸ் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டேன்’’ என்கிறார் சியாபதோ.
காம்பியாவில் ஆழ்துளைக் குழாய்களைப் பதிக்கும் பணியில் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. அப்படி ஒரு தொண்டு நிறுவனத்தின் முயற்சியில் முதல் முறையாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் சியாபதோ.
90 சதவீத உழைப்பு
’’என்னைப் போலவே என் குழந்தைகளும் தண்ணீருக்காக அலைகிறார்கள். அவர்களுடைய 40 வயதிலாவது என் நிலைமை ஏற்படக் கூடாது. ஜாம்பியாவில் வசிக்கும் ஒவ்வொரு குழந்தையின் நலனையும் கருத்தில்கொண்டே இந்தப் போட்டியில் பங்கேற்றேன். போட்டியில் வெற்றி பெறுவது என் நோக்கமில்லை. மாரத்தான் தொலைவு எங்களுக்குச் சர்வசாதாரணம்தான். போட்டிக்காக ஓடும் தூரத்தை, நாங்கள் தினசரிக் கடந்துவருகிறோம் என்பதை வெளிப்படுத்தி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவே இதில் பங்கேற்றேன்’’ என்கிறார் சியாபதோ.
ஆப்பிரிக்காவில் தண்ணீருக்காகவும் விறகுக்காகவும் பெண்களின் 90 சதவிகிதம் உழைப்பு செலவிடப்படுகிறது. ஆப்பிரிக்கப் பெண்கள் ஒவ்வோர் ஆண்டும் 4 ஆயிரம் கோடி மணி நேரத்தைத் தண்ணீரை எடுத்துவருவதற்காக நடக்கிறார்கள். ஆப்பிரிக்கப் பெண்களின் துயரம் தீரும் நாளும், உலக மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும் நாளும் என்றைக்கு வரும்?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago