உலகக் கடலாமை நாள்: மே 23
எந்தக் கடற்கரையில் பெண் கடலாமைக் குஞ்சுகள் பிறந்தனவோ, அவை வளர்ந்த பிறகு முட்டை இடுவதற்காக அதே கடற்கரைக்குத் திரும்பவருவது இயற்கையின் ஆச்சரியங்களில் ஒன்று. மேலும் ஒரு ஆச்சரியமான நிகழ்வு, ஒரே கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கடலாமைகள் முட்டையிடக் கூடுவதுதான். அவை இப்படிக் கூடும்போது ஏற்கெனவே முட்டை இடப்பட்ட இடத்திலேயே புதிதாக முட்டையிடத் தோண்டும் நிலைமை ஏற்படுகிறது என்றால், எத்தனை ஆமைகள் ஓரிடத்தில் கூடியிருக்க வேண்டும்?
இம்மாதிரி ஆயிரக்கணக்கான ஆமைகள் ஓரிடத்தில் கூடுவதை அரிபாடா எனப்படுகிறது. ஸ்பானியச் சொல்லான இதற்கு ‘வருகை' என்று அர்த்தம். டைனோசர் வாழ்ந்த காலத்துக்கு முன்பிருந்து பூவுலகில் கடலாமைகள் வாழ்ந்துவருகின்றன, சங்க இலக்கியத்திலும் கடலாமை பற்றி குறிப்பு இருக்கிறது. ஆனால் இன்றைக்குக் கடலாமைகளின் நிலையோ, அழிவின் விளிம்பில் இருக்கிறது.
இந்தியக் கடல் பகுதியில் பெருமளவில் காணப்படும் ஆமை வகை பங்குனி ஆமை (ஆலிவ் ரிட்லி). இது கடலாமை வகைகளில் அளவில் சிறியது. தமிழகக் கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய இந்தக் கடலாமைகள் வருகின்றன. அதேநேரம் ஒடிசாவில் காஹிர்மாதா கடற்கரை, ருஷிகுல்யா ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் முட்டை இடுவதற்காக இவை லட்சக்கணக்கில் கூடுகின்றன. இயற்கை ஒளி தேடி இனப்பெருக்கக் காலத்தில் கடலாமைகள் வலசை செல்ல ஆரம்பிக்கின்றன. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணித்துக் கரையோரக் கடல் பகுதிகளில் இணைசேர்கின்றன. பிறகு பெண் ஆமைகள் முட்டை இடுவதற்காகப் பெரும்பாலும் இரவில் கடற்கரைக்கு வருகின்றன.
இயற்கை உந்துதலின் மூலம் பாதுகாப்பான கடற்கரையைத் தேர்ந்தெடுத்துத் துடுப்பைப் போன்ற தன் முன் கால்களால் மணலில் தோண்டுகின்றன. குடுவை போன்ற ஒரு குழிக்குள் முட்டை இடுகின்றன. எழுபதில் இருந்து நூற்றி இருபது முட்டைகளை இட்ட பிறகு, மணலைத் தள்ளி மூடிவிட்டுக் கடலுக்குத் திரும்பி விடுகின்றன. அத்துடன் பெண் ஆமையின் வேலை முடிந்தது. முட்டை இடப்பட்ட நாளில் இருந்து நாற்பத்தைந்து நாட்களில் ஆமைக் குஞ்சு பொரிந்து வெளிவரும். ஆமைக் குஞ்சுகள் கடலை அடைவதற்கு ஒளியை நம்பி உள்ளன.
இயற்கையில் கடல் பகுதிதான் நிலப்பகுதியைவிட வெளிச்சமானது என்றால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். செயற்கை வெளிச்சம் இல்லாத கடல் பகுதிதான், உண்மையில் வெளிச்சமான பகுதி. நட்சத்திரங்கள், நிலவின் ஒளி, கடல் நீரில் பிரதிபலிக்கப்படுவதால் அது வெளிச்சமானதாக இருக்கும். இந்த ஒளியால் ஈர்க்கப்பட்டு ஆமைக் குஞ்சுகள் கடலை அடைகின்றன. கடலை அடைந்த பிறகு இயற்கை எதிரிகளிடம் இருந்து தப்பித்து வாழவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் அவை எங்கே, எப்படி வாழ்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிர். இந்தக் காலகட்டத்தை 'தொலைந்த வருடங்கள்' என்றும் கூறுவார்கள். பத்து வருடம் ஆன பிறகு இனப்பெருக்கம் செய்யும் தகுதியை அவை பெறுகின்றன. ஒடிசா உள்ளிட்ட சில பகுதிகளில் ஆயிரக்கணக்கில் ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதால், அவற்றின் எண்ணிக்கை நல்ல நிலையில் இருக்கும் என்று நம்புகிறோம். ஆனால், உலகெங்கிலும் கடல் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
பல வகைகள் அழியும் தருவாயில் உள்ளன. இயற்கையாகவே 1,000 ஆமைக் குஞ்சுகளில், ஒரே ஒரு ஆமை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகிறது. இன்றைய மோசமான சூழ்நிலையில் வளர்ந்த அந்த ஓர் ஆமையும், மனிதர்கள் ஏற்படுத்தும் பன்முகப் பாதிப்புகளால் உயிர் வாழமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. உயிருக்குச் சுருக்கு நாட்டில் கடலாமைகள் அழிவதற்கு முக்கியக் காரணம், பெரிய கப்பல்களில் இயந்திரங்களால் இயக்கப்படும் இழுவலை மற்றும் சுருக்கு வலை மீன்பிடித்தல்தான்.
பல நேரம் வலையில் மீன்களுடன் ஆமைகள், மற்றக் கடல் வாழ் உயிரினங்கள் சிக்குகின்றன. வலை மேலே இழுக்கப்படுவதற்கு முன் பல கடலாமைகள் இறந்துவிடுகின்றன. இதைத் தடுக்க Turtle excluder device - TED எனப்படும் ஆமைகளை விடுவிக்கும் கருவியைப் பொருத்தும் சட்டம் பல நாடுகளில் உள்ளது. விசைப் படகுகளின் முன்விசிறியில் அடிபட்டும், பிளாஸ்டிக் கழிவாலும் பல ஆமைகள் இறக்கின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சு ஆமைகள் நாய்கள், காக்கை போன்றவற்றாலும், சில பகுதிகளில் நரி போன்ற விலங்குகளாலும் கடல் பறவைகளாலும் உணவாகக் கொள்ளப்படுகின்றன.
இவற்றைவிட மனிதர்களால் ஆமைக் குஞ்சுகள் சந்திக்கும் பாதிப்புகள் ஏராளம். முட்டை பொரிந்தவுடன் குஞ்சு ஆமைகள் வெளிச்சத்தைத் தேடிச் செல்லும். இரவில் நிலவு, நட்சத்திரங்களின் ஒளியைக் கடல் பிரதிபலிப்பதால், அது வெளிச்சமாக இருக்கும். ஆனால், கடுமையான செயற்கை ஒளியால் நிலப் பகுதியை வெளிச்சமாக்கிவிட்டோம்.
அத்துடன் கடலுக்கு அருகில் வீடுகள், கேளிக்கை விடுதிகள் அதிகமாகிவிட்டதால் ஆமைக் குஞ்சுகள் இந்த ஒளியால் கவரப்பட்டுக் கடலுக்கு எதிர் திசையில் திக்கு தெரியாமல் சென்று இறந்துவிடுகின்றன. பாதுகாப்பு இயக்கம் இப்படி வெளிச்சம் நிறைந்த பகுதிகளில் பங்குனி ஆமைகள் இடும் முட்டைகளைப் பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து, முட்டை பொரிந்தவுடன் குஞ்சு ஆமைகளைக் கடலில் விடும் சேவையை 28 ஆண்டுகளாகச் சென்னையில் செய்துவருகிறது கடலாமை பாதுகாப்பு மாணவர் அமைப்பு (SSTCN - The Students Sea Turtle Conservation Network).
ஆமை இனப்பெருக்கம் செய்ய வருகைதரும் கடல் பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது. கடலாமை இனப்பெருக்கக் காலத்தில் இழுவலைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்தச் சட்டம் எந்த அளவு பின்பற்றப்படுகிறது என்பது பெரிய கேள்வி. அது மட்டுமல்லாமல் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி முறை, கடுமையான கடல் மாசுபாடு, கடற்கரை ஆக்கிரமிப்புகளால் கடலாமைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமலும், மடிந்தும் வருகின்றன.
இப்படியாக 15 கோடி ஆண்டுகளாக இந்த உலகின் சவால்களை எல்லாம் தாண்டி வாழ்ந்த கடலாமைகள், இன்றைக்கு மனிதர்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகளால் உயிர் வாழ அனுதினமும் போராடிக்கொண்டிருக்கின்றன.
ஆமைகளை காவு வாங்கும் கப்பல்கள்
ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இந்த பருவ காலத்தின் தொடக்கத்தில் கிழக்குக் கடற்கரை பகுதியில் பெசன்ட் நகரில் இருந்து மதுராந்தகம் வரையிலான 100 கி.மீ. தொலைவில் 250 - 300 கடலாமைகள் (பங்குனி ஆமை வகை) இறந்து கரை ஒதுங்கியுள்ளன. "கடந்த 20 ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் அதிக கடலாமைகள் சென்னை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் இந்த நிலைமை மோசமாகியிருக்கிறது" என்கிறார் கடலாமை பாதுகாப்பு மாணவர் அமைப்பைச் சேர்ந்த அருண்.
புத்தாண்டு தினத்தில் மட்டும் 65 கடலாமைகள் சென்னை கடற்கரையில் பதிவு செய்யப்பட்டன. அது மட்டுமல்லாமல் கடலில் நிறைய கடலாமைகள் இறந்து மிதப்பதாகவும் சென்னை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இறக்கும் கடலாமைகளில் 5-6 சதவீதம்தான் கரை ஒதுங்கும் என்பதால், சென்னை கடற்கரையில் இறந்த கடலாமைகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.
தமிழ்நாடு கடல் மீன் கட்டுப்பாட்டுச் சட்டம், 1983-ன்படி கடற்கரையில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு டிராலர் எனப்படும் இழுவலை மீன்பிடி கப்பல்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சட்டம் முறைப்படி அமல்படுத்தப்படாததால்தான் கடலாமை இறப்பு நிகழ்வதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஏனென்றால், ஐனவரி - மார்ச் இடையிலான காலத்தில் இனப்பெருக்கம் செய்யவரும் கடலாமைகள் கடற்கரையில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு உட்பட்ட கடல் பகுதியில்தான் அதிகம் கூடுகின்றன.
கட்டுரையாளர், இயற்கை ஆர்வலர்
தொடர்புக்கு: mcwhale.t@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago