இயற்கை வேளாண்மையே உன்னதம் - மறைக்கப்பட்ட அரசு ஆராய்ச்சிகள்

By பாமயன்

பிப்ரவரி மாதம் வெளிவந்த நூல் ஒன்று மிக முக்கியமான செய்தியை உலகத்துக்கு அறிவித்துள்ளது. அறிவியல் சமுதாயத்தின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் குரலாக அது அமைந்துள்ளது. இதுவரை ஒரே பாடமாக, மந்திரம் ஓதுவதைப்போல ‘இயற்கை வேளாண்மையில் அதிக விளைச்சல் கிடைக்காது, பெருகி வரும் மக்கள்தொகைக்குத் தேவையான உணவை அதனால் உற்பத்தி செய்ய முடியாது, இது முடியாது... அது முடியாது...' என்று ஓதிக்கொண்டிருந்த வேதி வேளாண்மை ஆதரவாளர்களுக்கு இந்தச் செய்தி பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். மனசாட்சியுள்ள, உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ள விரும்பும் அறிவியல்வாணர்கள் இந்த நூலைக் கட்டாயம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இயற்கை உயர்ந்தது

அந்த நூலில் அப்படி என்னதான் உள்ளது? ஒன்றுமில்லை நண்பர்களே! இயற்கைவழி வேளாண்மைதான் அதிக விளைச்சலைத் தருகிறது! அது மட்டுமல்லாமல், மண் வளத்தைக் காக்கிறது, சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறது, சிற்றுயிர்களைக்கூடப் பாதுகாக்கிறது, செலவையும் குறைக்கிறது என்பதுதான் அந்த அரிய உண்மை.

“அட, இதத்தானேய்யா நாங்க இவ்வளவு காலம் கத்தி கத்திச் சொல்லிக்கிட்டிருந்தோம்” என்று நம்ம ஊர் இயற்கைவழி வேளாண்மைப் போராளிகள் சொன்னால், நம்மூர் ‘அறிவாளி’களின் காதுகளில் அது ஏறவே இல்லை. “அறிவியல் சான்று கொடுங்கப்பா...” என்று பல்லவி பாடிக்கொண்டிருப்பார்கள். “அய்யா எங்க வயல்களுக்கு வந்து பாருங்கய்யா...” என்றால், பாவம் அவர்களால் வெயிலில் அலைய முடியாது. அதைத் தவிர இன்னொரு நொண்டிச் சாக்கும் உண்டு, அது "நேரமில்லை...".

எல்லாப் பக்கமும் கேள்விகள்

‘மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி' என்பது எங்களைப் போன்றவர்களுக்குப் பொருந்தும். ரசாயன உரப் போதையில் விழுந்து கிடக்கும் மண்ணை மீட்க வேண்டி உழவர்களிடம் பேசி அவர்களை மாற்ற வேண்டும், மறுபுறம் இயற்கை வேளாண்மையை வன்மையாகவும், வன்மமாகவும் மறுக்கும் பன்னாட்டு நிறுவன ஆதரவு ‘விஞ்ஞானி'களிடம் சண்டைபோட்டு உண்மையை நிறுவ வேண்டும். அது மட்டுமல்லாது மக்களை நேசிக்கும் அறிஞர்கள் பலர் எப்போது பார்த்தாலும், ‘அறிவியல் ஆதாரம் இருக்கிறதா' என்று அடம்பிடிப்பதையும் நிறைவு செய்ய வேண்டும்.

இந்த அறிவாளிகளிடம் வாதிட, அவர்களுடைய பாணியிலேயே பேசும் சில மக்கள் அறிவியல் அறிஞர்கள் எங்களைப் போன்றவர்களுக்கு உதவுகின்றனர். விடுதலை பெற்ற இந்தியாவில் உழவர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் போலத்தானே நடத்தப்படுகிறார்கள்.

நினைத்ததும் நடந்ததும்

அதனால் உழவர்களின் உண்மையான நண்பர்களே பெரு முயற்சி எடுத்து ஒரு தொகுப்பைக் கொண்டுவந்து, கேள்வி கேட்கும் மேன்மை தாங்கியவர்களின் முன்வைத்துள்ளனர். இதையாவது படியுங்கள், அதற்குப் பிறகாவது மனம் மாறுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ளவை இயற்கை உழவர்கள் தாங்களே உருவாக்கிக்கொண்ட தரவுகள் அல்ல. இவை அனைத்தும் அரசுப் பண்ணைகளில், அதை நடத்துபவர்களே செய்த ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள். அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று!

நல்ல முடிவுகள்

கிடைத்த முடிவு எதிர்பார்த்ததைவிட நல்லதாக இருக்கும்போது, அதை மக்கள் முன் வெளியிட்டு நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டியதுதானே; ரசாயன உரங்களுக்கான மூலப்பொருட்களுக்குத் தரும் அந்நியச் செலாவணியையாவது மிச்சம் பண்ணலாமே என்று நீங்கள் அப்பாவித்தனமாகக் கேட்பது புரிகிறது. ஆனால், கேட்க வேண்டிய காதுகள், கேளாச் செவிகளாகிவிட்டன.

இந்தப் பின்னணியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க இயற்கை வேளாண்மைப் போராளி கவிதா குருகந்தி, சென்னையைச் சேர்ந்த அனந்து போன்ற செயல்பாட்டாளர்களின் உதவியுடன் இந்த ஆராய்ச்சிகளைக் கண்டறிந்து, நூலாக்கி உலகச் சமூகத்தின் முன் வைத்துவிட்டனர். இது தனி ஒருவர் எழுதியதல்ல, தொகுப்பு நூல். நூலின் தலைப்பு - Ecological Agriculture in India scientific evidence on positive impacts and successes (இந்தியாவில் திணையியல் வேளாண்மை: வெற்றியும், நல்விளைவுகளுக்குமான சான்றாதாரங்கள்)

ஒப்புதல் வாக்குமூலம்

ஆஷா (ASHA) என்ற அமைப்பின் சார்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இருநூற்று முப்பத்தைந்து பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு முழுமையும் முதுநிலை ஆய்வு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் எழுதிய ஆராய்ச்சி அறிக்கைகள்.

இந்த அறிக்கைகளில் பலவும் பசுமையைப் புரட்சியை ஆதரித்துத்தான் தொடங்குகின்றன. ஏனென்றால், இந்த ஆய்வாளர்களின் வழிகாட்டிகள் பெரும்பாலும் பசுமைப் புரட்சியின் ஆதரவாளர்களே. அப்படி இருந்தும் வேறு வழியில்லாமல், அவர்களே உண்மையை விளக்கியுள்ளனர். எம்.எஸ். சுவாமிநாதனே பசுமைப்புரட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்ட வரிகளும் இப்புத்தகத்தில் உள்ளன.

(The green revolution of the 1960s and 1970s which resulted in dramatic yield increases in the developing Asian countries is now showing signs of fatigue in productivity gains. - Kesavan PC and MS Swaminathan, page 214)

இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் முனைவர் பட்டத்துக்குரிய ஆவணங்கள். தேசிய வேளாண்மை ஆராய்ச்சி முறைமை மூலமாகவும் (NARS - National Agricultural Research System), மற்ற வகைகளிலும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் மக்கள் மன்றத்தில், குறிப்பாக உழவர்களுக்கான விரிவாக்கப் பணிகளில் கொண்டு செல்லப்படவே இல்லை.

- கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்