ரோஜாவில் ஊடுபயிராகச் சின்ன வெங்காயம்: 7 கிலோ விதையில் 350 கிலோ உற்பத்தி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

திண்டுக்கல் அருகே ரோஜா செடிகளுக்கு இடையே ஊடுபயிராகச் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து, இயற்கை விவசாயம் மூலம் 7 கிலோ விதையில் 350 கிலோ உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார் விவசாயி மருதமுத்து.

ஊடுபயிர் விவசாயம், நம் முன்னோர் பின்பற்றிய வழக்கம்தான். இரட்டிப்பு வருமானத்தின் தாரக மந்திரமான ஊடுபயிர் விவசாயம், சமீப காலமாகத் தமிழகத்தில் பிரபலமடைந்துவருகிறது. இப்போது என்ன பயிரில், என்ன ஊடுபயிர் சாகுபடி செய்யலாம் என விவசாயிகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

புதிய முயற்சி

திண்டுக்கல் அருகே தவசிமடையில் விவசாயி வி.ஏ.மருதமுத்து, அவரது மனைவி எம்.வாசுகி இருவரும் இயற்கை விவசாயத்தில் 75 சென்ட் நிலத்தில் ரோஜா சாகுபடி செய்துள்ளனர். எந்த முன்னேற்பாடும் இல்லாமல், ரோஜா செடிகளிடையே 35 கிலோ சின்ன வெங்காயத்தையும் நட்டுள்ளனர். தற்போது 70 நாளில், ஊடுபயிர் வெங்காயம் சாகுபடியில், 7 கிலோ விதையில் 350 கிலோ சின்ன வெங்காயம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து மருதமுத்து, வாசுகி ஆகியோர் கூறியதாவது: பொதுவாக ஓசூர், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில்தான் ரோஜா சாகுபடி செய்வார்கள். நம் தோட்டத்திலும் சாகுபடி செய்வோம் என 70 சென்ட் நிலத்தில் இயற்கை முறையில் ரோஜா சாகுபடி செய்தோம். ரோஜா செடிகளுக்கு 4 நாள், 5 நாளுக்கு ஒருமுறை தண்ணீர்விட வேண்டும்.

இந்தத் தண்ணீரில் ஏதாவது ஊடுபயிர் நடலாம் என நினைத்து வெங்காயத்தைப் பயிரிட்டோம். இதுவரை யாரும் ரோஜா செடிகளுக்கு இடையே ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டதில்லை. பரிசோதனை முயற்சியாக, ரோஜா செடிகளுக்கு இடையே 35 கிலோ விதை வெங்காயம் வாங்கிச் சாகுபடி செய்தோம்.

விளைச்சல் அமோகம்

ரோஜாவுக்கு விடும்போது, வெங்காயச் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ந்தது. மாதம் ஒருமுறை ரோஜா செடிகளுக்கு வேப்பம் புண்ணாக்குத் தண்ணீர், கடலைப் புண்ணாக்குத் தண்ணீர் மற்றும் சாணி, கோமயம், நாட்டுச் சர்க்கரை, மாவு உள்ளிட்டவை அடங்கிய ஜீவாமிர்தம் - அமிர்தக் கரைசலை இயற்கை உரமாக இடுவோம்.

அதையே வெங்காயத்துக்கும் உரமாக இட்டோம். வெங்காயத்துக்கு என்று தனிப் பராமரிப்பு இல்லை. கடைசிவரை எந்த நோயும் தாக்கவில்லை. 70 நாளில் வழக்கம்போல வெங்காயம் அறுவடை பருவத்துக்கு வந்துவிட்டது. தற்போது அறுவடை செய்யத் தொடங்கிவிட்டோம்.

சாதாரண சின்ன வெங்காயத்தைவிட, ரோஜாவுக்கு இடையே ஊடுபயிராக நட்ட வெங்காயம் பருமனாக, நல்ல நிறமாக ஏற்றுமதி ரகம் போலக் கிடைத்துள்ளது. 7 கிலோ விதை வெங்காயத்தில், 350 கிலோ வெங்காயம் கிடைத்துள்ளது. இப்போது ரோஜா மொட்டு விட ஆரம்பித்துவிட்டது. வெங்காயத்தால் ரோஜாவுக்கும், ரோஜாவால் வெங்காயத்துக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படவில்லை.

வெங்காயத்துக்கு என்று மாதம் இரண்டு முறை இயற்கை உரமிட்ட வகையில் ரூ. 140 செலவானது. குறைந்த முதலீட்டில் பராமரிப்பு இல்லாத இரட்டிப்பு வருவாய் கிடைத்துள்ளது. வெங்காயத்தை நட்டதும் தெரியவில்லை, அறுவடை செய்ததும் தெரியவில்லை. ரொம்ப எளிமையான விவசாயமாக உள்ளது என்றனர்.

மருதமுத்துவைத் தொடர்புக்கொள்ள: 9787642613

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்